ரேஷன் அரிசி ஒதுக்கீடு முறையை மாற்றக்கூடாது! போராட்டம் நடத்தி வலியுறுத்தல்
ரேஷன் அரிசி ஒதுக்கீடு முறையை மாற்றக்கூடாது! போராட்டம் நடத்தி வலியுறுத்தல்
UPDATED : ஆக 10, 2026 06:36 PM
ADDED : ஆக 10, 2026 06:34 PM

- நிருபர் குழு -
கோவை மாவட்டம் சி.ஐ.டி.யு., அகில இந்திய விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மறியல் போராட்டம், பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே நடந்தது. மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் பட்டீஸ்வரமூர்த்தி, விவசாய சங்க நிர்வாகிகள் பழனிச்சாமி, ஸ்டாலின் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு. சரவணன், டாஸ்மாக் சங்க நிர்வாகி மாயவன், நிர்வாகி பரமசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதில், அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்களில் ஒப்பந்த முறையை ஒழித்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைககு சமஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சட்ட, சமூக பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய வேலை உறுதி திட்டத்தை நகராட்சிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு திருத்த சட்டத்தை துவங்கி ரேஷன் கார்டுக்கு மாதம், 35 கிலோ அரிசி வழங்குவதை, நபர் ஒன்றுக்கு, ஏழு கிலோ என மாற்றக்கூடாது. பொது வினியோக திட்டத்தை பலப்படுத்த வேண்டும்.
பெட்ரோல், டீசல், சமையல் காஸ் மற்றும் அத்தியவாசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மறியலில் ஈடுபட்ட, 37 பெண்கள் உள்ளிட்ட, 96 பேரை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை தொழிலாளர் தொகுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் உடுமலை மற்றும் மடத்துக்குளத்தில், சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.
உடுமலை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்துக்கு, சி.ஐ.டி.யு., ஒருங்கிணைப்புகுழு அமைப்பாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
மத்திய அரசு தொழிலாளர் தொகுப்பு சட்டம் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு, பாதிப்பு ஏற்படுத்தும் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்ட பிறகு, தபால் நிலையத்தை முற்றுகையிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
மா.கம்யூ., மாவட்டக்குழு உறுப்பினர்கள் பஞ்சலிங்கம், சசிகலா, தண்டபாணி, சி.ஐ.டி.யு., மாவட்ட துணை செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மடத்துக்குளத்தில் நடந்த போராட்டத்துக்கு, சி.ஐ.டி.யு., மடத்துக்குளம் தாலுகா செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார்.
விவசாய சங்கத்தின் மாவட்டத்தலைவர் மதுசூதனன், தாலுகா செயலாளர் வீரப்பன், மா,கம்யூ., தாலுகா செயலாளர் வடிவேல் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
