ADDED : மார் 10, 2024 11:15 PM
அன்னூர்;தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின், கோவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் பால்ராஜ், பொருளாளர் துரைசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை :
கடந்த அக்டோபரில் நடந்த பேச்சுவார்த்தையில் எங்களது 26 அம்ச கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக அரசு அறிவித்தது. இதையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றோம். ஆனால் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
எனவே சங்கத்தின் மாநில குழு முடிவின்படி, 11ம் தேதி (இன்று) ஒரு நாள் கோவை மாவட்டத்தில் உள்ள 146 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், அவற்றின் கீழ் செயல்படும் 700 ரேஷன் கடைகளும், இவற்றில் பணியாற்றும் 980 ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அவற்றின் கீழ் உள்ள பகுதி நேர, முழு நேர ரேஷன் கடைகள் 11ம் தேதி செயல்படாது. 11ம் தேதி காலை 10:00 மணிக்கு, கோவை, செஞ்சிலுவை சங்கம் முன்பு 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதற்குப் பிறகும் அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
