/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை உருவாக்கத்தில் எலிகளின் பங்கும் உண்டு!
/
கோவை உருவாக்கத்தில் எலிகளின் பங்கும் உண்டு!
ADDED : நவ 17, 2025 01:44 AM
கோவையின் இதயத்தில் இன்று அழகாக அமைந்துள்ள ஆர்.எஸ்.புரம், ராம்நகர், டாடாபாத், கோபாலபுரம், காந்திபுரம் போன்ற பகுதிகள், இவை அனைத்தும் சின்னஞ்சிறு எலிகள் உருவாக்கிய ஊர்கள் என்றால், நீங்கள் நம்புவீர்களா?
1903ம் ஆண்டில், பம்பாயிலிருந்து கோவைக்கு பரவிய 'பிளேக்' வியாதி, நகரத்தை பயமுறுத்தியது. வீடுகளில் எங்காவது ஒரு எலி இறந்தாலே, அது அந்த குடும்பத்தின் உயிர்கொல்லியாக மாறியது.
சிலர் மாரியம்மன் கோயில்களை எழுப்பி, தெய்வத்தின் அருளை நாடினர். அப்படி எழுப்பப்பட்ட கோயில்களில் ஒன்றுதான், பாப்பநாயக்கன்பாளையம் மகளிர் பாலிடெக்னிக்கின் கிழக்குப்புறம் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில்'.
தடுப்பூசியால், நோய் கட்டுக்குள் வந்தது. இதையடுத்து, நகரசபை பிளேக்கின் மூலக்காரணமான சுகாதாரமின்மையை ஒழிக்க, நகரசபை தீவிரமான பணிகளை மேற்கொண்டது. நெருக்கமான, நாற்றமிக்க குடியிருப்பு பகுதிகள் இடிக்கப்பட்டு, மக்கள் புதிய வாழ்விடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
அவ்வாறு உருவாக்கப்பட்ட பகுதிகளே, கெம்பட்டி காலனி, தேவாங்கப் பேட்டை உட்பட சில. அதைத் தொடர்ந்து, 1911-ல் ராம்நகர் அக்ரஹாரம் அமைக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் ரோடு-தடாகம் ரோடு இடையே இருந்த, 350 ஏக்கர் தோட்ட நிலத்தை வாங்கி, நகரசபை விசாலமான மனையிடங்களாகப் பிரித்து வழங்கியது. அதுவே இன்று, ஆர்.எஸ்.புரம் என்ற ரத்தின சபாபதி புரம்.
இதனோடு, காந்திபுரம், டாடாபாத், ஸ்ரீனிவாசபுரம், கோபாலபுரம் உட்பட பகுதிகளும் முறையாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. இவை அனைத்தும் இன்று கோவையின் பெருமைமிக்க, அழகான, வசதியான குடியிருப்புப் பகுதிகளாக திகழ்கின்றன.
ஆச்சரியம் என்ன தெரியுமா? இந்த நகர அழகுக்கு அடிப்படை காரணம் அந்தக் காலத்து எலிகளே! பிளேக் என்னும் பேராபத்திலிருந்து சுகாதாரமிக்க நகரத்துக்கான பயணத்தை துவக்க, கோவை மேற்கொண்ட முயற்சியன்றி வேறென்ன!

