/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்றல் திறன் மதிப்பிட மீண்டும் ஆய்வு; மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
/
கற்றல் திறன் மதிப்பிட மீண்டும் ஆய்வு; மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
கற்றல் திறன் மதிப்பிட மீண்டும் ஆய்வு; மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
கற்றல் திறன் மதிப்பிட மீண்டும் ஆய்வு; மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
ADDED : ஜூலை 14, 2025 11:17 PM
கோவை; கோவை மாவட்ட அரசு பள்ளி மாணவர்களிடம், மேற்கொள்ளப்பட்ட கற்றல் திறன் அடைவு மதிப்பீடுகள் சரியானதா என்பதை உறுதி செய்யும் நோக்கில், அவர்களின் திறன்கள் மீண்டும் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
பள்ளிக் கல்வித் துறை சார்பில், கடந்த ஜூன் மாதம், அரசு பள்ளிகளில் 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் மாணவர்களின் கற்றல் திறன்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
அதன் அடிப்படையில், மாணவர்கள் 'ஏ', 'பி', 'சி', 'டி' என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டனர். (ஏ - நன்கு, பி - ஒரளவுக்கு, சி - சராசரி, டி - மெல்லக் கற்கும் மாணவர்கள்).
இப்போது, அந்த மதிப்பீட்டில், 'ஏ' மற்றும் 'பி' பிரிவுகளில் சேர்ந்த மாணவர்களுக்கு மீண்டும் கற்றல் சோதனை நடத்தப்படுகிறது. மாணவர்களிடம், 5 பாடப்பகுதிகளில் தலா 10 கேள்விகள் கொண்ட 50 வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கி, அவர்களின் கற்றல் திறன் சோதிக்கப்படுகிறது.
இது, மாணவர்களின் புரிந்து படிக்கும் திறன் எவ்வளவு என்பதைப் பரிசோதிப்பதோடு, முன்பு ஆசிரியர்கள் மேற்கொண்ட மதிப்பீடு சரியாக இருந்ததா என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், ஆரம்பக்கட்ட மதிப்பீட்டில், 'ஏ' மற்றும் 'பி' பிரிவில் இருந்த சில மாணவர்கள் மெல்லக் கற்கும் நிலையில் இருப்பதும், தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மொத்தமாக 106 கிளஸ்டர்களாக பிரித்து, மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளோம். முதற்கட்டமாக கிணத்துக்கடவு வட்டாரத்தில் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவர்களிடம் மேற்கொண்ட மதிப்பீட்டில், அவர்கள் புரிந்து படிக்கும் திறனில் குறைபாடு காணப்பட்டது.
அதேபோல், 5ம் வகுப்பில் ஆங்கில வழி கல்வி பெறும் மாணவர்களில் தமிழ் மொழித் திறனில் குறைபாடு உள்ளதோடு, அறிவியல் பாடத்திலுள்ள வார்த்தைகளை புரிந்து கொள்ளவும் சிரமம் இருக்கிறது. இதனை சரி செய்யும் வகையில், பாடம் கற்பிக்கும் முறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.