/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுஅறிவை வளர்க்க நாளிதழ்கள் படியுங்க! போட்டித்தேர்வு எழுதுவோருக்கு அறிவுரை
/
பொதுஅறிவை வளர்க்க நாளிதழ்கள் படியுங்க! போட்டித்தேர்வு எழுதுவோருக்கு அறிவுரை
பொதுஅறிவை வளர்க்க நாளிதழ்கள் படியுங்க! போட்டித்தேர்வு எழுதுவோருக்கு அறிவுரை
பொதுஅறிவை வளர்க்க நாளிதழ்கள் படியுங்க! போட்டித்தேர்வு எழுதுவோருக்கு அறிவுரை
ADDED : செப் 27, 2024 11:11 PM

பொள்ளாச்சி: 'தினமும் நாளிதழ்களை படிப்பதால், பொது அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்,' என போட்டித்தேர்வு எழுதுவோருக்கு அறிவுரை வழங்கினார்.
பொள்ளாச்சி நகராட்சி நுாலகம் மற்றும் அறிவுசார் மையம், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே செயல்படுகிறது. இங்கு போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், கம்ப்யூட்டர்களும் உள்ளன. இதை பயன்படுத்தி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், அறிவுசார் மையத்தை ஆய்வு செய்த நகராட்சி கமிஷனர் கணேசன், புன்செய் புளியம்பட்டி கமிஷனர் (பயிற்சி) கருணாம்பாள் ஆகியோர், போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
கமிஷனர் (பயிற்சி) பேசியதாவது:
நாங்கள் படிக்கும் போதெல்லாம், நுாலகங்களில் போதுமான வசதியில்லை. ஆனால் தற்போது, அறிவு சார் மையங்கள் அமைக்கப்பட்டு தேவையான தகவல்கள் கிடைக்க அரசு வழிவகை செய்துள்ளது.
போட்டித்தேர்வில் வெற்றி பெற்றாலும், பணி பெற பணம் கொடுக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். வெற்றி பெற்றாலே நமக்கான பதவி கிடைக்கிறது.தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்ள படித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். தேவைப்படும் நேரத்தில் பேராசிரியர்கள், ஆசிரியர்களுடன் சந்தேகங்களை கேட்டறிந்து தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு வழிகாட்டுதல் அவசியமாக இருந்தால் நம்மால் வெற்றி பெற முடியும்.
அரசு தேர்வு எழுதினாலும் கிடைக்கப் போவதில்லை என எதிர்மறையான கருத்துக்களை, மற்றவர்கள் கூறினாலும் அதை பொருட்படுத்தாமல் நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் பேசியதாவது:
நாம் வாழ்வில், ஜீரோவில் இருந்து தான் துவங்குகிறோம். விடா முயற்சி, கடின உழைப்பு போன்றவற்றால் சாதனையாளராக வளம் வர முடியும். மற்றவர்களுடன் கலந்துரையாடும் போது, நமக்கு புதுவிதமான தகவல்கள் கிடைக்கும். காலத்தை வீணடிக்க கூடாது. காலத்தின் அவசியத்தை உணர்ந்து படிக்க வேண்டும்.
நாளிதழ்களை தினமும் படிக்க வேண்டும். அதில் நமக்கு தேவையான நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. நாட்டு நடப்புகளை பற்றி தெரிந்து கொள்வதுடன், பொதுஅறிவுத்தேடலுக்கான தகவல்களும் நாளிதழ்களில் அடங்கியுள்ளன.
போட்டித்தேர்வுக்கு தயாராகுவோர், புத்தகங்களை படிப்பது போன்று, நாளிதழ்களை படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
நான் தினமும், வழக்கமான பணிகளோடு, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வு எழுதுவோர்களை சந்திக்கிறோம். அவர்கள் தான் நாட்டின் வருங்காலம். அதிகாரிகளாக, நாட்டின் உயர் பதவிகளுக்கு வரக்கூடியவர்களாக உள்ளனர். அவர்களை, சந்தித்து, விதைகளை துாவினால் மாற்றம் வரும் என்ற உணர்வோடு தான் சந்திக்கிறேன்.
இவ்வாறு, பேசினார்.