/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனமழையை எதிர்கொள்ள தயார்! கோவை கலெக்டர் உறுதி
/
கனமழையை எதிர்கொள்ள தயார்! கோவை கலெக்டர் உறுதி
ADDED : அக் 24, 2024 06:29 AM
பொள்ளாச்சி: ''கோவை மாவட்டத்தில் அதிக மழை பெய்தாலும் எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகராட்சியில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் ஆய்வு செய்தார்.
அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பல்வேறு இடங்களில், 8 முதல், 9 செ.மீ., வரை மழை பெய்தது. காரமடையில் சில பகுதிகளில், 10 செ.மீ., மழை வரை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் எந்த பகுதியிலும் பெரிதாக பாதிப்புகள் இல்லை. மழை பெய்யும் நேரத்தில் மட்டுமே தண்ணீர் வரத்து இருந்தது; மழை நின்றதும் மழைநீர் வடிந்தது.
கோவை மாநகரத்தை பொறுத்தவரை, மூன்று செ.மீ.,க்கு மேல் மழை பெய்தாலே பல்வேறு சுரங்கப்பாதை பயன்படுத்த முடியாமல் இருக்கும். இதனால், மிகப்பெரிய போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 8 - 9 செ.மீ., மழை பெய்தும், எந்த சுரங்கப்பாதையும் அடைக்கவில்லை. புது தொழில்நுட்பம் பயன்படுத்தி தண்ணீர் மாற்றிவிடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு மழையின் போது ஏற்பட்ட தண்ணீர் அனைத்தும் முழுவதும் அகற்றப்பட்டது.
மேலும், ஊரகப்பகுதியில் மழையால் பாதிப்பு உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. எங்காவது தண்ணீர் ஊருக்குள் புகுந்து விட்டால், அங்கிருப்பவர்களை மீட்டு தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இருகூர் பேரூராட்சியில் மட்டும், 30 வீட்டுக்குள் ஒரு அடி தண்ணீர் சென்றதாக தகவல் வந்தவுடன், இரவோடு, இரவாக அங்குள்ள மக்களை மாற்று இடத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததால், நீர் உடனடியாக வடிந்து விட்டது.
மீண்டும் அதிகளவு மழை பெய்தாலும் எதிர்கொள்ளும் அளவுக்கு, தயார் நிலையில் வைத்துள்ளோம். கோவை மாவட்டத்தில் மாலை, இரவு நேரங்களில் தான் மழை பெய்கிறது. அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.