தோல்வியடைந்த இடத்தில் வெற்றியை பதிவு செய்யுங்கள்; உதயநிதி பேச்சு
தோல்வியடைந்த இடத்தில் வெற்றியை பதிவு செய்யுங்கள்; உதயநிதி பேச்சு
UPDATED : ஏப் 17, 2026 08:56 PM
ADDED : ஏப் 17, 2026 08:35 PM

கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி, வடக்கில் போட்டியிடும் செந்தமிழ் செல்வன் ஆகியோரை ஆதரித்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி, காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டில் நேற்று பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது:
தி.மு.க. வினரின் எழுச்சியை பார்க்கும்போது, கோவையில் வெற்றி உறுதி என தெரிகிறது. கடந்த முறை பிரசாரத்துக்கு வந்திருந்தேன். வெற்றியை தரவில்லை. இம்முறை 10க்கு 10 வெற்றி பெற வேண்டும்.
அ.தி.மு.க.வினரும், பா.ஜ.வினரும் கோவையை அவர்களின் கோட்டை என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இது தி.மு.க. கோட்டை என செந்தில்பாலாஜி ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார். செந்தில்பாலாஜிக்கு கரூர் பிறந்த வீடாக இருந்தாலும், கோவை புகுந்த வீடு. பிறந்த வீட்டை போல் புகுந்த வீட்டையும் பார்த்துக் கொள்வார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கோவை பெரிய கடை வீதி, கிராஸ்கட் ரோட்டில் வணிக வளாகம் மற்றும் மல்டிலெவல் பார்க்கிங் கட்டப்படும். புலியகுளம், அம்மன்குளம், கல்லுக்குழி, காந்தி நகர், ஓம்சக்தி நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்கப்படும்.
தெற்கு, வடக்கு தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் 2வது பட்டனில் உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டளிக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை அன்று முதலிடத்தில் இரு வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும்.
கோவையில் மெட்ரோ திட்டம், கல்விக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டோம்; கொடுக்கவில்லை. கடந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கென எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. தமிழகம் என்கிற பெயரே இல்லை. அதனால், இந்த தேர்தலில் டில்லி அணியை தோற்கடிக்க வேண்டும். பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களை மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும். என்னுடைய தொகுதி வெற்றியை விட, கோவையின் வெற்றி முக்கியம். எதிர்த்து போட்டியிடுவோர் டெபாசிட் இழக்க வேண்டும். தோல்வி அடைந்த இடத்தில் வெற்றியை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
