செம்மொழி பூங்காவில் ஜப்பான், ரஷ்யா தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு நிலையம்
செம்மொழி பூங்காவில் ஜப்பான், ரஷ்யா தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு நிலையம்
ADDED : மே 29, 2026 05:47 AM

கோவை: கோவை செம்மொழி பூங்காவில் ஜப்பான், ரஷ்யா, தொழில்நுட்பத்தில் மாடல் சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ளது.இதற்காக, உக்கடத்தில் இருந்து தினசரி 10 லட்சம் லிட்டர் கழிவு நீரை செம்மொழி பூங்காவுக்கு கொண்டு வர இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தினசரி 5 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து செடி, மரங்களுக்கு பாய்ச்ச திட்டமிடப்பட்டுள்ளது.
நீர்வள ஆதாரத்துறை முன்னாள் தலைமை பொறியாளரும், திட்டத்தின் வடிவமைப்பாளருமான இளங்கோவன் கூறியதாவது:
ஜப்பானில் எரிமலை பாறை துகள்களில் ஜிங்க், ஜியோ லைட், நுண்ணுயிர்கள் மூலம் 'இகோ பயோ பிளாக்' என்கிற கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இதைத்தான் இங்கு பயன்படுத்தவுள்ளோம். இந்த கற்களில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. தற்போது மயக்க நிலையில் உள்ள இந்த நுண்ணுயிரிகள் தண்ணீரில் போட்டவுடன் விழித்துவிடும்.
இது தண்ணீரில் உள்ள மாசுவை கட்டுப்படுத்தும். இதை 'ரியாக்டர்' என்றும் சொல்லுவோம். இது, துகள் மற்றும் திரவ நிலையிலும் கிடைக்கிறது. அவற்றை ஒவ்வொரு வாரமும் புதிதாக செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இந்த கற்களை ஒருமுறை தண்ணீரில் இறக்கினால் 12 ஆண்டுகள் வேலை செய்யும். அதற்கு பிறகு கற்களை மாற்றினால் போதும். ஊட்டி ஏரி, திருப்பூர் நஞ்சராயன் குளம், சேலம் மாநகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இதுதான் பயன்படுத்தப்படுகிறது. இதை பயன்படுத்துவதால் மின்சாரம் மிச்சமாகிறது.
இது தவிர 'ஹைப்போகுளோரஸ்' எனப்படும் ரஷ்ய நாட்டின் கிருமி நாசினியை கழிவு நீரில் கலக்க திட்டமிட்டுள்ளோம். இது 6 மாதங்கள் சிறப்பாக பணியாற்றி கிருமிகளை அழிக்கும். மலர்கள் பெரிதாக பூக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
