/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைகளை கட்டுப்படுத்த தயக்கம்: நகராட்சி அதிகாரிகளால் அதிருப்தி
/
கால்நடைகளை கட்டுப்படுத்த தயக்கம்: நகராட்சி அதிகாரிகளால் அதிருப்தி
கால்நடைகளை கட்டுப்படுத்த தயக்கம்: நகராட்சி அதிகாரிகளால் அதிருப்தி
கால்நடைகளை கட்டுப்படுத்த தயக்கம்: நகராட்சி அதிகாரிகளால் அதிருப்தி
ADDED : நவ 05, 2025 08:08 PM

வால்பாறை: கால்நடைகளை கட்டுப்படுத்துவதில் நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால், வால்பாறை மக்கள் கவலையடைந்துள்ளனர்.
சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், சமீப காலமாக கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பகல் நேரத்தில் ரோட்டில் உலா வரும் கால்நடைகளால், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும், கால்நடைகளின் உரிமையாளர்கள் நகராட்சியின் உத்தரவை கடைபிடிப்பதில்லை.
பொதுமக்கள் கூறியதாவது:
சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், ஏற்கனவே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளாலும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் மக்கள் ரோட்டில் நடக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், மீண்டும் கால்நடைகள் நகரில் உலா வரத்துவங்கியுள்ளன. கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால், கால்நடை நடமாட்டத்தால், குழந்தைகள் முதல் முதியவர் வரை சிரமப்படுகின்றனர். எனவே ரோட்டில் சுற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில், ரோட்டில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கால்நடைகளை ரோட்டில் நடமாடவிடக்கூடாது என, அவற்றின் உரிமையாளர்களுக்கு பல முறை எச்சரிக்கபட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பல முறை கால்நடைகளை பிடித்து அபராதமும் விதிக்கப்பட்டது. எனவே, கால்நடைகளை சொந்த பாதுகாப்பில் வளர்க்க வேண்டும். ரோட்டில் கால்நடைகள் நடமாடினால், உடனடியாக பிடித்து, கோசாலைக்கு அனுப்பப்படும். இதில் எந்தவித பாரபட்சமும் காட்டப்படமாட்டாது.
இவ்வாறு, கூறினர்.

