/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒன்றை மட்டுமே நம்பி இருந்தால் பலனில்லை; கோவையில் துணை ஜனாதிபதி சிபிஆர் உறுதி
/
ஒன்றை மட்டுமே நம்பி இருந்தால் பலனில்லை; கோவையில் துணை ஜனாதிபதி சிபிஆர் உறுதி
ஒன்றை மட்டுமே நம்பி இருந்தால் பலனில்லை; கோவையில் துணை ஜனாதிபதி சிபிஆர் உறுதி
ஒன்றை மட்டுமே நம்பி இருந்தால் பலனில்லை; கோவையில் துணை ஜனாதிபதி சிபிஆர் உறுதி
ADDED : அக் 29, 2025 06:51 AM
கோவை: “அடையவே முடியாத இலக்கு என்று எதுவும் இல்லை. தர்மமும் உண்மையும் நம்மிடம் இருக்கும்போது, அர்ப்பணிப்பு உணர்வோடு நம் அணுகுமுறை இருந்தால் எதுவும் சாத்தியமே” என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக சி.பி.ஆர் நேற்று கோவை வந்தார். அவருக்கு கொடிசியா, இந்திய தொழில்வர்த்தக சபை, சைமா, சீமா, ஐ.ஐ.எப். உள்ளிட்ட தொழில் அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா, கொடிசியா வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும், முதலில் தமிழகத்துக்கு தான் வர வேண்டும் என நினைத்தேன். ஆனால், செஷல்ஸ் நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்கும் விழாவில் பங்கேற்க சென்று வருமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். எனவே, இன்று தான் கோவைக்கு வந்துள்ளேன். மரபுகளின் படி, மாநில தலைநகருக்குத்தான் முதலில் வர வேண்டும். ஆனால், கோவை மண் என்னை இங்கே இழுத்து வந்துள்ளது.
இந்த மண்ணில் இருந்துதான் எனது பொதுவாழ்க்கை பயணம் வெற்றிகரமாக தொடங்கியது. வெற்றி, தோல்வி மாறி மாறித்தான் வரும். இரண்டையும் ஒரு மனதோடு ஏற்பவர்களுக்கு இறுதியில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். துணை ஜனாதிபதி பதவியை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு, தமிழகத்துக்கு, கோவை மக்களுக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.
கோவை என்றால் கடின உழைப்பு, விருந்தோம்பல் என்ற இரு குணங்கள் நினைவுக்கு வரும். தொழில் நலன், தொழிலாளர் நலன் என இரண்டையும் உணர்ந்த நகரம் கோவை. இவ்விஷயத்தில் நாட்டுக்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. வரும் 2047ல் வலிமையான வளர்ந்த பாரதம் என்ற மகத்தான இலக்கை பிரதமர் மோடி நிர்ணயித்துள்ளார். நாடு உயர்ந்தால்தான் நாம் உயர முடியும்.
தனிநபரின் உயர்வு என்பது சமூகத்தின் உயர்வுக்கு பயன்பட வேண்டும். ஒரு மாநில வளர்ச்சி, பிற மாநில வளர்ச்சிக்கும் உதவ வேண்டும். விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த பல பொருளாதாரங்கள் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. எனவே, தொழிலும் விவசாயமும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட்டு வளர்ந்தால் தான் நாடு உண்மையான வளர்ச்சியை அடையும்.
கயிறு வாரிய தலைவராக பிரதமர் மோடி என்னை நியமித்ததற்கு நன்றி கூறியபோது, 'நன்றி வேண்டாம்; சாதித்துக்காட்டு' என்றார். தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதியை ரூ.652 கோடியில் இருந்து மூன்றாண்டுகளில் ரூ.1782 கோடியாக உயர்த்திக் காட்டினேன். அவராகவே ஓராண்டுக்கு என் பதவியை நீட்டித்து தந்தார் மோடி. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் உதாரணம். இப்படி ஒரு தலைவன் வாய்த்தால்தான் நாடு உன்னத நிலையை அடையும்.
அடையவே முடியாத இலக்கு என்று எதுவும் இல்லை. தர்மமும் உண்மையும் நம்மிடம் இருக்கும்போது, அர்ப்பணிப்பு உணர்வோடு நம் அணுகுமுறை இருந்தால் எதுவும் சாத்தியமே. எது எப்போது நடக்க வேண்டுமோ அது அப்போது நடக்கும் என்பதுதான் கடவுளின் சித்தாந்தம். பல முறை நாம் கடுமையாக உழைக்கிறோம். வெற்றி கிடைப்பதில்லை. எதிர்பாராத சமயங்களில் கிடைக்கிறது. வெற்றி, தோல்வி இரண்டையும் ஒன்றாக ஏற்றுக்கொள்கிற பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஜார்க்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டது எதிர்பாராதது. தெலங்கானா, புதுச்சேரி, ஜார்க்கண்ட் என மூன்று மாநிலங்களுக்கு கவர்னர் பொறுப்பு வகித்தேன். பின்னர் மஹாராஷ்டிர கவர்னராக 13 மாதங்கள். தற்போது துணை ஜனாதிபதி என்ற உயரிய பொறுப்பு வந்திருக்கிறது. முயற்சிகள் நம்முடையவை. முடிவு இறைவனுடையது. வளர்ந்த பாரதம் என்ற இலக்கை இந்தியா எட்டும். அந்த வளர்ச்சியில், தமிழகத்தின், கொங்கு மண்டலத்தின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
இவ்வாறு, சிபிஆர் பேசினார்.
சக்தி குழுமங்கள் தலைவர் மாணிக்கம், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கே.ஜி., குழும தலைவர் பாலகிருஷ்ணன், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ராஜேஷ் லுந்த், முன்னாள் அமைச்சர் வேலுமணி, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் தாமோதரன், ஜெயராமன், அம்மன் அர்ச்சுணன், ஜெயராம், செல்வராஜ், அருண்குமார், வானதிசீனிவாசன், தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

