ADDED : ஏப் 06, 2026 09:58 PM
அன்னூர்: அன்னூர் பேரூராட்சியில், அனுமதியின்றி எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.
கிராம ஊராட்சிகளில் மட்டும் அரசியல் கட்சி விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளரிடம் ஆட்சேபனை இல்லை எனும் சான்று பெற்று எழுதலாம்.
பேரூராட்சி பகுதியில் அரசியல் கட்சி விளம்பரம் எழுத அனுமதி இல்லை. எனினும் அன்னூர் பேரூராட்சியில் ஓதிமலை சாலையில், ராம் நகர், அவிநாசி சாலையில் நாகமாபுதூர், உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சியின் தேர்தல் விளம்பரங்கள் எழுதப்பட்டிருந்தன.
இதுகுறித்து எதிர்தரப்பினர், அன்னூர் தெற்கு வருவாய் ஆய்வாளர் செந்தில்குமாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில், கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்தார். உடனடியாக பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அந்த விளம்பரங்களை அழித்தனர்.
'பேரூராட்சியில் விளம்பரம் எழுதுவதற்கு அனுமதி இல்லை. விதி மீறி எழுதினால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
