/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசியல் கட்சிகளின் பிளக்ஸ், விளம்பரங்கள் அகற்றம்
/
அரசியல் கட்சிகளின் பிளக்ஸ், விளம்பரங்கள் அகற்றம்
ADDED : மார் 17, 2024 11:51 PM

- நிருபர் குழு -
தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால், பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில், அரசியல் கட்சி பிளக்ஸ்கள் அகற்றும் பணி நடக்கிறது.
தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த உடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி, அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருந்த முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் படங்கள் அகற்றப்பட்டன.
பொள்ளாச்சி நகரில், அரசியல் கட்சியினரின், 'பிளக்ஸ்'களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கோவை ரோடு, பாலக்காடு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த, 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினரின் போஸ்டர்கள் அகற்றப்பட்டன.
மேலும், ஒரு சில இடங்களில் உள்ள, 'பிளக்ஸ்'கள் அகற்றப்படாமல் உள்ளன. கட்சி கொடிகளும் முழுமையாக அகற்ற வேண்டும் என அரசியல் கட்சியினருக்கு தேர்தல் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
வால்பாறை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், ஆனைமலை,கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ்கள் அகற்றப்பட்டன. மேலும், கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்களது சிலைகள் மூடப்பட்டன.
வால்பாறை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நிறைமதி தலைமையில், வருவாய்துறை அதிகாரிகள் இப்பணியை கண்காணிப்பு செய்தனர்.
உடுமலை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, அரசியல் கட்சி விளம்பரங்கள், பிளக்ஸ் பேனர்களை அதிகாரிகள் அகற்றினர்.
தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்களை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டில், அரசியல் கட்சி பேனர்கள், போஸ்டர்கள், துாய்மை பணியாளர்கள் வாயிலாக அகற்றப்பட்டது. சுவர் விளம்பரங்களும் வெள்ளை சுண்ணாம்பு கொண்டு அழிக்கப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், 'பொது இடங்களில் இருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. அரசியல் கட்சியினர் அமைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அகற்றாவிட்டால், நகராட்சி சார்பில் அகற்றப்படும்,' என்றனர்.

