/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பில்லுார் அணை பகுதியில் வண்டல் மண் அகற்றம்
/
பில்லுார் அணை பகுதியில் வண்டல் மண் அகற்றம்
ADDED : மார் 10, 2024 11:20 PM

மேட்டுப்பாளையம்:கோவை மாநகராட்சிக்கு, பில்லுார் அணையில் தண்ணீர் எடுக்கும் இடத்தில் உள்ள, வண்டல் மண்ணை அகற்றும் பணிகள் துவங்கின.
பில்லுார் அணையில் இருந்து கோவை மாநகராட்சிக்கு முதல் மற்றும் இரண்டு குடிநீர் திட்டங்களின் வாயிலாக, தினமும், 25 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
பிலலுார் அணையில், குடிநீர் வடிகால் வாரிய கிணற்றின் அருகே, கோவை மாநகராட்சி நிர்வாகம்,இரண்டாவது குடிநீர் திட்டத்தை அமைத்துள்ளது. அணையில் இருந்து தினமும், 12 கோடியே, 50 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து, சுரங்கப்பாதை வழியாக, வெள்ளியங்காடு இரண்டாவது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்புகிறது. அங்கு சுத்தம் செய்த குடிநீரை, நேரடியாக மாநகராட்சி பகுதிகளுக்கு மட்டுமே அனுப்பப்படுகிறது.
கோவை மாநகராட்சி இரண்டாவது குடிநீர் திட்டத்துக்கு, தண்ணீரை உறிஞ்சி எடுக்க, அணையின் ஓரத்தில் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றுக்கு அணையில் இருந்து தண்ணீர் வர, இரண்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
பில்லுார் அணையில் நீர்மட்டம் குறைந்ததால், தண்ணீர் வரும் முதல் குழாய் வெளியே தெரிகிறது. இரண்டாவது குழாயில் மட்டுமே தண்ணீர் வருகிறது.
அணையில் குழாய்கள் பதித்த இடத்தில் உள்ள வண்டல் மண்ணை அகற்ற, கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. நேற்று பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக, குழாய்கள் பதித்த இடத்தில் உள்ள வண்டல் மண்ணை, அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த மண்ணை அப்பகுதியில் முழுமையாக அகற்றினால், அணையில் தேங்கி நிற்கும் தண்ணீர், கோவை மாநகராட்சி இரண்டாவது குடிநீர் திட்ட கிணற்றுக்கு வர வாய்ப்புள்ளது.
இதே போன்று, பில்லூர் அணையில் உள்ள, இரண்டு குடிநீர் திட்டங்களுக்கு, தண்ணீர் எடுக்கும் இடங்களில் உள்ள வண்டல் மண்ணை, முழுமையாக அகற்றினால் மட்டுமே, வருகின்ற கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.
இதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

