/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலத்தில் சீரமைப்பு பணி துவக்கம்
/
மேம்பாலத்தில் சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : நவ 17, 2024 10:04 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு மேம்பாலத்தில், சேதமடைந்த இரும்பு சட்டங்களை அகற்றி மாற்றியமைத்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய ரோடான, பொள்ளாச்சி --- பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவு அருகே, பொள்ளாச்சி -போத்தனுார் ரயில் பாதை குறுக்கிடுகிறது. ரயில்வே கேட்டை கடப்பதற்கு, நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மாநில நெடுஞ்சாலை துறை திட்டங்கள் பிரிவு வாயிலாக, 55.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பாலம், கடந்த, 2022ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த மேம்பாலத்தில் இரும்பு சட்டங்கள் பெயர்ந்துள்ளன.
சேதமடைந்த இரும்பு சட்டங்களை சீரமைக்க, அப்பகுதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) பிரிவு வாயிலாக சீரமைப்பு பணி துவங்கியுள்ளது.
பெயர்ந்து நிற்கும் இரும்பு சட்டங்களை அகற்றி மாற்றியமைக்கப்பட்டும், பள்ளங்கள் சீரமைக்கப்பட்டும் வருகின்றன. இதற்காக, நேற்று, மேம்பாலத்தில் பொள்ளாச்சி நோக்கிய வழித்தடத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், ''மேம்பாலத்தில் ஒரு வழிப்பாதையை அடைத்து பணி நடக்கிறது. பிரதான வழித்தடம் என்பதால், போக்குவரத்து முக்கியத்துவம் கருதி, போர்க்கால அடிப்படையில் பணியை விரைந்து முடிக்க வேண்டும். கூடுதல் பணியாளர்களை நியமித்து, சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்,' என்றனர்.