/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டை சீரமைங்க; பா.ஜ., வலியுறுத்தல்
/
ரோட்டை சீரமைங்க; பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : ஜூலை 07, 2025 10:42 PM

பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி - உடுமலை ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக உருமாறியுள்ளது. இதை சீரமைக்க வேண்டும்,' என, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பா.ஜ.,வினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் கவுதம் லிங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், தேர்நிலையம் முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
குழிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டுநர்கள், குழி இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், கனரக வாகனங்கள் செல்லும் போது அங்கு தேங்கியுள்ள நீர், இருசக்கர வாகன ஓட்டுநர்களில் செல்வோர் மீது தெறிக்கிறது.
அந்த ரோட்டின் இருபுறமும் அமைந்துள்ள கம்பிகள் பராமரிப்பின்றி உள்ளதால் விபத்துக்கு வழிவகுக்கிறது. அதிக விபத்துகள் நடக்கும் பகுதியாக மாறியுள்ளது. எனவே, ரோட்டை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.