ADDED : டிச 22, 2025 05:24 AM
கேரளாவுக்கு கனிமவளம் கடத்தறாங்கஆளும்கட்சி ஆதரவுல நடக்குது வசூல் கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். மறுபடியும் கனிமவள கல்லுக்கு காசு வசூல் பண்றாங்கனு பேச ஆரம்பித்தார். என்னன்னு விசாரிச்சேன்.
முன்பெல்லாம் குறைஞ்சது, 200 டிப்பர் லாரிகளாவது 'பார்டர் கிராஸ்' பண்ணி போகும். இதுல, 2 அல்லது 3 டீம்மு செக்போஸ்ட் பக்கத்துல நின்னுட்டு காசு வசூல் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ஒரு வழியா வசூல் பிரச்னை படிப்படியாக குறைந்தது.
இப்போ, மறுபடியும் ஒரு யூனிட் கல்லுக்கு, 400 ரூபா வசூல் பண்றாங்க. முன்னாடி மாதிரி இப்போ வண்டி வரலைன்னாலும், ஒரு நாளைக்கு, 50 ஆயிரம் வரைக்கும் வசூலாகுதாம்.
கனிம வளம் கல்லுக்கு, சொக்கனூர் பஞ்சாயத்து, கோவிந்தநாயக்கனூருல கார்ல நின்னு வசூல் பண்றாங்க. செக்போஸ்ட்க்கும் தள்ளி இந்த இடம் இருக்கறதால, யாருக்கும் சந்தேகம் வர்றதில்ல. இதெல்லாம் கனிமவளத்துறை, வருவாய்த்துறை, போலீஸ்க்கு தெரியுமா, இல்ல தெரியாத மாதிரி நடிக்கறாங்களானு தெரியல.
கனிம வளத்தை சுரண்டி கேரளாவுக்கு கடத்தறாங்க. அரசு கஜானாவுக்கு போக வேண்டிய பணம் தனியார் பாக்கெட்டுக்கு போகுது. ஆளும்கட்சி செல்வாக்கு இருந்தா, மலையையே கடத்தலாம் போலிருக்குனு சொன்னார்.
மண்ணின் மைந்தருக்கு சீட் கொடுங்கமாஜி அமைச்சருக்கு மனம் திறந்த மனு வால்பாறை சட்டசபை தேர்தல்ல வேட்பாளர் தேர்வில் கவனம் தேவைனு அ.தி.மு.க.,காரங்க மேலிடத்துக்கு சொல்லியிருக்காங்களாம்னு, டீக்கடையில் ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவங்க உரையாடலை கவனிச்சேன்.
சட்டசபை தேர்தல் வரப்போகுது. கட்சியில சீட் கேட்டு, விருப்பு மனு வாங்கறாங்க. நம்ம ஊர பொறுத்தவரை, அ.தி.மு.க.,வோட கோட்டைனு தெரியும். ஆனா, இதுக்கு முன், ஜெயித்தவங்க நம்ம ஊருக்கு சொல்லும் படியாக எதுவும் செய்யல.
வால்பாறைக்கு வாரத்துக்கு ஒரு முறை, மாசத்துக்கு ரெண்டு முறை வந்து, கட்சிக்காரங்கள மட்டும் பார்த்துட்டு போயிட்டாங்க. அதனால, வரும் தேர்தல்ல அந்த மாதிரி நிலை தொடராம இருக்க, மண்ணின் மைந்தருக்கு வாய்ப்பு கொடுக்கணும்.
கட்சிக்காகவும், மக்களுக்காகவும் என்ன பண்ணியிருக்காங்க, மக்கள் செல்வாக்கு குறித்து ஆய்வு செஞ்சு 'சீட்' கொடுக்கணும்னு, நம்ம கட்சிக்காரங்க மாஜி அமைச்சருக்கு மனம் திறந்த மனு அனுப்பியிருக்காங்க. என்ன நடக்கும்னு தேர்தல்ல சீட் ஒதுக்கும் போது தான் தெரியும்னு பேசிக்கிட்டாங்க.
'தட்கல்' மின் இணைப்புக்கு தடங்கல்அரசு உத்தரவிட்டாலும் அதிகாரிக செக் பொள்ளாச்சியில், உடுமலை ரோட்டில் உள்ள பேக்கரியில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அங்கிருந்த சில விவசாயிகள், 'என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குனு' காரசாரமாக பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.
'தட்கல்' திட்டத்துல விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையும் முறையாக தெரிவிக்கல. ஆனா, அதிகாரிங்க, தங்களுக்கு தெரிந்தவங்க, முக்கியமான நபர்களுக்கு தகவல் கொடுத்து உஷார்படுத்தியிருக்காங்க.
அவங்க மட்டும் உடனடியா, ஆவணங்களோட, 'டிடி' எடுத்து வந்து, விண்ணப்பத்த கொடுத்து பதிவேற்றம் பண்ணியிருக்காங்க. இ.பி., ஆபீஸ்ல நெட் வேகமில்லைனு, தனியார் சேவை மையங்களுக்கு போய், விண்ணப்பத்த பதிவேற்றம் பண்ணியிருக்காங்க.
இந்த விபரமெல்லாம் தெரியாத அப்பாவி விவசாயிக, ஒவ்வொரு ஆபீஸ்கா போய் ஆவணங்கள சேகரித்து, நகைய அடமானம் வச்சு, 'டிடி' எடுத்துட்டு வந்தா, கொடுத்திருந்த இலக்கு முடிஞ்சு போச்சு, விண்ணப்பிக்க முடியாதுனு திருப்பி அனுப்புறாங்க.
இ.பி., ஆபீஸ்ல போராட்டம் நடத்தி, அரசாங்கத்துக்கு பிரச்னைய தெரிவிச்சதால, ஒரு வழியா விண்ணப்பத்த வாங்கியிருக்காங்க. அரசு வழிகாட்டுதலோடு மின் இணைப்பு கிடைக்கும்னு சொல்லி அனுப்பியிருக்காங்க.
அரசு உத்தரவிட்டாலும், 'கரன்சி'க்கு ஆசைப்படுற அதிகாரிக இருக்கற வரைக்கும் அப்பாவி விவசாயிகளால ஒன்னுமே பண்ண முடியாதுனு, சொன்னாங்க.
ஆயக்கட்டு பகுதிக்கு மட்டும் தான் 'ரூல்ஸ்'அமைச்சர் ஏரியாவுக்கு 'நோ ரூல்ஸ்' உடுமலை அரசு கலைக்கல்லுாரி அருகே, பி.ஏ.பி., கால்வாய் கரை அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பில், கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் பேசியதிலிருந்து... நான்காம் மண்டலத்துல, ஐந்து சுற்று தண்ணீர் திருமூர்த்தி அணையிலிருந்து எப்படியோ கொடுத்துட்டாங்க. இனி முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் எப்படி கிடைக்குன்னு தெரியல என்றார்.
அதில் ஒருவர் நீங்க வேற, பாசன காலத்துல, மழை மட்டும் பெய்யாம இருந்திருந்தா பல சிக்கல் வந்துருக்கும். கடைசி சுற்றுல பாசன நாட்கள குறைச்சிட்டாங்க. பிரதான கால்வாய் உடைச்சப்ப, பல கிளை கால்வாயில தண்ணீயை நிறுத்திட்டாங்க. அதை சரிக்கட்ட மறுபடியும் தண்ணீர் கொடுக்கல.
ஆனா, உப்பாறு, வட்டமலைகரை அணைக்கும் பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் கொடுத்தாங்க. இதை பத்தி வெளிப்படையா எதுவும் சொல்றது இல்லை. அவங்களுக்கு கொடுக்கட்டும் தப்பில்லை.
ஆனால, இந்த பாசனத்தை மட்டும் நம்பி நாம இருக்கிறோம். மழை பெய்யாம இருந்தா இங்கேயே தண்ணீர் பத்தாது. அதே மாதிரி பாசன பகுதியில் இருக்கற குளங்களுக்கு தண்ணீர் கொடுக்கறதுக்கு மட்டும் பொதுப்பணித்துறை ஆபிசருங்க பல 'ரூல்ஸ்' பேசறாங்க. 'சாமி'யான அமைச்சர் இருக்கறவரைக்கும், அவரு ஏரியாவுக்கு தடையில்லாம தண்ணீர் போகத்தான் செய்யும்.
நாம எதுவும் பண்ண முடியாது. வர்ற முதலாம் மண்டல பாசன காலத்துல மழை இருக்காது. அப்ப எப்படி சமாளிக்க போறங்கன்னு தெரியல.
இரண்டு மாவட்டத்துல இருக்கற ஆயக்கட்டு நிலங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாம, நீர் நிர்வாகம் நடக்குமா என்பது கேள்விக்குறியாக மாறிட்டு வருது. இதைப்பத்தி கேள்வி எழுப்பினா பக்கத்துக்கு ஊருக்கு தண்ணீர் கொடுக்க மாட்டீங்களான்னு கேப்பாங்க.
இப்படியே போச்சுனா, பி.ஏ.பி., பாசன திட்டம் என்னாகும் என தெரியல. சரி வாய்க்கால்ல ஏதோ துார்வாரும் வேலை செய்யப்போறாங்களாம். அதாவது ஒழுங்கா நடக்குதான்னு பார்ப்போம் என்றபடி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

