ADDED : அக் 07, 2024 12:34 AM
கிரமமோ, நகரமோ குடிநீர் கொடுங்க!
நகரத்துல இணைப்பீங்களோ, கிராமத்துலேயே விட்டுடுவிங்களோ, எங்களுக்கு குடிநீரை ஒழுங்கா வினியோகம் பண்ணுங்க என, கிராம சபை கூட்டத்துல, மக்கள் புலம்பினாங்க.
உடுமலை ஒன்றியத்தில் உள்ள கணக்கம்பாளையம், பெரியகோட்டை ஊராட்சிகள உடுமலை நகராட்சியோட இணைக்க, கிராம சபை கூட்டத்துல தீர்மானம் கொண்டுவந்தாங்க. அதுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிச்சாங்க.
கூட்டத்துல பங்கேற்ற மக்கள், நகரத்துல இணைப்பீங்களோ, கிராமத்துலேயே விட்டுடுவிங்களோ, எங்களுக்கு குடிநீரை ஒழுங்கா வினியோகம் பண்ணுங்க. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைச்சா போதும் என வேதனையோடு பேசினாங்க.
மாசத்துல அஞ்சு நாளைக்கு ஒரு தடவ குடிநீர் வந்தது. அதுக்கப்பறம், எல்லா கூட்டு குடிநீர் திட்டத்தையும் இணைச்சா, நகரம் மாதிரி எந்த பிரச்னையும் இல்லாம குடிநீர் வரும்னு சொன்னாங்கா. இப்ப உள்ளதும் போனமாதிரி, பத்து நாளைக்கு ஒரு தடவ தான் குடிநீர் வருது.
என்ன காரணம்னு கேட்டா, கூட்டு குடிநீர் திட்டத்த செயல்படுத்துற இடத்துல 'பவர் கட்'னு சொல்றாங்க. எப்பவுமே இதே பதில்தான் சொல்றாங்க. கிராமமா இருந்தாலும், நகரமா இருந்தாலும் குடிக்க தண்ணீ இல்லைனா என்ன பண்ண முடியும். முதல்ல இந்த பிரச்னைய தீர்த்து வையுங்க, என, கோரஸ்சாக குரல் கொடுத்தாங்க.
லிஸ்ட் கேட்கறாங்க; நிதி கொடுக்கல
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுல, பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கோவை பஸ்சுக்கு காத்திருந்தனர். பள்ளிக்கல்வி துறை பிரச்னைய பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன விஷயம்னு கவனித்தேன்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துல, அதிகப்படியான அரசுப்பள்ளிகள் இருக்கு. பள்ளியில ஏதேனும் பராமரிப்பு பணி உள்ளதா? அப்படி பணிகள் இருந்தால் என்னென்ன தேவைனு அறிக்கையா சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை வாயிலாக 'இமெயில்' அனுப்பியிருக்காங்க.
ஒயரிங், பூச்சு, பெயின்டிங், எலக்ட்ரிக் பொருட்கள் என்ன வேணும்னு குறிப்பிட்டு பதில் அனுப்பினா, அதற்கான தொகை அனுமதிக்கறது கிடையாது. ஏதேனும் ஒரு தொகை ஒதுக்கினால் குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்காம, ஒரு வருடம் கழித்து கொடுக்கறாங்க. இதனால, அரசு நிதிய எதிர்பார்க்காம பாக்கெட்டுல இருந்து பணத்த செலவு பண்ண வேண்டியிருக்குனு புலம்பினாங்க. கோவை பஸ்ல அவங்க கிளம்பினதும், நானும் வண்டிய கிளம்பினேன்.
கரையுது நிதி; நிறையுது பாக்கெட்!
வால்பாறை நகராட்சியில, ஆளுங்கட்சிக்காரங்க அட்ராசிட்டி தாங்க முடியலைனு, பஸ்சிற்காக காத்திருந்த பயணியர் இருவர் பேசிக்கொண்டனர். என்ன விஷயம்னு கவனித்தேன்.
வால்பாறை நகராட்சியில டெண்டர் மேட்டர்ல சில மாசமாவே பிரச்னை இருக்கு. தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிக்காறங்க அதிக அளவுல ஒப்பந்ததாரரா இருக்காங்க. அதனால, தி.மு.க., நகர செயலாளர் அலுவலகத்துலேயே பணிகள் பிரிச்சுக்கறாங்க. அப்பறம், 'சிட்டிங்' கவுன்சிலர்கள் பினாமி பேருல டெண்டர் எடுத்து, பணத்தை அள்ளுகின்றனர்.
அ.தி.மு.க., ஒப்பந்ததாரர்களுக்கு 'கல்தா' கொடுத்து டெண்டர் விடுறதால பிரச்னை ஏற்படுது. அதனால, அவர்களையும், தி.மு.க.,காரங்க சமாதானப்படுத்தி, நகராட்சியில கூட்டுக்கொள்ளை அடிக்கறாங்க.
ஆனா வார்டுல நடக்கற வளர்ச்சி பணி எதுவுமே தரமில்லை. அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் உரிய கமிஷன் கிடைக்கறதால, பணியின் தரத்த யாருமே கண்டுக்கறதில்ல. இப்படியே போனா, வால்பாறை நகராட்சி திவாலாயிரும்னு பேசிக்கிட்டாங்க.
நேரத்துக்கு வாங்க எம்.பி., சார்!
கிணத்துக்கடவு ஒன்றியத்துல கடந்த 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடந்துச்சு. இதுல வடபுதுார் பஞ்சாயத்துல சிறப்பு அழைப்பாளரா மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கலந்துக்கிட்டாரு. கூடவே கூடுதல் கலெக்டர், சப்--கலெக்டர், அரசுத்துறை சார்ந்த அதிகாரிக எல்லாரும் கலந்துக்கிடாங்க.
கூட்டம் காலை, 11:00 மணிக்கு துவங்கும்னு, அங்க இருக்குற அதிகாரிக சொன்னாங்க; மக்களும் தயாரா இருந்தாங்க. ஆனா, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி கிராம சபை கூட்டத்துல கலந்துக்குவாருனு சொன்னதால, கலெக்டர் உட்பட எல்லாரும் வெகு நேரம் காத்துகிட்டு இருந்தாங்க. ஒரு வழியா, 11:45 மணிக்கு எம்.பி., வந்தாரு. மக்கள் பலர் கூட்டத்துல இருந்து கலைஞ்சு போயிட்டாங்க. அதுக்கப்புறம் கிராம சபை கூட்டத்த ஆரமிச்சு நல்லவிதமா முடுஞ்சாங்க.
மக்கள் என்ன பிரச்னைய சொல்றாங்கனு கேட்க, கிராம சபை கூட்டத்துல எம்.பி., பங்கேற்கறது நல்ல விஷயம் தானுங்க. ஆனா, சொன்ன நேரத்துக்கு வந்தா, மக்களும் சொல்ல வேண்டிய சொல்லிட்டு கிளம்புவோம், யாரோட பொழப்பும் பாதிக்காது. இதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டாங்கனா சரினு, கிராமத்து பெரியவர்கள் இருவர் வாய்விட்டு புலம்பிச்சென்றனர். அங்கிருந்து, நானும் வண்டிய கிளப்பினேன்.
படகு துறை முடங்கியது தனியாருக்காகவா!
திருமூர்த்தி அணை பகுதியில், செய்தி சேகரிக்க போயிருந்தேன். அங்க, மலைவாழ் மக்கள் சிலர் படகுத்துறைய ஏன் மூடினாங்கனு தெரியுமா என, கேள்வி கேட்டு பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.
மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில, 20 ஆண்டுக்கு முன் படகுத்துறை துவங்கினாங்க.
அந்த மகளிர் சுய உதவி குழு பெண்கள் படகு சவாரி நடத்தியதில், தளி பேரூராட்சிக்கு வருமானம் கிடைச்சுது. மலைவாழ் மக்கள் குடும்பங்களும் சந்தோஷமா இருந்தாங்க.
இந்நிலையில, படகு துறைய தளி பேரூராட்சி நிர்வாகத்தால பராமரிக்க முடியல, செலவும் அதிகமா ஆகுதுனு மூடிட்டாங்க. தனியார் நிறுவனம் கொள்ளையடிக்க வசதியா படகு துறையை முடக்கியிருக்காங்கனு இப்ப தெரிஞ்சிருக்கு.
அணைக்கரையில, தனியார் நிறுவனம், கேளிக்கை விளையாட்டு, சாகச விளையாட்டுனு அணைக்குள் அத்துமீறி நுழைந்து, சுற்றுலா பயணியரிடம் கட்டணம் வசூலிக்கறாங்க.
தளி பேரூராட்சி நிர்வாகம், சுற்றுலா வளர்ச்சி கழகம், மாவட்ட அதிகாரிகளுக்கு, 'மாமூல்' போகறதால, எந்த அத்துமீறலையும் கண்டுக்கறதில்ல.
வசூல் போனதால திக்குமுக்காடுறாரு!
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானாவுல நண்பர்களுடன் 'வாக்கிங்' சென்றேன். நடந்துக்கிட்டு இருந்தவங்க தள்ளுவண்டி கடை மேட்டரை பேசிக்கிட்டிருந்தாங்க.
இங்க இருந்த தற்காலிக கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கியிருக்கு நகராட்சி நிர்வாகம். கடைகள் காலியானதுல ஆளுங்கட்சிய சேர்ந்த பிரமுகர் ஒருத்தருக்கு தான் நஷ்டமாம். மனைவி கவுன்சிலராக இருந்தாலும், அவருதான் கவுன்சிலர் போல வார்டுக்குள்ள வலம் வருவாரு. நகராட்சி நடவடிக்கையால அவருக்கு வருமானம் போச்சு.
கோபத்துல நகராட்சி அதிகாரிகிட்ட பேசி பார்த்தும் அவங்க அசையலையாம். இப்போ, ஏதோ ஒரு குடைச்சல் கொடுக்கணும்னு குப்பை கிடக்குது; அது இதுன்னு சொல்லிட்டு இருந்தவரு, ரவுண்டானா பக்கம் அவரு சொன்னதா சிமென்ட் பீடம் போலகட்டிக்கிட்டு இருந்தாங்க. தகவல் தெரிஞ்ச நகராட்சி நிர்வாகம், உடனடியாக அகற்றலன்னா; அவ்வளவு தான்னு சொல்லி இருக்காங்க.
அவரே அத எடுத்துட்டு, நகராட்சி அதிகாரிக்கு போட்டோ எடுத்து அனுப்பியிருக்காரு. இதெல்லாம் தேவையா, ஆட்சிக்கு தான் கெட்ட பேருனு ஆளுங்கட்சிக்காரங்களே புலம்பறாங்க.
முதல்வர், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், இவர போல சில பேரு செய்யுற வேலையால தான் ஆட்சிக்கு அவப்பேரு வருதுனு, பேசிக்கிட்டாங்க.