ஆசிரியர் நியமனத்துல 'அரசியல்' வேண்டாமே!
அரசு பள்ளிகளில், இரண்டாண்டுகளுக்குப்பின், கூடுதல் உறுப்பினர்களுடன் புதிய பள்ளி மேலாண்மை குழு முதல் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பெற்றோர் இருவர், ஆசிரியர்கள் நியமிப்பதிலாவது அரசியல் தலையீடு இல்லாம இருக்குமா, என, பேசிக்கொண்டிருந்தனர். நியமனத்தில் என்ன நடக்குனு தெரிஞ்சுக்க அவங்க பேச்சை கவனித்தேன்.
பள்ளிகள்ல காலியா இருக்கற ஆசிரியர் பணியிடங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்கள நியமிக்கறாங்க. அந்த நடைமுறை இப்ப துவங்கியிருக்கு. தகுதியானவர்கள தேர்வு செய்வதில், பள்ளி மேலாண்மைக்குழு ஆர்வமா இருக்கு.
உடுமலை சுற்றுவட்டார பள்ளிகளில் காலியா இருக்கற ஆசிரியர் பணியிடங்கள நிரப்புவதற்கான பணிகள் நடக்குது. பள்ளி மேலாண்மைக்குழு பேர பயன்படுத்தி, ஆளும்கட்சியின் ஆதிக்கம் இல்லாம, தகுதியானவங்கள நியமிக்கணும்.
இந்த குழுவுல ஆளும்கட்சிய சேர்ந்த ஊராட்சி தலைவர்களும் இருக்காங்க. அதனால, அரசியல் அழுத்தம் கொடுக்காம இருந்தா, தகுதியான ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிறப்பான கல்வி போதிப்பாங்க. இதுல, கல்வித்துறை தான் சிறப்பு கவனம் செலுத்தணும்னு பேசிக்கிட்டாங்க.
பழங்குடியினருக்கு நேரடியா உதவலாமா?
பொள்ளாச்சியில, தன்னார்வலரா இருக்கற நண்பரை சந்தித்தேன். வனத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்கு அவங்களால உதவி பண்ண முடியலைனு வருத்தப்பட்டார். என்ன விஷயம்னு அவரிடம் விசாரித்தேன்.
கோவை மாவட்டத்துல, மேற்குத்தொடர்ச்சிமலையில அதிகப்படியான பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகள் இருக்கு. ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையான பழங்குடியின குடும்பங்களாக வசிக்கிறாங்க.
அவங்களுக்கு, அவ்வப்போது, தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பலர், உதவிக்கரம் நீட்டுறாங்க. மழைகோட், குடை, ஷூ, ஜர்க்கின் என அவங்களோட தேவை அறிந்து, பல்வேறு விதமான அத்தியாவசிய பொருட்களை வழங்கறாங்க.
இந்த பொருட்கள வனப்பகுதிக்குள் சென்று, பழங்குடியின மக்களுக்கு நேரடியா வழங்க முடியாது. அந்தந்த ரேஞ்சர், பாரஸ்டர் வாயிலாக தான் வழங்கறாங்க.
ஆனா, சில ரேஞ்சர்கள், அப்பொருட்கள் முழுமையாக பழங்குடியின குடும்பத்தாரிடம் கொடுக்கறதில்ல. இதனால, தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவங்க, பழங்குடியினருக்கு நேரடியாக உதவ முறையான வழிகாட்டுதலை சொல்லுங்கனு, வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியிருக்காங்கனு, விஷயத்தை சொன்னார்.
போர்டுல இருக்கு... குடியிருப்புல இல்ல!
விருகல்பட்டிக்கு செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். அங்கிருந்த மக்கள், 'தகவல் பலகையில மட்டுமே இருக்கு, குடியிருப்புல பைப்லைனை காணவில்லைனு,' பகீர் புகாரை சொன்னாங்க.
விருகல்பட்டி ஊராட்சியில, புதுார் கிராமம் இருக்குங்க. இங்க, ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு, பைப்லைன் அமைக்க, 15வது நிதிக்குழு மானியத்துல, ஒரு லட்சத்து, 91 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்குனாங்க. பணி செய்து முடிந்ததா, தகவல் பலகையும் வச்சுட்டாங்க.
ஆனா, குடியிருப்பு பகுதியில பைப்லைன் போடலைங்க. இங்க வர வேண்டிய பைப்லைனை ஊராட்சிநிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து, வேறு இடத்துக்கு மாத்திட்டாங்கனு தெரிஞ்சது. இதுபற்றி, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு பல முறை புகார் மனு அனுப்பியும், எவ்வித நடவடிக்கையும் இல்லீங்க.
அரசு நிதி ஒதுக்கினாலும், ஊராட்சியும், குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகளும், ஆதிதிராவிட குடியிருப்பு பகுதிய புறக்கணிச்சு, அரசாங்கத்தை ஏமாத்திட்டு இருக்காங்க. எங்கீங்க இருக்கு, சமத்துவம். இருக்கறவங்களுக்கு எல்லாமே கிடைக்குது. இல்லாதவங்களுக்கு கொடுக்கறதும் வந்து சேருவதில்ல.
இப்ப குடிநீர் கிடைக்காம திண்டாடுறோம். சிறப்புத்தணிக்கை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கணும். அரசு நிதியில, வேறு இடத்துல, பணிய செய்து விட்டு, பொய்யான தகவல் பலகைய, தைரியமா வச்சிருக்காங்க.
இந்த ஊராட்சி நிர்வாகத்தினரையும், பணி ஆய்வுசெய்யாத ஒன்றிய பொறியியல் பிரிவு அதிகாரிகளையும் கண்டித்து தொடர்போராட்டத்தை நடத்த தயாராயிட்டோம். அப்பவாவது அதிகாரிகள் கண்விழிப்பார்களானு பார்ப்போம்னு, அவங்க ஏரியா பிரச்னை, பித்தலாட்டத்தை சொன்னாங்க.
ஆளும்கட்சிக்கு அதிகாரிகள் 'ஜால்ரா'
வால்பாறை மலைப்பகுதியில், 'மலை போல பிரச்னை இருக்கு... ஆனா அதிகாரிகள் தான் கண்டுக்க மாட்டீங்கிறாங்க,' என பஸ்சிற்காக காத்திருந்த இளைஞர்கள் பேசிக்கொண்டனர்.
வால்பாறைக்கு டெய்லியும், ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருது. ஆனா, வால்பாறை நகருல, நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் போட்டிருக்காங்க. இதுனால, உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் ரோட்டுல நிம்மதியா நடக்க கூட முடியல.
ஆக்கிரமிப்புகள அகற்றுவதா கூறி, கடந்த மாதம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக, சாலையோர வியபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தாங்க. ஆனா, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறா இருக்கற ஆக்கிரமிப்புக்கள அகற்றாம, கவர்க்கல் ரோட்டுல, கண்துடைப்புக்கு சில கடைகள அதிகாரிக அகற்றினாங்க.
வால்பாறை நகருக்குள் இருக்கற ஆக்கிரமிப்பு கடைகள அகற்ற, ஆளும்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. நமக்கேன் வம்புனு அதிகாரிகளும் 'ஆக் ஷன்' எடுக்காம ஒதுங்கீட்டாங்க.
மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய அதிகாரிகளே, ஆளும்கட்சியினருக்கு 'ஜால்ரா' போட்டுட்டு, ஆக்கிரமிப்பு கடைகள அகற்றாம இருக்காங்கனு, பேசிக்கிட்டாங்க.
பேக்கரில கைநீட்டும் தாலுகா போலீஸ்
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். 'நம்ம ஊர்ல, 24 மணி நேரமும் பேக்கரி செயல்படுது தெரியுமா, என, பேச ஆரம்பித்தார். கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கனு கேட்டேன்.
தாலுகா போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டுக்கு உட்பட்ட பகுதியில இருக்கற சில பேக்கரிகள், 24 மணி நேரமும் செயல்படுது. இரவு நேரங்களில் செயல்படக்கூடாதுங்கற விதிமுறை எல்லாம் இங்கு பொருந்தாது போலிருக்கு.
இதுக்காக, அந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கற போலீசாரை பேக்கரிகாரங்க, பதவிக்கேத்த மாதிரி சிறப்பா 'கவனிப்பு' செய்யறாங்களாம். இதனால, போலீஸ்காரங்க, நைட் நேரத்துல வடக்கிபாளையம் பிரிவு, ஆச்சிபட்டி, ஜமீன்முத்துார், நரசிங்காபுரத்துல இருக்கற பேக்கரிகளுக்கு பாதுகாப்பா இருக்காங்க. கூடுதல் எஸ்.பி., ரோந்து வர்றாங்கனு தகவல் தெரிஞ்சா, அந்த பேக்கரிகாரங்கள, போலீசார், 'அலர்ட்' செய்யறாங்க.
அப்ப மட்டும், நைட் டைம்ல பேக்கரிய அடைக்கறங்க. செக்போஸ்ட் வசூல் மட்டுமில்லாம, பேக்கரி கடையிலயும் போலீஸ்காரங்க கைநீட்ட துவங்கிட்டாங்க. இதையெல்லாம் தடுக்க நேர்மையான போலீஸ் ஆபீசர் யாருமே இல்லைங்கறது தான் வருத்தமா இருக்குனு, சொன்னார்.
வனத்துறைல கனஜோரா நடக்குது வசூல்!
உடுமலையில் இருந்து, மூணாறு போயிட்டு வந்த நண்பரை சந்தித்தேன். வனத்துறைகாரங்க, எப்படியெல்லாம் வசூல் பண்ணுறாங்கனு, பேச்சை துவங்கினார்.
உடுமலை வழியா, மறையூர், மூணாறுக்கு, டூரிஸ்ட் வண்டி அதிக போகுது. ஒன்பதாறு செக்போஸ்ட், அமராவதி வனச்சரக பகுதியில, அந்த வண்டிகளுக்கு 'என்ட்ரி பீஸ்' வசூல் பண்ணுறாங்க. ஒரு சில வண்டிக்கு ரசீது கொடுக்கறாங்க. பெரும்பாலும் கட்டணம் மட்டும் வசூலிட்டு, ரசீது வழக்கறதில்ல.
இதே மாதிரி, சின்னாறு செக்போஸ்ட்லயும், எந்த வண்டியையும் சோதனை செய்யாம, பணத்தை மட்டும் வசூல் பண்ணி முறைகேடு பண்ணுறாங்க. கோடந்துார் மாரியம்மன் கோவிலுக்கு போகற வண்டிகளுக்கும், பக்தர்களிடமும் அதிகளவு பணம் வசூல் பண்ணுறாங்க.
அரசு விடுமுறை தினத்திலும், அமாவாசை நாட்களிலும் நுாற்றுக்கணக்கான வண்டி வரும். வனத்துறையினர் வசூலில் மட்டும் குறியாக இருக்கறதால, நீண்ட துாரத்துக்கு வண்டிகள் காத்திருக்குது. தினமும் பல ஆயிரம் ரூபா இல்லீகலா வசூல் பண்ணுறாங்க. இதுல, அதிகாரிகளுக்கும் பங்கு போறதால, யாரும் கண்டுக்கறதில்லைனு, சொன்னார்.