டாஸ்மாக், தனியார் 'பார்'; சிண்டிக்கேட்
பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில, நண்பரை சந்தித்தேன். 'இப்ப இந்த ரோடே தள்ளாடுது. எந்த நேரமா இருந்தாலும், கேட்கற 'சரக்கு' கிடைக்குதுனு' பேச ஆரம்பித்தார்.
பொள்ளாச்சி டவுன் மற்றும் கிராம பகுதியில 'பார்' வசதியுடன் டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இப்ப, எப்.எல்., 2 கடைகளும் திறக்கப்பட்டிருக்கு. இந்த தனியார் மதுபான கடைகளெல்லாம், பகல், 11:00 மணிக்கும், டாஸ்மாக் கடைகள், 12:00 மணிக்கும் திறக்கறாங்க.
ஆனா, சில கடையில காலை முதலே மதுபான பாட்டில்கள் விற்பனை ஜோரா நடக்குது. இதுக்காக, கடையில இருந்து மதுபான பாட்டில்கள எடுத்து, கடை ஒட்டிய கட்டடங்களில் பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கறாங்க. இதுமட்டுமில்லாம, தனியார் 'பார்'ல ஏதாவது 'சரக்கு' இல்லைனா, பக்கத்துல இருக்கற டாஸ்மாக் மதுக்கடையில இருந்து மொத்தமா வாங்கி வந்து விற்கறாங்க.
டாஸ்மாக் கடைகளும், தனியார் பார்களும் சிண்டிகேட் போட்டு வியாபாரம் நடக்குது. கலால் துறை அதிகாரிக, எதையும் கண்டுக்காம 'கட்டிங்' மட்டும் வசூல் பண்ணுறாங்க. டாஸ்மாக் மற்றும் தனியார் பார்ல ஆய்வு பண்ணினா, எல்லா தில்லுமுல்லும் அம்பலமாகும்னு, சொன்னார்.
ரயில் பயணத்தில் இளசுகள் அத்துமீறல்
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர், ரயில் பயணம் சுகமா இருந்தாலும், சில தர்ம சங்கடங்களை தருது என்றார். என்ன பிரச்னைனு விசாரித்தேன்.
கோவையில இருந்து, பொள்ளாச்சி வரும் ரயிலில் சில விரும்பத்தகாத செயல்களால் பயணியருக்கு தர்ம சங்கடமான சூழல் ஏற்படுது. கோவையில் இருந்து மாலையில் வரும் ரயிலில் சில, இளம் ஜோடிகளாக சில்மிஷம் செய்வது; மின் விளக்குகளை அணைத்து கண்ணியம் குறைவான செயல்களில் ஈடுபடுறாங்க.
அவர்கள், தன்னிலை மறந்து செய்யும் சேட்டையால, மற்றவர்களுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்படுது. இதை யாராவது வீடியோ எடுத்து மிரட்டி, குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வாய்ப்பிருக்கு. இந்த காலத்துல, இதை அவங்க உணராதது வேதனையா இருக்கு. ரயில்வே போலீசார், ரோந்து பணியில ஈடுபட்டு இதுபோன்று அத்துமீறல கட்டுப்படுத்தணும்னு சொன்னார்.
ரயிலில் பயணிக்கும் இளம் ஜோடிகள், மற்றவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்க கண்ணியமா நடந்து கொள்வது நல்லது, இதை ரயில்வே போலீசாரும் கண்காணிப்பது நல்லதுனு சொல்லிட்டு, நானும் கிளம்பினேன்.
சீருடையில் மீண்டும் கோளாறு
உடுமலையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டத்துக்கு வந்த இரு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சீருடை வழங்க அளவு எடுத்துட்டு போனாங்க. ஆனா, இப்பவும் குளறுபடியா வழங்கியிருக்காங்கனு, பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன விஷயம்னு விசாரிச்சேன்.
ஒவ்வொரு வருஷமும் சீருடை வழங்கறோம்னு சொல்லி, நாலுசெட் அரசு கொடுக்குது. ஆனா அந்த சீருடைய மாணவர் பயன்படுத்தறாங்களா, அளவு சரியா இருக்கா, இல்லையானு பார்க்கறதில்ல.
அதுல, 90 சதவீத மாணவர்களுக்கு சீருடை அளவு சரியில்லாம இருக்கு. இந்த கல்வியாண்டுல எல்லாம் சரியாகிடும்னு, ஒவ்வொரு பள்ளிக்கும் வந்து மாணவர்களோட அளவு எடுத்துட்டு போனாங்க. நாமளும் நம்பிக்கையில இருந்தோம்.
இப்ப பார்த்தா, ஒன்னுல இருந்து நாலு வகுப்பு வரை ஒரே அளவு சீருடை, அஞ்சாம் வகுப்புக்குதான் கொஞ்சம் பெரிசா வந்துருக்கு. அது எப்படி நாலு வகுப்பு வரை பசங்க, பொண்ணுக வளரவே மாட்டாங்களா, அஞ்சாம் வகுப்பு போறப்போ திடீர்னு வளர்ந்திருவாங்களானு புரியல.
பள்ளிக்கு வந்து, சீருடையை போட்டுக் காட்டி, பெற்றோர் பிரச்னை பண்ணுறாங்க. இதுக்கு, அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கணும். இல்லாட்டி, துணிய கொடுத்து, தையல்கூலி கொடுத்துட்டா, பிரச்னை தீர்ந்திடும்னு, சொன்னாங்க.
கனமழை காலத்துல பூங்கா தப்பிக்குமா?
வால்பாறை பஸ் ஸ்டாண்டுல, நண்பரை சந்தித்த போது, 'தாவரவியல் பூங்கா வீணா போகுதுனு' சொன்னார். என்னாச்சுனு விசாரித்தேன்.
வால்பாறைக்கு சுற்றுலா வர்றவங்கள மகிழ்விக்க, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4.15 ஏக்கர் இடம், 2019ல் பூங்கா அமைக்க கலெக்டரின் உத்தரவின் பேரில், நகராட்சி நிர்வாகத்துக்கு கொடுத்தாங்க. அங்க, ஆறு கோடி ரூபாய்ல தாவரவியல் பூங்கா அமைச்சாங்க.
சரிவான இடத்துல, பூங்கா இருக்கறதால கனமழை காலத்துல, பூங்கா மழையில் அடித்து செல்ல வாய்ப்பிருக்குனு சொல்லி, ஆரம்பத்திலேயே பூங்கா கட்ட தகுதியில்லாத இடம்னு, பொதுப்பணித்துறை அதிகாரிக சொல்லிட்டாங்களாம்.
அப்ப இருந்த, அ.தி.மு.க., ஆட்சியில, எதப்பத்தியும் ஆய்வு பண்ணாம, அவசரகதில பூங்கா அமைச்சாங்க. தி.மு.க., ஆட்சியில பூங்காவுல பராமரிப்பு கூட பண்ணாததால காட்சிப்பொருளா இருக்கு. ஆனா, பராமரிப்புங்கற பேருல, பணம் மட்டும் கொள்ளையடிக்கறாங்க. மக்களின் வரிப்பணம் தான் வீணா போகுது.
மழை காலத்துல, பூங்காவுல மண் சரிவு ஏற்படாம இருக்க, இனி மேலாவது உருப்படியா திட்டமிட்டா தான், செலவு பண்ணுன நிதி வீண் போகாம இருக்கும்னு, ஆதங்கத்த கொட்டினார்.
வீடு பழுதுபார்ப்புக்கு பணம் வருமா?
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாப்பில், நண்பருடன் டீ பருகிக்கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வந்த இருவர், கலைஞர் கனவு இல்ல திட்டம் மற்றும் வீடுகள் பழுதுபார்ப்பு குறித்து பேசிக்கிட்டு இருந்தாங்க, என்னன்னு காது கொடுத்து கேட்டேன்.
கடந்த மூனு மாசத்துக்கு முன்னாடி, கிணத்துக்கடவு யூனியன் ஆபீஸ்ல, பொள்ளாச்சி எம்.பி., தலைமையில வீடுகள் பழுது பார்ப்பதற்கு ஏராளமான பயனாளர்களுக்கு பணி உத்தரவு கொடுத்தாங்க.
அப்ப, 15 நாள்ல வீட்டு வேலைய ஆரம்பிக்கணும்னு சொன்னாங்க. இல்லைன்னா பணி உத்தரவு 'கேன்சல்' ஆயிடுமுனு சொன்னதால, எல்லாரும் அவசர அவசரமா கடன் வாங்கி வீட்டு வேலையை ஆரம்பிச்சு முடிச்சாங்க.
ஆனா, இப்ப வரைக்கும் வீட்டு வேலை முடிச்ச மக்களுக்கு பணம் வரல. இதை பத்தி அதிகாரிகள் கிட்ட கேட்டா, பணம் வரும் போது வரும்னு சொல்றாங்க. ஆனா எப்போ வரும்னு உறுதியா சொல்ல மாட்டீங்கறாங்களாம். அதனால, வீடு கட்டுன மக்கள் பலர் இப்போ கடன் வாங்குனதுக்கு வட்டி கட்ட முடியாம சிரமப்படுறாங்க.
பணி உத்தரவு கொடுத்த, 15 நாள்ல வேலைய முடிக்கணும்னு சொல்ற அரசாங்கம், பணி முடிச்சு குறிப்பிட்ட காலத்துக்குள்ள பணத்தை கொடுக்காம இழுத்தடிக்கறது தான் கஷ்டமா இருக்குனு, பேசிக்கிட்டாங்க.
குளம் நிரப்பணும்னா; பாக்கெட்ட நிரப்பணும்!
உடுமலை, பி.ஏ.பி., ஆபீஸ் பக்கத்துல, விவசாயிகள் கூட்டமா நின்று காரசாரமா பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன பிரச்னைனு கவனித்தேன்.
பி.ஏ.பி., மண்டல பாசன காலத்துல மழை பெய்தா, தண்ணிய வீணடிக்காம குளத்துல சேகரிச்சு வைக்கிறது விவசாயிகள் வழக்கம். குளத்துல தண்ணிய சேகரிச்சா நிலத்தடி நீர்மட்டம் உயரும். இது, இயல்பா நடந்துட்டு இருந்த வழக்கம்.
இப்ப, பெரிய போராட்டமா மாறிடுச்சு. இதுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளோட புதிய நடைமுறைதான் காரணம். குளத்துல தண்ணி நிரம்ப, தங்களோட பாக்கெட் நிரம்பணும்னு கண்டிஷன் போடுறாங்க.
ஆளும்கட்சி பிரமுகர்கள் பரிந்துரையும் அதிகாரிங்க கிட்ட எடுபடறது இல்ல. குளத்தோட பரப்ப பொறுத்து பணம் வசூல் பண்ணுறாங்க. காசு கைக்கு வந்த தான், ஷட்டர ஓபன் பண்ணுறாங்க.
அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைய விவசாயிக செய்ய முன்வந்தா, அதுக்கும் காசு எதிர்பார்க்கிறாங்க. வேற வழியில்லாம ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அதிகாரிகளுக்கு கொடுக்கறாங்க. இதே நிலைமை தொடர்ந்தா விவசாயிக ஒருங்கிணைஞ்சு ஆளும்கட்சி மற்றும் அதிகாரிகள கண்டிச்சு போராட்டத்துல தான் ஈடுபடணும்னு பேசிக்கிட்டாங்க.