ADDED : டிச 01, 2024 10:56 PM
குடிநீர் வினியோகத்துல 'அரசியல்'
உடுமலை யூனியன் ஆபீஸ்க்கு அதிகாரிய சந்திக்க வந்திருந்த கிராம மக்கள், கணக்கம்பாளையத்துல குடிநீர் வினியோகத்துல 'அரசியல்' நடக்குதுங்க, குடிநீருக்காக காலி குடங்களோட அலையறோம்னு சொன்னாங்க. என்ன நடக்குதுனு விசாரிச்சேன்.
கணக்கம்பாளையம் ஊராட்சி, நகராட்சிய ஒட்டி அமைந்திருக்கு. இந்த ஊராட்சியில, குடியிருப்பு எண்ணிக்கை அதிகமாயிட்டு இருக்கு. ஆனா, மக்கள் தேவைக்கு ஏற்ப குடிநீர் சப்ளை இருக்கறதில்ல.
ஊராட்சி நிர்வாகம், குடிநீர் வினியோகத்துல 'அரசியல்' பண்ணுது. நிர்வாகத்துக்கு ஆதரவான ஏரியாவுக்கு, தேவைக்கு அதிகமாவே குடிநீர் கிடைக்குது. மற்ற பகுதிக்கு பத்து நாட்கள் கடந்தாலும் குடிநீர் கிடைக்கறதில்ல.
ஊராட்சியில இருக்கற எல்லாரும், ஒரே மாதிரி தான் சொத்துவரி கட்டறோம், குடிநீர் கட்டணம் செலுத்தறோம். ஆனா, ஊராட்சி நிர்வாகம் ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் தடவுது. ஏனிந்த பாரபட்சம்னு தெரியல.
ஊராட்சி தேர்தலுக்கு அப்புறம், மக்களிடையே பாரபட்சம் பார்க்க கூடாது. எல்லாருக்கும் ஒரே மாதிரி சேவை செய்யணும்னு முதல்வர் அடிக்கடி சொல்லறாரு. ஆனா, உள்ளூர்ல இருக்க அரசியல் புள்ளிகள், குடிநீர் வினியோகத்திலேயே அரசியல் பண்ணுறாங்க. ஆக மொத்தம் ஓட்டுபோட்ட ஜனங்க காலம் முழுக்க இப்படியே புலம்பினாலும், ஒன்னும் மாறபோறதில்லனு சொல்லி நொந்து கொண்டனர்.
அரசு பள்ளிக்கூடத்துல நிதி பிரச்னை!
பொள்ளாச்சி கல்வி மாவட்ட ஆபீஸ்க்கு வந்த, தலைமையாசிரியர்கள் சிலர், 'அரசாங்கத்துல சொல்லறதை, செய்ய மாட்டீங்கறாங்கணு' புலம்பினர். என்னனு விசாரிச்சேன்.
அதிக மாணவர்கள் இருக்கற அரசு பள்ளில, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (ைஹடெக் லேப்) அமைச்சிருக்காங்க. அந்த ஆய்வக பணிக்கு, 'ெஹப்ரான்'ங்கற நிறுவனம் பணியாளர்கள நியமிச்சிருக்கு. அவங்களுக்கு, அந்த நிறுவனம் சம்பளம் கொடுக்குது.
ஆனா, இந்த ைஹடெக் லேப் செயல்படணும்னா, இன்டர்நெட் வசதி வேணும். அந்த பொறுப்பு, தலைமையாசிரியர் கிட்ட கொடுத்திருக்காங்க. இன்டர்நெட் சேவைக்கு, மாசத்துக்கு, 1,500 ரூபா செலவாகுது. அந்த தொகைய, கடந்த ஜூன் மாசத்துல இருந்து கணக்கிடப்பட்டு, இப்பத்தான் அரசாங்கம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலா கொடுத்திருக்கு. ஆறு மாசத்துக்கு, ஒன்பதாயிரம் ரூபா கொடுக்கணும். ஆனா, ஆறாயிரம் ரூபா தான் கொடுத்திருக்காங்க.
இதுமட்டுமில்லாம, பள்ளில குழு அமைச்சு, கூட்டம் நடத்த சொல்லியிருக்காங்க. இதுக்கும் தலைமையாசிரியர் தான் செலவு பண்ணணும். ஆனா, அதுக்கான நிதி தான் கொடுக்கறது இல்ல. இதுனால, ஒவ்வொரு ஸ்கூல்லயும் தலைமையாசிரியர்கள் செய்வதறியாது திணறுறாங்க.
ஒவ்வொரு மாசத்துக்கும் செலவு பண்ணின பணத்தை உடனே கொடுக்கணும், இல்லாட்டி, இதுக்குனு தனியா நிதி ஒதுக்கி முன்கூட்டியே கொடுக்கணும்னு, சொன்னாங்க.
நகராட்சியில எல்லை மீறி போயிருச்சு!
வால்பாறை நகராட்சியில, மக்கள் கிட்ட வசூலிக்கற வரிப்பணத்தை கொள்ளையடிக்கிறாங்கப்பா... என, பஸ் ஸ்டாப்பில் இரு இளைஞர்கள்பேசிக்கொண்டனர். என்ன விஷயம்னு காது கொடுத்து கேட்டேன்.
வால்பாறை நகராட்சியில வளர்ச்சிப்பணிங்கற பேருல, கோடிக்கணக்கான ரூபாய கொள்ளையடிக்கிறாங்க. வேலைய செய்யாமலேயே பில் போடுறாங்க. ஏற்கனவே செய்த வேலைக்கும் பில் போடுறாங்க. டெண்டர் விடாமலேயே அவசரப்பணிங்கற பேருல பல கோடிக்கு பணி செய்யற மாதிரி, பாவ்லா காட்டி மக்களோட வரிப்பணத்த கொள்ளையடிக்கிறாங்க.
எல்லாத்துக்கும் மேல, நகராட்சி தலைவருக்கு வேண்டியவங்களுக்கு அலுவலகத்துல, பணி வழங்கறதோட, ஒப்பந்தப்பணிகளும் வாரி வழங்கறாங்க. நகராட்சி தலைவரின் நிழலா இருக்கற, அவரோட கணவர் தான், எல்லா வரவு செலவையும் பார்க்கறாராம். கவுன்சிலர்களுக்கு கமிஷன் கொடுப்பதில் இருந்து, ஒப்பந்தப்பணி வழங்கறது வரைக்கும் எல்லாமே அவரு கையில தான் இருக்காம்.
இதனால தான், ஒவ்வொரு மன்ற கூட்டத்திலேயும், வார்டுல வளர்ச்சி பணி நடக்கலைனு ஆளும்கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி துாக்கறாங்க. எல்லை மீறி போயிட்ட இந்த பிரச்னைக்கு, கடிவாளம் போடுவது யாருன்னு தான் தெரியலைனு பேசிக்கிட்டாங்க.
ஹாஸ்டல் 'மேட்டர்' திசை திரும்பிருச்சு!
உடுமலை அரசு கல்லுாரி அருகில், நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். பி.சி., ஹாஸ்டல் 'மேட்டர்' தெரியுமானு புதிரோடு பேச்சை துவங்கினார்.
அரசு மற்றும் தனியார் கல்லுாரியில் படிக்கற, 29 மாணவியர் பி.சி., ஹாஸ்டலில் தங்கி படிக்கறாங்க. கடந்த, 25ம் தேதி, ஒரு சில மாணவியர், ஹாஸ்டல் வார்டன் மீது பல்வேறு குற்றச்சாட்டு கூறி, திடீர் போராட்டத்துல ஈடுபட்டாங்க. உயர் அதிகாரிக தலையிட்டு வார்டனை இடமாற்றம் பண்ணிட்டாங்க.
ஹாஸ்டல்ல இருக்கற கல்லுாரி மாணவியர், நாலு பேர், சொந்த ஊருக்கு செல்வதாக கூறி, ஆறு மாசத்துக்கு முன், டூர் போயிருக்காங்க. இது வெளியில தெரிந்த நிலையில, மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்துட்டு, பெற்றோருக்கு தெரியாம மறச்சுட்டாங்க.
மறுபடியும், அதே மாதிரி டூர் போயிருக்காங்க. இது தெரிந்து கண்டிச்சதால, வார்டன் மீது குற்றச்சாட்டு சுமத்தி, விஷயத்தை திசை திருப்ப போராட்டத்துல ஈடுபட்டாங்கனு தெரியவந்திருக்கு.
மாணவியர் போராட்டம் நடத்தினதும், முழுசா விசாரணை நடத்தாம வார்டன் மேல நடவடிக்கை எடுத்திருக்காங்க. இதனால, தப்பு பண்ணுறவங்களுக்கு தைரியம் வந்திருக்கு. அரசு ஹாஸ்டல்ல இதுபோன்ற ஒரு சிலரின் ஒழுங்கீன செயலால், மற்ற மாணவியரும் பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கு.
இது போன்ற சம்பவங்களை விசாரித்து, உண்மைய கண்டறிய சிறப்பு குழு அமைத்து, மாசத்துக்கு ஒரு முறை கூட்டம் நடத்தணும்னு சொல்லி முடித்தார்.
ஊராட்சி ஆபீஸ் வாஸ்து சரியில்ல!
நெகமம் பஸ் ஸ்டாப் பக்கத்துல, நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். வரதனூர் ஊராட்சிய சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்கிருந்தனர். 'வாஸ்து படுத்தறபாடு, ஊராட்சிய ஆட்டி வைக்குதுனு' பேசிக்கிட்டாங்க. என்ன மேட்டர்னு உன்னிப்பா கவனித்தேன்.
நம்ம ஊருல, ஆறு மாசத்துக்கு முன்னாடியே ஊராட்சி அலுவலகத்தை புதுப்பிக்கணும்னு சொல்லிட்டு அங்கிருந்த பொருள் எல்லாத்தையும், 'இ சேவை' மையத்துக்கு மாத்தினாங்க. இப்ப, ஊராட்சி ஆபீஸ் வேலையும் முடிஞ்சது. ஆனா, ஊராட்சி ஆபீஸ்க்கு எந்த பொருளையும் மாத்தாம 'இ சேவை' மையத்திலேயே வச்சிருக்காங்க.
ஊராட்சி ஆபீசும் 'இ சேவை' மையத்திலேயே நடக்குது. இத பத்தி கேட்டா, இன்னும் தண்ணி கனெக்சன் கொடுக்கல, கொடுத்த உடனே மாத்தணும்னு நொன்டி சாக்கு சொல்லுறாங்க. இதப்பத்தி ஊராட்சி ஆபீஸ்ல விசாரிச்சா, புதுசா கட்டுன பில்டிங்ல வாஸ்து சரி இல்லையாம். பதவி காலம் இன்னும் ஒரு மாசம் தான் இருக்குது, அதுக்குள்ள எதுக்கு மாத்துணும்னு யோசிக்கறாங்கனு தெரிந்ததுனு, பேசிக்கிட்டாங்க.
எ ம்.எல்.ஏ., மறியல்; ஆளும்கட்சி அழுத்தம்!
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட்ல, வடுகபாளையம் நண்பரை சந்தித்தேன். எம்.எல்.ஏ., தலைமையில நடந்த மறியல் போராட்டத்துல, ஏதேதோ நடந்திருக்குனு, பேச ஆரம்பித்தார்.
வடுகபாளையம் ரயில்வே கேட்டை மூடக்கூடாது. மூடுவதென்றால் அங்க புதுசா மேம்பாலம் கட்டணும்னு வலிறுத்தி, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் பொதுமக்கள், மறியல் போராட்டத்துல ஈடுபட்டாங்க.
பேச்சு நடத்த வந்த, கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங், எம்.எல்.ஏ., உடன் இங்கிலீஸ்ல பேசி, பாலம் கட்ட மாற்று இடமிருக்கானு ஆய்வு பண்ணினாங்க. அப்ப, அங்கு இருந்த ஒருத்தர், 'மேடம் ப்ளீஸ் அண்டர்ஸ்டேன்னு செல்லிட்டு, ஹிந்தியில பிரச்னைய சொன்னாரு.
கூடுதல் எஸ்.பி., உடனே குறுக்கிட்டு, 'எனக்கு தமிழ் நல்லா புரியும்; நீங்க தமிழிலேயே சொல்லுங்கனு,' சொன்னாங்க. இதனால, சீரியசா பேயிட்டு இருந்த ஆய்வு, திடீர்னு கலகலப்பாயிருச்சு.
இந்த பிரச்னையில, ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர் தலையிட்டு, ரயில்வே போலீஸ்க்கு அழுத்தம் கொடுத்து, எம்.எம்.ஏ., மேல எப்.ஐ.ஆர்., போட வச்சிருக்காரு. இத கேட்ட, எம்.எம்.ஏ., 'என் மேல எத்தனை எப்.ஐ.ஆர்., வேணும்னாலும் போடட்டும்; மக்கள் பிரச்னைக்கு தீர்வு வேணும்னு,' ஸ்டிராங்கா சொல்லிட்டாருன்னு பேச்சை முடித்தார்.