கல்வித்துறைக்கு வந்த சோதனை!
உடுமலையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டம் ஒன்றில் பங்கேற்று திரும்பும்போது, இணைய வகுப்புகள் குறித்து இரு ஆசிரியர்கள் புலம்பிக்கொண்டிருந்தனர். என்ன பிரச்னை என, விசாரித்தேன்.
அரசு பள்ளிகள்ல ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கிறதுக்கு, இன்னும் வகுப்பறை கூட ஒதுக்கப்படாம இருக்குது. ஆனா, அந்த வகுப்புக்கான இன்டர்நெட் பில் தொகைய மட்டும், கல்வியாண்டு துவக்கத்துலயே ஒதுக்கீடு செஞ்சுட்டாங்க.
இப்ப, துவங்கப்படாத ஸ்மார்ட் கிளாஸ்க்கு, இன்டர்நெட் பில் கட்றதுக்கு ஆசிரியர்கள் பாடு திண்டாட்டமாக இருக்குது. பள்ளிக்கல்வித்துறையில இருந்து, ஒரு குறிப்பிட்ட தொகைய ஒதுக்கி, இன்டர்நெட் பில் கட்ட சொல்றாங்க. ஆனா, பில் தொகையோ அதிகமா இருக்கு.
பில்லுல குறிப்பிட்டிருக்கற முழு தொகைய கட்டணும்னு, இன்டர்நெட் வழங்கும் நிறுவனத்திலிருந்து சொல்றாங்க. இதுக்கு, கைக்காசு போட்டு பில் கட்ட வேண்டியிருக்கு.
இதுக்கு நடுவுல, டிச., மாசத்திலிருந்து இன்டர்நெட் தொகை, பள்ளி மேலாண்மைக்குழுக்கு அனுப்புவோம். அத தலைமையாசிரியர்கள் கணக்குக்கு மாற்றி, அதிலிருந்து பில் தொகைய கட்டணும்னு, புது நடைமுறை சொல்றாங்க.
ஸ்மார்ட் கிளாஸ் துவங்கறதுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கல, ஆனா, இன்டர் நெட் பில் மட்டும் கட்டிட்டு இருக்கோம். கல்வித்துறைக்கு வந்த சோதனையா இருக்குனு, புலம்பினாங்க.
லைசென்ஸ் இல்லாத காட்டேஜ்கள்
வால்பாறைல, இயற்கை ஆர்வலர் நண்பர்களை சந்தித்தேன். இங்க இருக்கற விதிமீறல் கட்டடங்கள கட்டுப்படுத்தணும்னு பேச ஆரம்பித்தனர்.
தமிழகத்துல, ஊட்டி, கொடைக்கானலையடுத்து, வால்பாறைக்கு தான் அதிக டூரிஸ்ட்கள் வர்றாங்க. ஆனா, டூரிஸ்ட் தங்கி செல்ல வசதியா, காட்டேஜ்கள், ரிசார்ட்கள் அதிகமிருக்கு. சமீப காலமா அதிக டூரிஸ்ட்கள் வர்றதால, வீடுகள் கூட காட்டேஜ்களா மாறியிருக்கு.
ஆனா, வால்பாறையில சுற்றுலாத்துறையின் அனுமதி பெற்று, விரல்விட்டு எண்ணும் அளவிலான காட்டேஜ்களுக்கே லைசென்ஸ் இருக்கு. 90 சதவீதம் காட்டேஜ்க்கு கட்டட அனுமதியும் இல்ல, லைசென்சும் பெறவில்ல.
யானைகளின் வழித்தடத்துல கட்டியிருக்கற ரிசார்ட்களுக்கும் எந்த துறையிடமும் அனுமதி வாங்கல. விதிமீறல் விடுதிகள, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக கண்டறிந்து முறைப்படுத்தணும்.
வால்பாறையில இருக்கற தங்கும் விடுதிகள, சுற்றுலாத்துறை அதிகாரிக ஆய்வு செய்து, கட்டணத்தையும் முறைப்படுத்தணும். இதுக்கு, அரசு உடனே நடவடிக்கை எடுக்கணும்னு விளக்கினர்.
அமைச்சர் பேசறத வீடியோ எடுக்காதீங்க!
கிணத்துக்கடவு, கோதவாடியில் இருக்கும் கோயிலுக்கு சுவாமி கும்பிட சென்றிருந்தேன். அப்ப, கோதவாடி குளத்த ஆய்வு பண்ண, சுற்றுலாத்துறை அமைச்சர் வந்திருந்தாரு. அப்போ, பத்திரிகைகாரங்க போட்டோ, வீடியோ எல்லாம் எடுத்தாங்க.
அப்போ அங்கிருந்த போலீஸ்காரர் ஒருத்தர் போட்டோ மட்டும் எடுங்க. வீடியோ எடுக்காதீங்கனு சொன்னாரு. ஏன் வீடியோ எடுக்க கூடாதுனு கேட்டதுக்கு, அமைச்சர் குளத்த பத்தி பேசிட்டு இருக்காரு. அதுல ஏதாவது ஒரு சிலது தப்பா இருந்துச்சுனா, வீடியோவுல அப்படியே பதிவாயிரும். அதனால, வீடியோ எடுக்காதீங்கனு சொன்னாரு.
பொதுமக்கள் போட்டோ, வீடியோ எடுத்த வேண்டாமுனு அதிகாரிக தடுப்பாங்க. ஆனா, இப்ப மீடியாவையும் தடுக்கறாங்கனு. அமைச்சருக்கு புள்ளி விபரம் கொடுக்காம, மீடியாவுக்கு தடை போடுறாங்கனு புரிஞ்சுது. இன்னும் என்னென்னமெல்லாம் பண்ண போறாங்களோ தெரியலைனு நொந்து கொண்டு, நாமும் சுவாமி கும்பிட்டுட்டு கிளம்பினோம்.
அதிகாரத்தை விடாத 'தலை'கள்
உடுமலை ஒன்றிய அலுவலகத்தில், 'சின்சியர்' ஊழியர்கள் இருவர், கிராம ஊராட்சியில ஆளும்கட்சியினர் ஆதிக்கம் அதிகமாயிருச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன விஷயம்னு கேட்டேன்.
ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக்குழு தலைவர், உறுப்பினர்களோட பதவிக்காலம், கடந்த, 5ம் தேதியோட முடிஞ்சு போச்சு. ஆனா, உடுமலை ஒன்றியத்துல, பதவிக்காலம் முடிஞ்சும், அதிகாரத்த கைவிடாம, பதவியில இருக்கற மாதிரியே இருக்காங்க. இதனால, ஊரக உள்ளாட்சி நிர்வாகத்துல ஆளும்கட்சியினர் தலையீடு அதிகரிச்சிருக்கு. ஊராட்சிகள்ல, ஆளும்கட்சிக்காரங்க அதிகாரிகள மிரட்டி, அவங்க சொல்லற வேலைய செய்ய வைக்கிறாங்க.
உச்சகட்டமாக, போன வாரம், ஊராட்சி பகுதிகளில் நடந்த, வளர்ச்சி பணிகள் துவக்க விழாவுல, கணக்கம்பாளையம், எலையமுத்துாருல ஒரு சில ஆளும்கட்சி மாஜி தலைவருக, தாங்கள் தொடர்ந்து பதவியில இருக்கற மாதிரி, வரவேற்பு பிளக்ஸ் பேனர்கள் வைத்து, விழாக்களையும் நடத்தினாங்க. நிர்வாகத்துல அவங்க தலையீடு இருக்கறதால, ஊராட்சி செயலாளர், ஒன்றிய அதிகாரிக அவங்களுக்கு ஆதரவாக செயல்படுறாங்க. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில, கவனம் செலுத்தலைனா, ஊரக உள்ளாட்சி அதிகாரம் பாதை மாறிடும்னு, சொன்னாங்க.
ஆண்டு விழாவுக்கு பணம் ஒதுக்குங்க!
பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலகத்துக்கு வந்திருந்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் 'இந்தாண்டு ஆண்டு விழா எப்படி நடத்துவதுனு தெரியலைனு' புலம்பிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில் இருந்து...
அனைத்து பள்ளிகளிலும், ஆண்டு விழா கொண்டாடி, புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, எமிஸ் இணையதளத்தில் பதிவும் செய்யணும். 100 மாணவர் இருக்கும் பள்ளிகளுக்கு, தலா 2,500 ரூபாய்; அதற்கு மேல், 250 மாணவர்கள் வரை இருந்தா, நான்காயிரம் ரூபாய்; 500 மாணவர்கள் இருந்தா, எட்டாயிரம் ரூபாய்; ஆயிரம் மாணவர் இருந்தா 15 ஆயிரம் ரூபாய்.
இரண்டாயிரம் மாணவர்கள் இருந்தா, 30 ஆயிரம் ரூபாய்; 2,001 மாணவர்களுக்கு மேல இருந்தா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்னு அரசு தெரிவிச்சிருக்கு.
ஆனா, டெக்கரேஷன், ஸ்டீரியோ செட்டிங், பரிசு, உணவு செலவுக்கு இந்தத் தொகை போதாதுனு சொல்லிட்டோம்.
போன வருஷம் நடந்த ஆண்டு விழாவுக்கே இன்னும் தொகை ஒதுக்குல. அதே நிலைதான் இந்த ஆண்டும் நடக்கும். அதனால, தனியார் பங்களிப்போடு, ஆசிரியர்களின் சொந்த செலவுல ஆண்டு விழா நடத்தணும்னு, சொன்னாங்க.

