ADDED : மார் 23, 2025 09:41 PM
என்னமோ நடக்குது மர்மமாயிருக்குதுபி.ஏ.பி., திட்டத்துல ஒன்னுமே புரியல!
பொள்ளாச்சி, உடுமலை ரோட்டுல, நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். இங்கிருந்த விவசாயிகள், பி.ஏ.பி., மேட்டர் பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க உரையாடலை கவனித்தேன்.
பி.ஏ.பி., திட்டத்துல என்ன நடக்குதுனு புரியல. முன்பெல்லாம், கேரளா அதிகாரிகளோட நீர் பங்கீடு கூட்டம் நடத்துவாங்க. ஆண்டுக்கு எவ்வளவு தண்ணீ கிடைச்சது, கேரளாவுக்கு எவ்வளவு கொடுத்தோம், நம்ம பாசனத்துக்கு எவ்வளவு கொடுத்தோம்னு, புள்ளிவிபரமா சொல்லுவாங்க.
இப்ப எந்த மாதிரி எதுவுமே வெளிப்படையா சொல்லறதில்லை. ரகசியமா கூட்டம் நடத்துறாங்க. கேரளா அதிகாரிக என்ன கேட்டாங்கனு, நம்ம அதிகாரிக யாருமே சொல்லறதில்ல. இதே மாதிரி போச்சுனா, அதிகாரிக சொல்லறதுக்கு தலையாட்டிட்டு இருக்க வேண்டியது தான்.
பழைய அதிகாரிங்க எல்லாம் மாறி போயிட்டாங்க. சிலர் ரிட்டயர்ட் ஆயிட்டாங்க. அதுக்கப்புறம், புதுசா வந்திருக்கற அதிகாரிக கிட்ட எதைக் கேட்டாலும், மேலிடத்துல கேட்டு சொல்றேனு சொல்றாங்க.
இப்படியே போனா, பி.ஏ.பி., அணைகள்ல, எவ்வளவு தண்ணீ இருக்கு. நம்ம பாசனத்துக்கு எவ்வளவு கொடுக்க போறாங்கனு தெரியாது. வருங்கால சந்ததிக்கு பி.ஏ.பி., திட்டம்னா என்னனு தெரியாம போயிரும் போலிருக்கு.
பொறுமைக்கும் எல்லையிருக்கு. அதிகாரிக இப்படியே பண்ணிட்டு இருந்தாங்கனா, எல்லாரும் எஸ்.இ., ஆபீஸ்ல போய் போராட்டத்துல உட்கார்ந்தற வேண்டியது தான்னு பேசிக்கிட்டாங்க.
விபத்து ஏற்படுத்திட்டு நிற்கறதில்லஇளசுகளால போலீசுக்கு நிம்மதியில்ல
பொள்ளாச்சி சப்-கலெக்டர் ஆபீசில் நின்றிருந்த போது, போலீசார் அங்கு வந்தனர். 'சிறார்கள் அத்துமீறலில் ஈடுபடுறாங்க. இதையெல்லாம் செய்தியா போடுங்க,' என்றனர். என்ன விஷயம்னு விசாரிச்சேன்.
அந்த காலத்துல, வசதியான குடும்பத்தினர், குழந்தைக காலேஜ் முடிச்சதும், பைக் வாங்கி கொடுப்பாங்க. ஆனா, இப்ப அந்த நிலை தலைகீழா மாறியிருக்கு. அரசு வேலையில இருக்கறவங்க, வணிகக் கடை ஓனருக, தொழில் துறையில இருக்கறவங்க... என வசதியானவங்க தங்களோட, மகன், மகளுக்கு, கார் வாங்கி கொடுக்கறாங்க.
அவங்க காலேஜ் போகறப்பவே, ரோட்டுல சர்... சர்னு பறக்கறாங்க. காஸ்ட்லியான கார், பைக்குகள லைசென்ஸ் கூட இல்லாமல தலைதெறிக்க ஓட்டுறாங்க.
இது ஒருபுறமிருக்க, வீக் எண்டு, லீவு நாள்ல, பொள்ளாச்சி வழியாக, கார், பைக்ல இளசுகள் சுற்றுலா வர்றாங்க. பெரும்பாலும், 18 வயசுக்குள்ள இருக்கறவங்க வர்றாங்க. கார் முழுக்க ஸ்டிக்கர் ஒட்டி இருக்கறதால, உள்ளே யார் இருக்காங்கனு தெரியறது இல்ல.
தனித்தனி ஜோடியாவும், குழுவாவும் வரும் சிறார்கள், ஆங்காங்கே கார்கள நிறுத்தி, சந்தேகம் ஏற்படாத வகையில் அட்ராசிட்டியில் ஈடுபடுறாங்க. அவங்க வேகமா கார் ஓட்டி, ஆக்சிடெண்ட் பண்ணிட்டு நிற்காத போயிடுறாங்க.
கேமரா காட்சிய ஆதாரமா வச்சுட்டு அலைமோத வேண்டியிருக்கு. பெற்றோருக்கு பொறுப்பு வேணும்னு செய்தி போடுங்க, என்றனர். போலீஸ் சொல்றதிலும் விஷயம் இருக்கு, பெற்றோர் தான்புரிஞ்சுக்கணும்.
கல்வித்துறையோட உத்தரவால்தலைமையாசிரியர்கள் கலக்கம்
உடுமலையில், அரசுப்பள்ளிகளை பார்க்க அமைச்சர் வராருனு, கல்வித்துறை என்னென்மோ ஏற்பாடு செய்யுது. ஆனா, இதுல மாட்டிகிட்டு முழிக்கிறது தலைமையாசிரியர்கள் தான், என, புலம்பிக்கொண்டிருந்தனர். என்ன விஷயம்னு கவனித்தேன்.
அரசு பள்ளிகளுக்கு அமைச்சர் விசிட் வர இருக்கிறாரு. அதும் சும்மா இல்ல. உங்க பள்ளியில எல்லாமே நிறைவாக இருக்கா. அப்படி இருக்கிற பள்ளி தலைமையாசிரியர்கள் சவால் விடுங்க. கட்டாயம் அந்த பள்ளிக்கு வர்ரேன்னு சொல்லியிருக்கிறாரு.
உடனே, கல்வித்துறை வட்டாரமும் எந்த தலைமையாசிரியர் கிட்டயும் கேக்காம, அவங்களா பள்ளிகளோட பட்டியல அனுப்பிடறாங்க. இப்ப அந்த பட்டியல்ல இருக்கிற பள்ளிகள்ல, நுாறு சதவீதம் எல்லா மாணவர்களுக்கு எழுத படிக்க தெரியும்னு, தலைமையாசிரியர்கள் ஒரு கடிதம் தரணும்னு உத்தரவு போட்டிருக்காங்க.
ஒவ்வொரு பள்ளியிலும், ஐந்து சதவீதமாவது சரியா எழுத படிக்க தெரியாத குழந்தைங்க இருக்காங்க. ஆனா, இதெல்லம் நல்லா தெரிஞ்சும், கல்வித்துறையே இப்படி ஒரு கடிதம் கொடுக்க சொல்லுது. மாணவர்கள் சரியா பதில் சொல்லலைனா, தலைமையாசிரியர்களுக்கு தான் கெட்ட பேரு வரும்னு, புலம்பினர்.
கல்குவாரிகள்ல அத்துமீறல் நடக்குதுகைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா
கிணத்துக்கடவில் உள்ள கோவிலுக்கு சுவாமி கும்பிட சென்றிருந்தேன். அங்கு இருவர் கல்குவாரி சம்பந்தமா பேசிக்கிட்டு இருந்தாங்க. என்னனு காது கொடுத்து கேட்டேன்.
கிணத்துக்கடவுல பல கல்குவாரிகள் விதிமீறி செயல்படுது. சில குவாரிகள் குறிப்பிட்ட தேதி முடிஞ்சும் கற்களை வெட்டி எடுக்கறாங்க. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பல புகார்கள் போயிருக்கு. அதனால, கிணத்துக்கடவுல இருக்கற குவாரிகளை எல்லாம் ஆய்வு செய்ய அறிவுறுத்தல் வந்துச்சு.
கனிமவளத்துறை அதிகாரிகள் குவாரிகளை ஆய்வு செஞ்சு நடவடிக்கை எடுப்பாங்கணு பார்த்தா, 'டிரோன்' இருந்தா தான் ஆய்வு செய்ய முடியும்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. அவ்வளவு தான்... போனவங்க வரவே இல்லை.
கல்குவாரியில விதிமீறல் இருக்குதுனு பொதுமக்களில் இருந்து அதிகாரிகள் வரை எல்லாத்துக்கும் தெரியும். ஆனா, நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் யோசிக்குது. கனிம வளத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க தயங்குறாங்க. ஆளும்கட்சியில இருந்து ஏதாவது அழுத்தம் கொடுக்கறாங்களானு தெரியலைனு பேசிக்கிட்டாங்க.
கூட்டுறவு துறையில வசூலுக்கு'கறார்' உத்தரவு போடும் அதிகாரி
குடிமங்கலம் வட்டாரத்தில், வசூல் அமோகமாக நடக்குது. இப்படி கறாரா இருக்க கூடாதுனு, கூட்டுறவுத்துறை ஊழியர்கள் பேசிக்கொண்டிருந்தனர். நண்பர் வருகைக்காக காந்திருந்த போது, அவங்க உரையாடலை கவனித்தேன்.
கூட்டுறவுத்துறையில நிர்வாக குழு தேர்தல் நடத்தாத நிலையில், அதிகாரிகள் ஆதிக்கம் அதிகரிச்சிருக்கு. கடன் வாங்கும் விவசாயிகளிடம், குறிப்பிட்ட தொகைய கொடுத்தாத்தான் கையெழுத்து போடுவோம்னு அதிகாரிக 'கெடுபிடி' பண்ணுறாங்க.
ஆறு கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, செயல் ஆட்சியராக இருக்கும் அதிகாரி, அங்கு கடன் வழங்க வசூல் செய்ததோடு மட்டுமல்லாமல், 152 ரேஷன் கடைகள்ல இருந்து, மாசத்துக்கு தலா, 400 ரூபாய் கட்டாயமா 'கவனிப்பு' கொடுக்கணும்னு சொல்லிட்டாராம்.
கொடுக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது, ஏதாவது ஒரு காரணத்தை கூறி, சஸ்பெண்ட் செய்யறாராம்.
இந்த மாசத்தோட அந்த அதிகாரி ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு நுாறு ரூபாய் சேர்த்து, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும், தலா, 500 ரூபா வழங்கணும். அவரது நினைவு பரிசாக தங்கத்தில் ஏதாவது தர கொடுக்கணும்னு, ரேஷன் கடை ஊழியர்களுக்கும், கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கும் 'கறார்' உத்தரவு போட்டிருக்காராம். அதனா, எல்லோரும் வசூல்ல தீவிரமா இருக்காங்கனு, பேசிக்கிட்டாங்க. நண்பர் சண்முகசுந்தரம் வந்ததும், அங்கிருந்து பைக்கை கிளப்பினேன்.
நிர்ணயிச்ச கூலி வாங்கி கொடுக்கலபோராட்டத்துக்கு மட்டும் வரணுமா
வால்பாறை எஸ்டேட் பகுதியில், செய்திக்காக சென்ற போது, பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களை பத்தி காரசாரமா பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.
தேயிலை தொழிலாளர்களை நம்பி தான் வால்பாறையே இருக்கு. கடந்த, 2001ல் தொழிலாளர்கள் பெற்ற கூலிய குறைச்சதால, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறிட்டாங்க. அப்பெல்லாம், தொழிற்சங்கங்கள் குரல் கொடுக்கல.
கடந்த, 2022ல் தமிழக அரசு அறிவித்த குறைந்தபட்சக்கூலியான, 425.40 ரூபாய பெற்றுக்கொடுக்காம, குறைவான கூலி ஒப்பந்தம் போட்டாங்க.
தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக குரல் கொடுக்காம, தொழிலாளர்களின் அடிப்படை வசதிக்காக போராட தயக்கம் காட்டுற தொழிற்சங்கங்கள், இப்போ, மசோதாவை ரத்து செய்யக்கோரி, அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு கொடுக்கறாங்க. இது, எந்த விதத்தில் நியாயம்.
அழைப்பு கொடுத்த மாதிரி, 29ம் தேதி நடக்கற வேலை நிறுத்த போராட்டத்துல தொழிலாளர்கள் கலந்துக்கிட்டா, எஸ்டேட் நிர்வாகம் நோட்டீஸ் வழங்க தயாரா இருக்கு. ஆக மொத்தத்துல, தொழிற்சங்கங்கள் பப்ளிசிட்டிக்காக நடத்துற போராட்டத்துல தொழிலாளர்கள் கலந்துக்கறது சந்தேகம் தான்னு, சொன்னாங்க.