ADDED : மார் 30, 2025 10:43 PM
திராவிட கட்சிகளிடையே குஸ்தி சூடாகுது சமூகவலைதள பக்கம்
பொள்ளாச்சியில் பஸ் ஸ்டாண்டில், நண்பரை சந்தித்தேன். அவர், 'அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கிவிட்டது,' என பேச ஆரம்பித்தார்.
பொள்ளாச்சி நகராட்சியில, காலியிடங்களை தனியாருக்கு ஒன்பதாண்டு குத்தகைக்கு விட தீர்மானம் கொண்டு வந்தாங்க. இதுக்கு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. எம்.எல்.ஏ.,வும் மனு கொடுத்து, குத்தகைக்கு விட்டால் ஊழலுக்கு வழிவகுக்கும்; அம்மா மண்டபத்தை தனியாருக்கு விடக்கூடாதுனு, வலியுறுத்தினாரு.
இதைக்கண்ட, தி.மு.க.,காரங்க, 'நகராட்சி இடத்தை தனியார் துணிக்கடைக்கு வழங்கிய வள்ளல் பெருந்தகை யார்? என, தெரிந்தால் பொள்ளாச்சி எம்.எல்.ஏ.,வுக்கு தெரியப்படுத்தலாம்,' என, சமூகவலைதளங்களில் விமர்சிக்க துவங்கிட்டாங்க.
அதுக்கு பதிலடி கொடுக்க, 'அம்மா மண்டபத்தை ஏழை, எளிய மக்களுக்கு வாடகைக்கு விடாமல் தனியாருக்கு தாரை வார்ப்பதா,' என பதிவிட்டு வர்றாங்க.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கு. இப்பவே, தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிக்காரங்க, தங்களோட பலத்தை காட்ட, சமூக வலைதளங்களில் மோதிக்கிறாங்க. இனி களம் சூடுபிடிக்கும்னு நினைக்கிறேன்; பரபரப்புக்கு பஞ்சமிருக்காதுனு, சொன்னார்.
ஆண்டு விழாவுக்கான நிதியிலும் கைவைக்கிறதே கல்வித்துறை
உடுமலையில், அரசு பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் புலம்பி கொண்டிருந்தனர். என்ன பிரச்னை என, அவர்கள் உரையாடலை கவனித்தேன்.
பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுங்கனு முதல்ல கல்வித்துறை உத்தரவு போட்டுச்சு. சரி, நிதி அனுப்புவாங்கனு பாத்தா, நீங்க முதல்ல கொண்டாடுங்க. அப்புறம் நிதி அனுப்புறோம்னு கல்வித்துறை அதிகாரிக சொன்னாங்க. நம்மளும் அதை நம்பி ஆண்டு விழாவை ஜோரா கொண்டாடிட்டோம்.
இப்ப பாத்தா, அனுப்பியிருக்கிற நிதி ஐந்தாயிரத்த கூட தாண்டல. ஆண்டுவிழா கொண்டாட்டம் முடிஞ்சு பள்ளியை சுத்தம் செய்யறதுக்கு கூட இந்த நிதி பத்தல. எல்லாத்தையும் ஆசிரியர்கள் தலையிலதான் கட்டணும்னு முடிவு பண்ணிட்டாங்க.
ஆண்டுவிழா கொண்டாடுறதே, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கத்தான். ஆனா, இப்படி நிதி இல்லாம பெயருக்கு நடத்துற விழாவால, எப்படி பெற்றோருக்கு பள்ளி மேல நம்பிக்கை வரும். அரசு பள்ளியில சேர்க்கை அதிகரிக்க, அரசும் கொஞ்சம் செலவு செய்யணும், என, உரையாடலை முடித்து கிளம்பினர்.
குடோன்ல குறையுது எடை கண்காணிக்க எதுங்க தடை
ரேஷன் கடையில ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போடுற அரசாங்கம், குடோன்களை மட்டும் கண்காணிக்கிறது இல்லை என, உடுமலை பஸ் ஸ்டாண்டில், ரேஷன்கடை பணியாளர்கள் இருவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாங்க. அவங்க பேச்சை கவனித்தோம்.
ரேஷன் கடையில முறைகேடுகள கட்டுப்படுத்த அரசாங்கம் ஆயிரத்தெட்டு 'ரூல்ஸ்' போடுது. பயோமெட்ரிக் பதிவு, ப்ளூடூத் டிராக் அப்படி, இப்படின்னு மாசத்துக்கு ஒரு ரூல்ஸ் போட்டு பாலோ பண்ண சொல்றாங்க.
ஆனா, பிரச்னைக்கு முக்கிய காரணத்த கண்டுபிடிச்சு நடவடிக்கை எடுக்க மாட்டீங்கறாங்க. அனைத்து ரேஷன் கடைகளுக்கும், நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து பொருட்கள் அனுப்பறாங்க. அங்கிருந்து எவ்வளவு எடையில பொருட்கள் வெளிய வருதுன்னு கண்காணிக்க, தொழில்நுட்பத்தை கடைபிடிச்சா எல்லா பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.
அதை விட்டுட்டு பொருள் எடை குறையுதுனு நம்ம மேல நடவடிக்கை எடுக்கறாங்க. அங்கிருந்து வரும் போதே எடை குறைவா வந்தா, நாம எப்படி மக்களுக்கு முழு எடையில பொருள் போட முடியும்.
மேலும், டீத்துாள் உள்ளிட்ட பொருட்களை விற்க சொல்லி டார்க்கெட் வைக்கிறாங்க. இதனாலதான், நம்ம டிபார்ட்மென்ட் ஆளுங்க எல்லாம் மன உளைச்சல்ல சுத்திட்டு இருக்காங்கனு பேசிக்கிட்டாங்க.
ஊருக்குள்ள அதிகரிக்குது திருட்டு போலீஸ் அலட்சியத்தால் திக்திக்
உடுமலையில் நண்பரை சந்தித்த போது, புறநகர் பகுதிகளில், திருட்டு சம்பவங்கள் அதிகரித்தும், போலீசார் அலட்சியமாகவே இருக்காங்கனு, பேச ஆரம்பித்தார்.
உடுமலை புறநகர் பகுதியில, கடந்த சில மாதங்களாக, பூட்டிய வீடுகள குறிவைச்சு ஒரு கும்பல் திருட்டுல ஈடுபடுது. புகார் கொடுக்க போனா, போலீசார் அலைய விடுறாங்க. இதனால, புகார் கொடுக்கவே மக்கள் தயங்கறாங்க. இது திருட்டு கும்பலை ஊக்குவிக்கற மாதிரி இருக்கு.
வழக்கமாக திருட்டு சம்பவங்கள் நடந்தா, போலீஸ் தரப்புல பல்வேறு விழிப்புணர்வு பணிகள் துவங்குவாங்க. துண்டு பிரசுரங்கள் வினியோகித்து, குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை என, பல வேலைகள செய்வாங்க.
இப்ப எல்லாம், எந்த விழிப்புணர்வும் பண்ணுறதில்ல. குற்றவாளிகளையும் கைது செய்யறதில்ல. இதனால, நகரிலும், புறநகரிலும், மக்களிடையே திருட்டு குறித்த அச்சம் அதிகரிச்சிருக்கு. போலீசாரோட அலட்சியம் தொடர்ந்தால், திருப்பூர் எஸ்.பி.,யிடம் முறையிட தன்னார்வலர்கள் ஆயத்தமாயிட்டு இருக்காங்கனு, விஷயத்தை சொன்னார்.
நகராட்சி கவுன்சிலர் பதவி காலி ஆளும்கட்சி பிரமுகருக்கு ஜாலி
பொள்ளாச்சி பல்லடம் ரோட்டுல, வாக்கிங் சென்றேன். ரோட்டுல குப்பை அள்ளிட்டு இருந்த துாய்மை பணியாளர்களை ஒருத்தரு அதட்டிட்டு இருந்தாரு. உடன் வந்த நண்பர் கிட்ட, அவரு யாருனு விசாரிச்சேன்.
பொள்ளாச்சி நகராட்சியில, 36 வார்டுகள் இருக்கு. இதுல, 7வது தி.மு.க., கவுன்சிலர் நர்மதா பதவிய ராஜினாமா பண்ணிட்டார். 12வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பழனிசாமி, 21வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் இளமாறன் இருவரும் இறந்து விட்டனர். இதனால், நகராட்சியில மூனு வார்டுகள்ல கவுன்சிலர் பதவி காலியா இருக்கு.
இதுல, 21வது வார்டுல, தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருவர், கவுன்சிலர் கெட்அப்ல உலா வர்றாரு. குப்பை எடுங்க, தண்ணீ விடுங்க, நான் சொல்லறத தான் செய்யணும். அ.தி.மு.க.,காரங்க சொன்னா எதுவும் செய்யக்கூடாதுனு, நகராட்சி ஊழியர்களை ஆட்டிப்படைக்கறாராம்.
நகராட்சி பணிகள் குறித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினா கூட பரவாயில்லை; இவர் எந்த பதவியும் வகிக்காமல் வார்டுக்குள்ள அதிகாரத்துடன் வலம் வருவது வேடிக்கையா இருக்கு. அதிகாரிகள மிரட்டி இன்னும் கவுன்சில் கூட்டத்துக்கு போகாம இருக்காரு. ஆளும்கட்சி பிரமுகர் என்பதால, அதிகாரிகளும் என்ன பண்ணுறதுனு தெரியாம திக்குமுக்காடுறாங்கனு, சொன்னார்.
போலீஸ் பாதுகாப்போட நடந்தது நகராட்சி கவுன்சில் கூட்டம்
வால்பாறை பஸ் ஸ்டாப்பில், நகராட்சி கவுன்சில் கூட்டம் பற்றி, இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சை கவனித்தேன்.
வால்பாறை நகராட்சி கூட்டம் துவங்கினதுமே, தி.மு.க.,வைச்சேர்ந்த இரு கவுன்சிலர்கள், அ.தி.மு.க., வி.சி., என, நாலு கவுன்சிலர்களும், கூட்டம் நடத்தவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டாங்க. வளர்ச்சிப்பணியில முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தாங்க.
நான்கு ஆண் கவுன்சிலர்களும், ஒரே நேரத்தில் பெண் தலைவரை சூழ்ந்ததால, கடைசியில தலைவர் கண்ணீர் விட்டாங்க. கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்துல, அ.தி.மு.க.,வுடன் தி.மு.க.,கவுன்சிலர்களும் கூட்டணி அமைச்சது குறித்து, தி.மு.க., மேலிடத்திற்கு புகார் போயிருக்கு. விவகாரம் இப்படி இருக்க, கடந்த, 26ம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட கூட்டம் போலீஸ் பாதுகாப்போடு நடந்துச்சு.
அப்பவும், தி.மு.க., கவுன்சிலர் மகுடீஸ்வரன் மட்டும் வாக்குவாதம் செய்தாரு. அவரை யாரும் கண்டுக்காததால, கூட்டம் எந்த பிரச்னையும் இல்லாம முடிஞ்சது. தி.மு.க., ஆட்சியில, நகராட்சி கூட்டமே போலீஸ் பாதுகாப்போட நடந்ததுனு, பேசிக்கிட்டாங்க.