அரசு பஸ்களுக்கு ஸ்பேர்ஸ் சப்ளையில்லபழைய மார்க்கெட்டில் பல்பு வாங்குறாங்க
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் நண்பரை அழைத்து வர சென்றேன். பல்பும் கையுமாக நின்று அரசு பஸ் டிரைவர்கள் வேதனையுடன் பேசிக்கொண்டிருந்தனர். என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.
பொள்ளாச்சி பணிமனையில புதுப்பித்தல் பிரிவுக்கு, உதிரி பாகங்கள் முறையாக சப்ளை செய்வதில்லை. ஏர் பில்டர், ஆயில் பில்டர், டீசல் பில்டர், லைனிங் போன்ற பொருட்கள் மட்டுமே புதிதாக வருது. வேறு எந்த புதிய ஸ்பேர் பார்ட்ஸ்களும் கொடுக்கறதில்ல.
நாங்க, சொந்த செலவுல, ெஹட்லைட், வைபர் உள்ளிட்டவைகளை வாங்கி கொடுக்கறோம். கோவை - பொள்ளாச்சி ரூட்ல ஓடுற பெரும்பாலான பஸ்கள்ல ெஹட்லைட் சரிவர வெளிச்சம் இருப்பதில்ல. பல்பு பியூஸ் போனால் பழைய மார்க்கெட்டில் இருந்து வாங்கி கொடுத்து பொருத்தறோம். அரசு பஸ் வாயிலாக வருவாய் பெருக்க அரசு நினைக்குது. ஆனா, அதற்கேற்ப ஸ்பேர் பார்ட்ஸ் சப்ளை செய்து, பஸ்கள பாதுகாப்பா ஓட்டுறதுக்கு நடவடிக்கை எடுக்கறதில்லைனு, வேதனை தெரிவிக்கின்றனர்.
ஸ்கூல்களுக்கு லீவு விட்டாலும்ஸ்பெஷல் கிளாஸ் நடத்தறாங்க!
உடுமலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட பின்னும், பஸ் ஸ்டாப்ல குழந்தைங்க பெற்றோருடன் கூட்டமாக நிக்கறாங்களேன்னு விசாரிச்சோம். 'அத ஏன் கேக்கறீங்கனு' பெற்றோர், மன குமுறலயெல்லாம் கொட்டுனாங்க.
பள்ளி முடிஞ்சு லீவு விட்டாச்சு, ஆன உங்களுக்கெல்லாம் இல்லைனு சில தனியார் பள்ளிகள்ல சிறப்பு வகுப்புகள தொடர்ந்து நடத்துறாங்க. பஸ் வசதி இருந்தாலும், இப்ப அத அனுப்ப மாட்டாங்களாமாம். வண்ண உடையிலதான் அதுவும், 'பார்மல்' ஆன உடையில தான் வரணும்னு ஒரு கண்டிசன் போடுறாங்க.
சிறப்பு வகுப்புகள் வைக்கிறதுல ஒரு நியாயம் வேண்டாமா. கல்வியாண்டு முடிஞ்சு ஒரு வாரம் கூட விடுமுறை விடல. மதிய நேர வெயில்ல மாணவர்கள் சிரமப்பட்டு திரும்பி வராங்க. இதுல சில நாள் முழு நேரம் வேற வகுப்பு இருக்கு.
இதெல்லாம் கல்வித்துறை அலுவலர்களுக்கு தெரியவில்லையா, இல்லை தெரிஞ்சும் கண்டுக்காம விடுறாங்களானு புரியல. இனி இருக்கிற நாட்களையாவது, விடுமுறை விடறதுக்கு கல்வித்துறைதான் நடவடிக்கை எடுக்கணும்னு புலம்பியபடி சென்றனர்.
வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக்கட்டைதி.மு.க.,வினருக்குள் நடக்குது குஸ்தி
வால்பாறை நகராட்சியில் ஏகப்பட்ட குளறுபடி நடக்குது, என, டீ கடைகளில் இரு இளைஞர்கள் பேசிக்கொண்டனர். அவர்கள் பேசியதில் இருந்து...
வால்பாறை நகராட்சியில, மொத்தம் 21 வார்டுகளில், 19 வார்டுல தி.மு.க.,வை சேர்ந்தவங்க கவுன்சிலர்களா இருக்காங்க. அவர்களில் ஒருவரான அழகுசுந்தரவள்ளி தலைவரா இருக்காங்க.
நகராட்சியில சமீப காலமாக வளர்ச்சி பணிகள்ல முறைகேடு நடக்கறதாகவும், தலைவர் தன்னிச்சையா செயல்படுவதாகவும், வரவு, செலவு கணக்கை மன்றக்கூட்டத்தில் சமர்ப்பிப்பதில்லைனு, குற்றச்சாட்டு சுமத்தி கவுன்சிலர்கள் இரண்டு முறை மன்ற கூட்டத்தை நடத்தவிடாமல் போராடுனாங்க.
அ.தி.மு.க., - வி.சி., கட்சி கவுன்சிலர்களுடன், தி.மு.க., கவுன்சிலர்கள், 10 பேரும் கூட்டணி அமைத்து, தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை பதவி நீக்கம் செய்யணும்னு, நகராட்சி கமிஷனரிடம் மனுவும் கொடுத்திருக்காங்க.
சமீப காலமா, கவுன்சிலர்களின் சுயநலத்துக்காக நடத்தும் போராட்டத்தினால் வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடக்கறதுல சிக்கல் ஏற்பட்டிருக்கு. ஆளும்கட்சி கவுன்சிலர்களே 'பல எதிர்பார்ப்புகளோட' வளர்ச்சி பணிக்கு முட்டுக்கட்டை போடுறாங்க. கட்சி மேலிடமும் கவுன்சிலர்கள் மீது கடும் அதிருப்தியில் இருக்கு.
இப்படியே போனா, வரும் சட்டசபை தேர்தல்ல வார்டுக்குள்ள, தி.மு.க.,காரங்க ஓட்டு கேட்க போக முடியாதுனு, பேசிக்கிட்டாங்க.
த.வெ.க.,வுல கடுமையா உழைக்கறாருடாஸ்மாக் ஊழியருக்கு சிக்கலாக போகுது
கிணத்துக்கடவு, கோதவாடிக்கு நண்பரை சந்திக்க, பைக்கில் சென்றேன். வெயில் அதிகமா இருந்ததால, நிழற்கூரையில் ஒதுங்கி நின்றேன். அங்கிருந்த இருவர், த.வெ.க., கட்சி நிர்வாகி பத்தி பேசிகிட்டு இருந்தாங்க. என்னன்னு காது கொடுத்து கேட்டேன்.
கிணத்துக்கடவு டாஸ்மாக் மதுபான கடை பணியாளர் ஒருவர், விஜய் கட்சியில் இருக்காரு உனக்கு தெரியுமா என ஒருவர் ஆரம்பித்தார். அதற்கு, எனக்கும் அவரை தெரியும். அவர் கட்சிக்காக கடுமையா உழைக்கிறாருனு மற்றொருவர் சொன்னார்.
இதோட நிறுத்தாம, இன்னொரு கேள்வி கேட்டார். அது எப்படி அரசு பணியாளர் ஒரு கட்சிப் பொறுப்பில் இருக்கிறாரு, இதை யாரும் கவனிக்கலையே அப்படின்னு கேள்வி எழுப்பினாரு.
இது எல்லாத்துக்கும் தெரியாது ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும். சமீபத்துல கூட விஜய் படப்பிடிப்புக்காக மதுரைக்கு வந்தாரு. அங்க, அவரை பார்க்க போன ஒரு போலீஸ்காரரை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க.
பார்க்க போனதுக்கே இந்த நிலைமையா, அப்போ கட்சியில சேர்ந்து கடுமையா உழைக்கற இவரை மட்டும் விட்டு வைப்பாங்களா. உளவு பிரிவு போலீசார், மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியிருப்பாங்கனு பேசிக்கிட்டாங்க.
குடிபோதையில அடிச்சுக்கிறாங்கரோட்டுல தினமும் திக்திக் பயணம்
பொள்ளாச்சியில், கோட்டூர் ரோட்டில் நண்பரை சந்தித்தேன். 'நண்பா, இந்த ரோட்டில் ரொம்ப பிரச்னையாக இருக்குது; ராத்திரி நேரத்துல ஏதாவது தகராறு நடந்துட்டே இருக்கு,' என, பிரச்னையை பேச ஆரம்பித்தார். அவர், கூறியதில் இருந்து...
கோட்டூர் ரோட்டுல பெட்ரோல் பங்க் பக்கத்துல, ஜோதிநகர் குடியிருப்புகளுக்கு செல்லும் வழித்தடம் இருக்கு. இந்த ரோட்டுல, 'குடி'மகன்கள் அட்டகாசம் ஒரு பக்கம் அதிகமாயிட்டே போகுது. இன்னொரு பக்கம், கோழி மற்றும் இறைச்சி கழிவுகளை ராத்திரியில கொண்டு வந்து கொட்டிட்டு போறாங்க. கடும் துர்நாற்றம் வீசுது; தொற்று நோய் பரவுகிறது.
இதெல்லாம் போதாதுனு, 'குடி'மகன்கள் சிலர் தினமும் அடிதடி தகராறு பண்ணுறாங்க. சமீபத்துல, இருட்டு பகுதியில இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதுபோல, அடிக்கடி நடக்குது. பைக்ல போனாலும், பயந்து பயந்து போக வேண்டியிருக்கு.
இங்க, கண்காணிப்புல போலீசார் ஈடுபடுறது இல்ல. அதனால, ஏதாவது ஒரு பிரச்னை நடக்கறது சகஜமாயிருச்சு. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் கண்காணிப்பு பண்ணணும்னு சொல்லி முடித்தார்.