ADDED : ஜூன் 15, 2025 09:47 PM
ரேஷன் ஊழியர் கோரிக்கைக்கு இன்னும் 'விடியல்' கிடைக்கல!
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, நண்பர், 'ரேஷன் கடைக்காரங்க புலம்புறாங்க,' என பிரச்னைய பேச ஆரம்பித்தார். அவங்களுக்கு என்ன பிரச்னைனு விசாரிச்சேன். அவர் சொன்னதில் இருந்து...
ரேஷன் கடைக்காரர்களோட கோரிக்கை எல்லாம், தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த பின் நிறைவேறும் என காத்திருந்தாங்க. ஆனா, அவங்களோட எந்த கோரிக்கைக்கும் அரசு செவி சாய்க்கவில்லையாம்.
கடந்த, ஏழு வருஷமா ஊதிய ஊயர்வு வழங்கணும்னு கோரிக்கை விடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையாம். ஒவ்வொரு சட்டசபை கூட்டத்தொடரின் போதும், அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து, அவங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கு.
ரேஷன் கடைகளுக்கு தனித்துறை வேண்டும்னு கேட்டுட்டு இருக்காங்க. அந்த கோரிக்கையும் நிறைவேறலை. விலைவாசி உயர்ந்தாலும் சம்பளத்த அரசாங்கம் உயர்த்தலனு அதிருப்தியில இருக்காங்க. இந்த ஆட்சியில ரேஷன் ஊழியர்களுக்கு 'விடியல்' கிடைக்கலைனு சொல்லி முடித்தார்.
ஊராட்சியில தனி ராஜாங்கம் கண்டுக்காத ஒன்றிய நிர்வாகம்
பருவநிலை மாற்றத்தினால், கிராமங்களில் நோய்த்தடுப்பு பணிகள் எப்படி இருக்குனு விசாரிக்க, உடுமலை ஒன்றிய அலுவலகத்துக்கு விசிட் அடித்தோம். அங்க என்னடானா, ஊராட்சிகள்ல இப்ப என்ன நடக்குதுனு எங்களுக்கு தெரியலனு அதிகாரிக சொல்றாங்க. என்ன பிரச்னைனு, விசாரித்தோம்.
குடிநீர் வரலனு கிராம மக்கள் சாலை மறியல் செய்யறாங்க. ஆனா, அப்படி ஒரு விஷயம் நடந்ததை, ஊராட்சி நிர்வாகம் ஒன்றிய நிர்வாகத்துக்கு தகவல் பதிவு செய்யல.
ஊராட்சி நிர்வாகத்துல என்ன நடக்குதுனு ஒன்றியமும் கண்டுக்கறதில்ல. அதேபோல ஒன்றிய நிர்வாகத்துக்கு, மக்கள் பிரச்னைகள எதுக்கு சொல்லணும்னு ஊராட்சி நிர்வாகங்களும் அலட்சியமா இருக்காங்க. இப்படிதான் போயிட்டு இருக்கு ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம். இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டா தான், கிராமத்துல வளர்ச்சி பணிகளெல்லாம் தொய்வின்றி நடக்கும்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிஞ்சு, தனி அலுவலர் அதிகாரத்துல, ஊராட்சி நிர்வாகம் நடக்குது. ஊராட்சி செயலரும், தனி அலுவலரும், சரியா செயல்பட்டா தான், வளர்ச்சி பணியெல்லாம் சரியா நடக்கும். ஒன்றியமும், ஊராட்சியும் எதிரெதிரா இருந்தால், ஊராட்சியில எதுவுமே நடக்காதுனு, ரெண்டு தரப்பும் புரிஞ்சுக்கணும்னு, சொன்னாங்க.
'விளையாட' முடியாம போயிருமோனு போட்டிய விரைந்து முடிக்க போறாங்க!
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானாவில், வாக்கிங் போயிட்டு இருந்தேன். முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நடத்துறதுல, நம்ம மாவட்டத்துல ரெம்பவே அவசரப்படுறாங்கனு, விளையாட்டு வீரர்கள் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். என்ன விஷயம்னு கவனித்தேன்.
தமிழகத்துல, ஒவ்வொரு வருஷமும், முதல்வர் கோப்பைக்கான, 27 விளையாட்டு போட்டிகள் நடக்குது. அதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று விளையாடுறாங்க. குறிப்பாக, ஒவ்வொரு வயது பிரிவுக்கு ஏற்ப மாவட்ட, மண்டல, மாநில அளவில் போட்டி நடத்தறாங்க.
வழக்கமா இப்போட்டி, அக்., செப்., மாசத்துல துவங்கி, ஜன., பிப்., மாசம் வரைக்கும் நடக்கும். ஆனா, 2026ல், சட்டசபை தேர்தல் நடக்கறதால, இந்தாண்டு இறுதிக்குள்ளையே, போட்டிகள நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்காங்க.
அதேநேரத்துல, திடீர்னு தேர்தல் அறிவிப்பு வெளியானா, போட்டி நடத்த முடியாமல் போய்விடுமோ என்ற கவலையை விட, விளையாட்டு போட்டி நடத்தி அதுக்கு ஒதுக்கற நிதில கமிஷன் அடிக்க முடியாம போயிருமோங்கற அச்சத்திலேயே போட்டியை விரைந்து முடிக்க திட்டமிட்டிருக்காங்கனு, துறை ரகசியத்தை பேசிக்கிட்டாங்க.
வளைந்து கொடுக்காத கமிஷனர் வாணியம்பாடிக்கு துாக்கியடிப்பு
வால்பாறை நகராட்சியில, கட்சிக்காரங்க நிபந்தனைக்கு பணியாத கமிஷனரை மாத்திட்டாங்களாமே, என, டீக்கடையில் அரசு ஊழியர் இருவர் பேசிக்கொண்டனர். அவங்க உரையாடலில் இருந்து...
வால்பாறை நகராட்சிக்கு, ஆறு மாசத்துக்கு முன், கமிஷனராக ரகுராமன் சார் வந்தாரு. புதுசா வந்த அவரிடம் ஆளும்கட்சிய சேர்ந்தவங்க, ஏற்கனவே செய்த பழைய வேலைக்கு பில் போட்டு கொடுங்க, செய்யாத வேலைக்கு பில் போடுங்கனும், நாங்க சொல்ற கட்சிக்காரங்களுக்கு தான் டெண்டர் கொடுக்கணும்னு, ஏகப்பட்ட கன்டிஷன் போட்டிருக்காங்க.
ஆனா, ஆளும்கட்சி உருட்டல் மிரட்டலுக்கும், ஆசை வார்த்தைக்கும் அவரு அடிபணியல. இந்த பிரச்னையால, ரெண்டு முறை மன்றக்கூட்டமும் நடக்கல.
ஆளும்கட்சிக்கு அவர் எதிரா வேலை செய்யற மாதிரி குற்றசாட்டை சுமத்தி, அவரை உடனடியாக வேறு நகராட்சிக்கு மாத்தணும்னு ஆளும்கட்சி முக்கிய பிரமுகர், அமைச்சருக்கு அழுத்தம் கொடுத்திருக்காரு. கட்சிக்காரங்க சொல்லறத கேட்டு, நகராட்சி கமிஷனர வாணியம்பாடிக்கு மாத்திட்டாங்க.
வால்பாறையில, வரவர எல்லா துறையிலயும் ஆளும்கட்சிக்காரங்க தலையீடு அதிகமாயிருச்சு. கடிவாளம் போடலைனா வரும் தேர்தல்ல ஓட்டு கேட்க வார்டுக்குள்ள ஆளும்கட்சிக்காரங்க யாருமே போக முடியாதுனு, பேசிக்கிட்டாங்க.
அறிவிப்பே இல்லாம நடக்குது மக்களுக்கான சிறப்பு முகாம்
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு, அவர் ஏதோ புலம்பிக் கொண்டே இருந்தார். என்னன்னு கேட்டேன்.
போன வாரம், சமூக நலத்துறை சார்பில், மூனு நாட்கள் சிறப்பு முகாம் நடத்தினாங்க. ஆனா, அதுக்கு, எந்த அறிவிப்பும் வெளியிடல. அதுக்கு மாறா, முகாம் நடக்கிறதுக்கு ஒரு நாள் முன்னாடி இரவு நேரத்துல அதிகாரிகளுக்கு தகவல் சொல்லியிருக்காங்க. இப்படி பண்ணுனா முகாம் நடக்கறது மக்களுக்கு எப்படி தெரியும்.
இந்த ஒரு முகாம் தான், இப்படி இருக்குதோனு பார்த்தா, மாவட்ட கலெக்டர் தலைமையில போன வாரம் முகாம் நடக்கறதா இருந்துச்சு. ஆனா, திடீர்னு முகாம் நடக்கற தேதிய மாத்திட்டாங்க. இத பத்தி மக்கள் கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினா பரவாயில்லை. ஆனா அதையும் அதிகாரிங்க சரியா பண்ணல.
மக்களுக்காக தான் முகாமே நடக்குது. ஆனா, மக்களுக்கு முன்கூட்டியே தகவல் சொல்லாம முகாம் நடத்துறாங்க. கொஞ்சமா பெட்டிஷன் வந்தா, இந்த ஏரியாவுல பிரச்னையே இல்லைனு உயர் அதிகாரிக மனசுல பதியும்னு, இங்கிருக்கற அதிகாரிக நினைச்சுட்டு இருக்காங்க. இனிமேலாவது முகாம் நடக்கறத முன்கூட்டியே சொன்னா, மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும்னு, சொன்னார்.