ADDED : ஜூலை 06, 2025 10:53 PM
நகருல இருக்கற பிரச்னைய கண்டுக்காமஊருக்கு வெளியே நடக்குது 'வசூல்'
உடுமலை பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல மழைக்கு ஒதுங்குன பைக் ஓட்டுநர்கள், 'ஊருக்குள்ள இவ்ளோ பிரச்னை இருக்கு. ஆனா, புறநகருல நின்னு வசூல் பண்ணிட்டு இருக்காங்கனு' பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க உரையாடலில் இருந்து...
உடுமலை பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, ஐஸ்வர்யா நகர், தாராபுரம் ரோடு, நுாறு அடி ரோட்டை இணைக்கும் அனுஷம் ரோடு, பைபாஸ் ரோடு, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, ராஜேந்திரா ரோடுகள இணைக்கும் மையப்பகுதியா இருக்குது.
இதுல, ராஜேந்திரா ரோடு பகுதியில், போக்குவரத்து போலீசார் பணியில் இருக்காங்க. அதிகாரிகளும் பெரும்பாலும் அங்கு முகாமிட்டிருப்பாங்க. ஆனா, எதிரே நான்கு ரோடு சந்திக்கும் பகுதியில, டூ-வீலர்களும், கார்களும் தாறுமாறாக ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தறாங்க. பைபாஸ் ரோட்டையும் பாதி அளவுக்கு ஆக்கிரமிச்சு, ஆம்னி பஸ்கள், வாகனங்கள நிறுத்தறாங்க.
இதனால, இந்த ரோடுகள்ல போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அதிகரிச்சுட்டே இருக்கு. எதிரே இருக்கும் போக்குவரத்து போலீசார் இந்த ஆக்கிரமிப்புகள கண்டுக்கறதில்ல.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம்னு பல கி.மீ.,துாரம் உள்ள ஊர்களுக்கும், புற நகர பகுதியிலும் முகாமிட்டு, 'வசூல்' பணியில மட்டும் தீவிரம் காட்டுறாங்க. நகரத்துக்குள்ள இருக்கற இந்த முக்கிய பிரச்னைய கண்டுக்கறதில்லனு புலம்பினர்.
வார்டுல எந்த பணியும் நடக்காததாலஆளுங்கட்சி கவுன்சிலருக திணறுறாங்க
வால்பாறை பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த முதியவர்கள், 'நம்ம நகராட்சியில என்னென்னமோ நடக்குதுப்பா...' என பேசிக்கொண்டிருந்தனர். அவங்க பேச்சை காதுகொடுத்து கேட்டேன்.
வால்பாறை நகராட்சியில, 21 வார்டு இருக்கு. கோடிக்கணக்கில வருமானம் வருது. ஆனா, வார்டுல எந்த வேலையும் நடக்கல. நான்கு மாசமா கவுன்சில் கூட்டமும் நடக்கல.
நகராட்சில, வளர்ச்சி பணியே நடக்காம, பல கோடி ரூபா ஊழல் நடந்திருக்குனு, ஆளுங்கட்சி நகராட்சி தலைவருக்கு எதிரா, அவங்க கட்சி கவுன்சிலர்களே போராட்டம் நடத்தினாங்க. இதனால, ஆறு மாசமா எந்த வேலையும் நடக்கல.
உள்ளாட்சி தேர்தல்ல, மாஜி அமைச்சர் தயவுல கொலுசு, பணம் கொடுத்து, ஆளுங்கட்சி கவுன்சிலர் 20 பேரு ஜெயிச்சாங்க. ஆனா, வரப்போற தேர்தல்ல, அதெல்லாம் எடுபடாது போலிருக்கு. கவுன்சிலரு உள்ளிட்ட ஆளுங்கட்சிக்காரங்க வார்டு பக்கமே போக முடியாது போலிருக்கு. மக்கள் கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. அதனால தான், கவுன்சிலருக புலம்பிட்டு இருக்காங்க போலிருக்குனு, பேசிக்கிட்டாங்க.
பள்ளி மானியத்துல கமிஷன் எதிர்பார்ப்புஅத்துமீறுது ஆளுங்கட்சி 'அட்ராசிட்டி'
பொள்ளாச்சி டி.இ.ஓ., ஆபீஸ்ல இருந்து பள்ளிக்கு திரும்பிய தலைமையாசிரியர்கள் இருவர், 'மனசாட்சியே இல்லாம பள்ளி மானியத்துல கமிஷன் கேட்கறாங்களே' என, ஆதங்கமாக பேசிக்கிட்டாங்க. என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துல இருக்க அரசு பள்ளிகள்ல பள்ளி மேலாண்மை குழுக்கள், ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை மறு சீரமைப்பு செய்யப்படுது. இந்த குழுவுக்கு மொத்தம், 24 பேர உறுப்பினரா தேர்ந்தெடுக்கணும். பெற்றோர் உறுப்பினர்கள் -15 பேரு, முன்னாள் மாணவர்கள் நாலு பேரு, கல்வியாளர் ஒருத்தரு, உள்ளாட்சி பிரநிதிகள் ரெண்டு பேரு, ஆசிரியர் ஒருத்தரு, ஒருங்கிணைப்பாளர் ஒருத்தரு தேர்ந்தெடுத்திருக்கோம்.
ஒவ்வொரு முறை கூட்டம் நடத்தும் போதும், உள்ளாட்சி பிரநிதிகளின் தலையீடு அதிகரிச்சுட்டே இருக்கு. சிலர், பள்ளி மானியத்திலும் கமிஷன் கொடுக்க வேண்டும்னு கேட்கறாங்க. தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி தலைமையாசிரியருக்கு நெருக்கடி கொடுக்கறாங்க. இந்த பிரச்னைய துறை ரீதியான உயரதிகாரிகளோட கவனத்துக்கும் கொண்டு போயிருக்கோம். என்ன நடக்கப்போகுதுனு பொருத்திருந்து பார்ப்போம்னு, சொன்னாங்க.
பள்ளியில 'ஸ்மார்ட் டிவி' இருக்குபயன்படுத்த தான் அக்கறையில்ல
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர், 'அரசு பள்ளிகள்ல தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தறாங்க. ஆனா, பயன்படுத்தறதில்லனு, பேசிக்கிட்டாங்க. என்வென்று விசாரித்தேன்.
அரசு பள்ளிகள்ல தொழில்நுட்ப வசதி இருக்கு, ஆனா... இல்லைங்கிற நிலைதான் இப்ப இருக்கு. மாணவர்கள் பயன்படுத்த தான், அரசு பள்ளிகள்ல 'ஸ்மார்ட் டிவி' வழங்கியிருக்காங்க. ஆனா, உடுமலை சுற்றுப்பகுதியில, பல அரசு துவக்கப்பள்ளிகள்ல இந்த 'டிவி'யை மாணவர்களுக்கு போட்டு காட்டுறதே இல்லை.
இதுகுறித்து, ஆசிரியர்களுக்கான 'குரூப்'ல வேற தொடர்ந்து 'டிவி'யை பயன்படுத்துங்கனு சொல்லிக்கிட்டே இருக்காங்களாம். ஆனாலும், சில பள்ளிகள்ல பயன்படுத்தாம இருக்கறதால, இப்பெல்லாம் 'குரூப்'ல அந்தந்த பள்ளி பெயரை குறிப்பிட்டு, 'டிவி' ஆன் செய்யுங்கணு கல்வித்துறை அலுவலர்கள் பதிவு போடுறாங்களாம்.
மாணவர்கள் பயன்படுத்த, அரசு பள்ளிகளுக்கு தொழில்நுட்ப வசதிய அரசாங்கம் வழங்குது. ஆனா, அத பயன்படுத்த கூட ஆசிரியர்கள் முக்கியத்துவம் அளிக்கிறதில்லனு, அதிருப்தியோடு சொன்னாங்க.
செயல்படாத 'மொபைல் ஆப்' டென்ஷன்ல சுத்தும் போலீசார்
பொள்ளாச்சியில இருக்கற மருந்து கடைக்கு, மருந்து வாங்க பேயிருந்தேன். அங்கு ரெண்டு போலீஸ்காரங்க நின்னுட்டு இருந்தாங்க. அதுல ஒருத்தர் கிட்ட, 'வாக்கி டாக்கி' இருந்துச்சு. அதுல, 'எப்.ஆர்.எஸ்., ஆப்' வேலை செய்யல, அதனால நைட் ரவுண்ட்ஸ் போகறப்ப, போட்டோ எடுத்து குற்றவாளிகள கண்டுபிடிக்க முடியலைனு உரையாடல் போயிட்டு இருந்துச்சு. என்ன பிரச்னைனு போலீஸ்காரங்க கிட்ட விசாரிச்சேன்.
போலீஸ்க்காகவே பிரத்யேகமா, எப்.ஆர்.எஸ்., ஆப் கொடுத்திருக்காங்க. இத, மொபைல்போன்லயும், ஸ்டேஷன் கம்ப்யூட்டர்லயும் போட்டு கொடுத்திருக்காங்க. நைட் ரவுண்ட்ஸ் போகும் போதும், வாகன சோதனை செய்யும் போதும், யாரு மேலயாவது சந்தேகம் ஏற்பட்டா, இந்த ஆப்ல போட்டோ எடுத்தால், அதுல பதிவு பண்ணி வச்சிருக்க குற்றவாளிகளோட போட்டோவோட மேச் பண்ணி காட்டும்.
இந்த 'ஆப்' வச்சு, குற்றவாளிகளயும், காணாம போனவங்களையும் கண்டுபிடிக்கலாம். ஆனா, இந்த 'ஆப்' சில நாட்களா வேலை செய்யல. ஆனா, இந்த 'மொபைல் ஆப்' பயன்படுத்தி குற்றவாளிகள சீக்கிரம் பிடிக்கணும்னா எப்படி முடியும். இதனால ரொம்ப டென்ஷன் தான் ஆகுது. இந்த அப்ளிகேஷனை சீக்கிரமா சரி செய்தா போதும்னு, சொன்னாங்க.
சட்டசபை தேர்தல் வரப்போகுதுஆளுங்கட்சியினர் வரப்போறாங்க!
'தேர்தல் வந்தா தான் நம்ம பிரச்னையெல்லாம் ஆளுங்கட்சிக்காரங்களுக்கு தெரியும் போல,' என பெதப்பம்பட்டி யூனியன் ஆபிஸ் முன், மரத்தடியில் பெண்கள் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். அவங்க பேசியதிலிருந்து...
மகளிர் உரிமைத்தொகைக்கு பல தடவ விண்ணப்பிச்சும் பணம் கிடைக்கல. இன்னைக்கு ஆளுங்கட்சிக்காரங்க, பெதப்பம்பட்டி வர்றதா சொன்னாங்க. சரி அவங்கள பார்த்து சிபாரிசு செய்ய சொல்ல வந்தேன். கொடி கட்டுனா காருங்க நிறைய நிக்குது. ஆனா, கட்சிக்காரங்க யாரையும் காணோம், என்றார் ஒரு பெண்மணி.
அதற்கு மற்றொருவர், கட்சிக்காரங்க எல்லாம், யூனியன் ஆபிசுக்குள்ள, கிராமங்களுக்கு திருமூர்த்திமலை தண்ணீ வராம இருக்கறது பத்தி பேசிட்டு இருக்காங்க.
நம்ம ஏரியாவுலயும் ரொம்ப வருஷமா குடிதண்ணீ பிரச்னை இருக்குது. அப்பவெல்லாம் யாரும் கண்டுக்கல. இப்ப தேர்தல் வர்றதால, மக்கள் பிரச்னையெல்லாம் ஆளுங்கட்சிக்காரங்களுக்கு தெரிய வருது. அதிகாரிங்க கூட ஆலோசனை நடத்தறாங்க. நாமளும் இவங்கள நம்பிட்டு இருக்கோம்.
இதெல்லாம் முன்னமே பேசி தீர்த்திருந்தா, நாமும் இப்படி காத்திருக்க வேண்டியது இருக்காது, என்றபடி, அங்கிருந்து கிளம்பினர்.

