
இதுக்கு பேரு தான் 'ைஹடெக் லேப்' வெந்து புலம்பும் பள்ளி ஆசிரியர்கள்
பொள்ளாச்சியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றிருந்தேன். அங்கிருந்த ஆசிரியர்கள், 'ைஹடெக் லேப்'களை பூட்டி வச்சிருந்தாங்க. என்னாச்சுனு விசாரிச்சேன்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துல அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 'ஹைடெக் லேப்' வசதி ஏற்படுத்தியிருக்காங்க. சில மேல்நிலைப் பள்ளிகளில், 20 கம்ப்யூட்டர்கள வைச்சு இரு 'ஹைடெக் லேப்' அமைச்சிருக்காங்க.
ஆனா, பி.எஸ்.என்.எல்., வாயிலாக ஒரு இணையதள இணைப்பு மட்டுமே கொடுத்திருக்காங்க. தினசரி 'டேட்டா'வுக்கு, மாசத்துக்கு, 850 முதல் 950 ரூபா மட்டுமே ஒதுக்கீடு செய்யறாங்க. எல்லா 'லேப்'களுக்கும், 'டேட்டா'வை பயன்படுத்த முடியாததால மாணவர்கள் பாதிக்கறாங்க.
சில பள்ளிகள்ல, 'டேட்டா' பயன்பாடு கிடைக்காததால, 'ஹைடெக் லேப்' பூட்டப்பட்டிருக்கு. ஒவ்வொரு ஆசிரியருக்கும் லேப்டாப் வழங்கி, அனைத்து பணிகளையும் டிஜிட்டல் மயமாக்கியிருக்காங்க. ஆனா, இணையதள சேவை இருந்தும், 'வைபை' வசதி இல்லாததால, கம்ப்யூட்டரை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க முடியாம காட்சிப்பொருளா வச்சிருக்கோம். இதுக்கெல்லாம், கல்வித்துறை தீர்வு காண வேண்டும்னு, சொன்னாங்க.
அவசரகதியில் நடந்த ஆய்வுக்கூட்டம்; தேசியகீதம் பாட மறந்த அதிகாரிகள்
வால்பாறைக்கு வந்த சட்டசபை ஆய்வுக்குழுவினர், அவசரகதியில் கூட்டம் நடத்தி வேகமாக நடைய கட்டிட்டாங்கனு, டீக்கடையில் இருவர் பேசிக்கொண்டனர். அவர்கள் பேசியதில் இருந்து...
சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர் வால்பாறையில ஆய்வு செய்ய, தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் குழுவினரும், அரசு அதிகாரிகளும் ஒரு நாளைக்கு முன்னதாகவே வந்துட்டாங்க.
சொகுசு தங்கும் விடுதிகளில் தங்கியவங்க, மறுநாள் காலையில, 10:30 மணிக்கு நகராட்சி அலுவலகத்துல ஆய்வுக்கூட்டம் நடத்தினாங்க. அப்ப, தேசியகீதம் கூட பாடாம அவசரகதியில அரைகுறையா கூட்டத்த நடத்தினாங்க.
அதுக்கப்பறம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தொழிலாளர் தங்கும் விடுதி, தீயணைப்புத்துறை போன்ற இடத்துல கண் துடைப்பு ஆய்வை முடிச்சுட்டு, அரை மணி நேரத்துல கிளம்பிட்டாங்க. இந்த குழு, எதுக்காக வால்பாறை வந்தாங்கனு புரியல.
வால்பாறையில மக்கள் பிரச்னை ஏராளமா இருக்கு. அதையெல்லாம் ஆய்வு பண்ணுல. ஆய்வுக்கு வந்த அதிகாரிக சுற்றுலா பயணியரை போல், வால்பாறையில போட்டோ ஷூட் நடத்திட்டு போயிட்டாங்க. மொத்தத்துல, ஆய்வுக்குழு வருகையால எந்த பலனும் இல்லைனு, பேசிக்கிட்டாங்க.
மகளிரை கண்டால் வேகமெடுக்கும் அரசு டவுன் பஸ்களால் அதிருப்தி
கிணத்துக்கடவு யூனியன் ஆபீஸ் அருகே, நண்பரை சந்தித்தேன். 'ஓட்டுக்காக திட்டத்தை அறிவித்தவர்களும் கிண்டல் பண்ணுறாங்க. அரசு ஊழியர்களும் அலட்சியமா இருக்காங்கனு' செய்திக்கு தீனிபோடும் வகையில் பேச ஆரம்பித்தார்.
கிணத்துக்கடவு யூனியன் ஆபீஸ்க்கு வந்துட்டு போகறவங்களும், பணியாளர்களும், பஸ்ஸ்டாப்பில் நின்னு பஸ் ஏறி போயிட்டு வர்றாங்க. ஆனா, ஒரு சில நாட்கள் இந்த பஸ்ஸ்டாப்ல லேடீஸ் நின்னா, எந்த அரசு டவுன் பஸ்சும் நிக்கறது இல்ல.
லேடீசை பார்த்தாலே, இலவச டிக்கெட்னு சொல்லி பஸ்சை நிறுத்தாம அசுர வேகத்துல ஓட்டுறாங்க. பஸ் ஸ்டாப்பில் ஆம்பளக நிற்கறத பார்த்தா உடனே பஸ் நிற்குது. இங்க மட்டும் இப்படி கிடையாது. கிணத்துக்கடவு சுற்று வட்டாரம் முழுக்க இப்படித்தான் நடக்குது. இதனால லேடீஸ் ரொம்ப கஷ்டப்படுறாங்க.
ஆளும்கட்சி பிரமுகர்கள பார்த்தா, 'நாங்க யாரும் இலவச பயணம் கேட்கல. ஓட்டுக்காக உங்க கட்சி தலைமை தான் இந்த திட்டத்தை செயல்படுத்துச்சு. உங்க அமைச்சரே, 'ஓசி' பயணம்னு கிண்டல் பண்ணுறார்.
பஸ் ஊழியர்களும் லேடீஸ் நிற்கறத பார்த்தா, வேகமா பஸ்சை ஓட்டிட்டு போறாங்க. நாங்க டிக்கெட்டுக்கு காசு கொடுத்து போக தயாரா இருந்தாலும், பஸ் நிற்கறதில்லைனு,' நம்ம ஊரு பெண்கள் எல்லாரும் கோரஸ் ஆக திட்டுறாங்கனு சொன்னாரு.
'வருவாரா தொகுதி பொறுப்பாளர்' பட்டிமன்றம் நடத்தும் உ.பி.,க்கள்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, தி.மு.க., நிர்வாகிகள் காரசாரமா பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்க உரையாடலை கவனித்தேன்.
உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளராக, அமைச்சர் சக்ரபாணிய தி.மு.க., தலைமை நியமிச்சிருக்கு.
நியமனத்துக்கு பின், இரு தொகுதிகளிலும் அமைச்சர் சாமிநாதன் ஆதரவாளர்கள் தனி கோஷ்டியாக பிரிந்து செயல்படுறாங்க. போன மாசம் உடுமலைக்கு முதல்வர் ஸ்டாலின் வர்றதா தேதி குறிச்சாங்க. முதல்வரை வரவேற்க, சாமிநாதன் ஆதரவாளர்கள் தடபுடல் ஏற்பாடு பண்ணினாங்க. இரு நாட்கள் நிகழ்ச்சிக்கு, பல்வேறு ஏற்பாடுகள் நடந்தது. ஆனால், தொகுதி பொறுப்பாளரா நியமிச்ச அமைச்சர் சக்ரபாணி, உடுமலை, மடத்துக்குளம் பக்கமே தலைகாட்டல.
அவரது வீட்டு திருமண நிகழ்ச்சியில பிசியா இருக்காரு. வரவேற்பு ஏற்பாடுகளை கவனிக்க சக்ரபாணி வராததால, அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில இருக்காங்க.
முதல்வர் குடும்பத்தில் துக்க நிகழ்ச்சி, அவரோட மருத்துவ சிகிச்சையால, உடுமலை நிகழ்ச்சிய ஒத்தி வச்சிருந்தாங்க. இப்ப, உடுமலை நிகழ்ச்சிக்கு முதல்வர் வரப்போறதா பேச்சு எழுந்திருந்திருக்கு.
இந்த முறையாவது, அமைச்சர் சக்ரபாணி களமிறங்கி கலக்குவாரா, இல்லை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பாரானு, உடுமலை உடன்பிறப்புகள் பட்டிமன்றம் நடத்திட்டு இருக்காங்க.
யாருனு தெரியாம 'போஸ்' கொடுத்தாரு காங்., கட்சியில காமெடி கலாட்டா
பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சொன்னதில் இருந்து...
பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில ஆய்வுக்காக வந்த சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர், காங்., கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகைக்கு பொள்ளாச்சி காந்தி சிலை அருகே கட்சியினர் வரவேற்பு கொடுத்தாங்க.
கட்சி நிர்வாகிகள் அவரோட போட்டி போட்டு போட்டோ எடுத்துக்கிட்டாங்க. அங்கு வந்த மூதாட்டி ஒருத்தர், வந்திருக்கறவரு யாருனு விசாரிச்சுட்டு இருந்தார். நானும் ஒரு போட்டோ எடுத்துக்கறேனு ஆர்வமா கேட்டாரு. இதை கேட்ட கட்சியினர், அந்த அம்மாவை தலைவரு கிட்ட அழைச்சுட்டு போய் நிறுத்தி போட்டோ எடுத்துக்க வச்சாங்க. அவரும், அந்தம்மாவுக்கு சால்வை போர்த்தி போஸ் கொடுத்தாரு.
அங்கிருந்தவங்க, அந்தம்மா கிட்ட நீங்க யாரு, கட்சியில என்ன பொறுப்புல இருக்கீங்கனு கேட்டாங்க.அதுக்கு அந்தம்மா, 'நீங்க எல்லாம் கூட்டமா நின்னு போட்டோ எடுத்துக்கீட்டீங்க. அதனால நானும் போட்டோ எடுத்துக்கிட்டேன். வந்திருந்த தலைவரு யாருனு எனக்கு தெரியாது சாமீனு சொல்லி சிரித்தபடியே அங்கிருந்து கிளம்பினாருனு சொன்னார்.
'ஸ்மார்ட் கிளாஸ்' பேருக்கு நடக்குது இணைய சேவை முடங்கி கிடக்குது
உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில் நடந்த, பள்ளி மேலாண்மை கூட்டம் குறித்த செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். அங்கு, ஸ்மார்ட் கிளாஸ் அலப்பறைகள் குறித்து, ஆசிரியர்கள் புகார்களை அடுக்கினர். அவர்கள் கூறியதில் இருந்து...
அரசு துவக்க பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்கள், நடுநிலைப் பள்ளிகளில் உயர்தர ஆய்வகம் அமைக்க பட்டிருக்கு. ஜூலை 15ம் தேதி முதல் இந்த வகுப்புகளை செயல்படுத்தணும்னு, அரசு அறிவிச்சிருக்கு.
ஆனா, இப்ப பார்த்தா, 80 சதவீத பள்ளிகளில் இணைய சேவைக்கான 'மோடம்' வேலை செய்யவே இல்லை. இது பற்றி, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துல புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. அதனால, கல்வித்துறையில புகார் செய்தோம். அவங்க, மறுபடியும் முதல் இருந்து ஆரம்பிக்கற மாதிரி, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துல புகார் பண்ண சொல்றாங்க.
அவங்க கிட்ட புகார் கொடுத்து மன்றாடியும் தீர்வு கிடைக்கலைனு, கல்வித்துறையில புகார் சொன்னா, மறுபடியும் சுத்தி விடுறாங்க. இதனால, அரசு பள்ளிகளில் முழுமையாக 'ஸ்மார்ட் கிளாஸ்' செயல்படலனு, விபரத்த சொன்னாங்க.