
கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைச்சாச்சு; பயிற்சி கொடுக்கத்தான் ஆளில்லை
உடுமலையில், அரசுப்பள்ளி ஒன்றில் செய்திக்காக போயிருந்த போது, ஆசிரியர்கள சந்தித்தேன். அவங்க கூறியதில் இருந்து...
திருப்பூர் மாவட்ட அரசு நடுநிலைப்பள்ளிகள்ல நடப்பாண்டுல இருந்து உயர்தர கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைக்கப்பட்டிருக்கு. இணையதள பிரச்னை, முறையான மின்வசதினு பல்வேறு இடர்பாடுகள கடந்து, இப்பதான் ஒவ்வொரு ஆய்வகமாக செயல்பாட்டுக்கு வந்திட்டு இருக்கு.
ஆனா, இப்பவும் ஆய்வகம் மட்டும்தான் செயல்பாட்டுக்கு வந்திருக்கே தவிர, ஆசிரியர்கள் இன்னும் தயாராக இல்லை. அடிப்படையான கம்ப்யூட்டர் பயிற்சி எந்த அளவுக்கு மாணவர்களுக்கு பயன்படும்.
அந்த அடிப்படை பயிற்சி மட்டும்தான் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கு. கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்து தெரிஞ்சவங்கள, கடந்தாண்டு, 'எமிஸ்' பணியாளர்களா அரசுப்பள்ளிகளில் கல்வித்துறை நியமிச்சுது.
அதுவும் சில பள்ளிகளுக்கு மட்டும் தான். இதனால உயர்தர ஆய்வகம் பயன்பாட்டுக்கு இருந்தும், அத முழுமையாக அடுத்தடுத்த நிலைக்கு கொண்டுசெல்ல முடியாம ஆசிரியர்கள் திணறிட்டு இருக்காங்க.
இந்த நடைமுறை பிரச்னைய கண்டும் காணாம, கல்வித்துறையும் ஆய்வகம் செயல்பட்டுச்சானு பதிவு பண்ண செல்லி உத்தரவு மட்டும் போடுதுனு, புலம்பினாங்க.
சிலைகள் கரைக்கற இடத்த மாத்திட்டாங்க; அதிகாரிகள கண்டித்து போராட போறாங்க
குடிமங்கலம் நாலு ரோடு சந்திப்பு பகுதியில, விநாயகர் சிலையை விசர்ஜனம் செய்ய போயிட்டு வந்த ஹிந்து அமைப்பினர் சிலர் கோபமா பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.
உடுமலை, குடிமங்கலம் சுற்றுப்பகுதியில பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள வழக்கமா உடுமலை நகருக்கு அருகில் இருக்கற பி.ஏ.பி., கால்வாயில் தான் கரைப்பாங்க. துாரத்துல இருந்து வர்ரவங்களும் சீக்கிரமா சிலையை கால்வாயில விட்டுட்டு ஊருக்கு திரும்புவாங்க. கால்வாயில குறைவா தண்ணீர் திறக்கப்படுவதால பாதுகாப்பா இருந்துச்சு.
ஆனா, இந்த முறை, விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய அமராவதி ஆற்றுக்கு அனுப்பிட்டாங்க. மடத்துக்குளம் பகுதியிலுள்ள அமராவதி ஆற்றுக்கு ஊர்வலம் செல்ல நீண்ட நேரமானது. ஆற்றில் போதிய பாதுகாப்பும் இல்லை.
பி.ஏ.பி., பாசன காலமாக இருந்தும் திட்டமிட்டே கால்வாயில் தண்ணீரை நிறுத்திட்டாங்க. சிலை கரைச்சா கால்வாய் தண்ணீர் மாசுபடும் என தெரிவிக்கும் அதிகாரிகள், ஆண்டு முழுக்க கால்வாயில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தாங்க.
அப்போதெல்லாம் எதையும் கண்டுக்காத அதிகாரிகள், இப்ப மட்டும் பாசன நீர் மாசுபடுதுனு அக்கறை காட்டுவது போல் நடந்துக்கறாங்க. இந்த குளறுபடிக்கு பின்னணியில் இருக்கற அதிகாரிகள கண்டறிந்து, அவங்க மேல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த போகிறோம்னு, சொன்னாங்க.
புதுசா மெஷின் கொடுத்தா போதுமா பஸ்ல 'சார்ஜ்' செய்ய வசதியில்லையே!
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் நண்பரை அழைத்து வர சென்றபோது, அரசு பஸ் கண்டக்டர்கள் சிலர் பேக்கரிக்கு ஓடினாங்க. என்ன விஷயம்னு விசாரிச்சேன்.
அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி பணிமனையில இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள்ல, டிக்கெட் பிரின்ட் செய்யும் 'டச் ஸ்கிரீன் எலக்ட்ரானிக் டிக்கெட்டிங் மெஷின்' (இ.டி.எம்.) கொடுத்திருக்காங்க.
இந்த வசதி வந்ததால, கண்டக்டர்கள் வேகமாக டிக்கெட் கொடுக்க முடியுது. கடந்த ஒரு வருஷமா இந்த மெஷின் பயன்பாட்டுல இருக்கு. இப்ப இந்த மெஷின் பேட்டரியின் 'ஸ்டோரேஜ்' அடிக்கடி குறைஞ்சுருது. புதிய பஸ்கள்ல, சார்ஜ் செய்ய வசதி இருக்கு. ஆனா, பழைய பஸ்கள்ல, சார்ஜ் செய்ய 'பிளக் பாயின்ட்' இல்ல.
கிராமத்துல, குறிப்பிட்ட நேரம் பஸ்சை நிறுத்தும்போது, டீக்கடை, பேக்கரிகள்ல, இ.டி.எம். மெஷின்களை சார்ஜ் செய்யறோம்.
புறநகர் பஸ்சை விட டவுன் பஸ்களிலேயே அதிகப்படியான பேசஞ்சர்ஸ் பயணிக்கிறாங்க. அந்த பஸ்கள்ல, இ.டி.எம். மெஷினை, சார்ஜ் செய்தவற்கு எந்த வசதியும் கிடையாது. டிக்கெட் சீட்டு வைத்திருந்தாலும், கணக்கு விபரங்கள் சரிபார்க்கறதுல குழப்பம் ஏற்படுது.
புதுசா பேட்டரியும் தர மாட்டங்க, பஸ்சிலும் 'பிளக் பாயின்ட்' ஏற்படுத்த மாட்டங்கா. ஆனா, கலெக் ஷன் மட்டுமே குறையக்கூடாதுனு சொல்லுவாங்கனு, கண்டக்டர்கள் புலம்புகின்றனர்.
த.வெ.க. போஸ்டர கிழிச்சுட்டாங்க; கண்டுபிடிக்க களமிறங்கிட்டாங்க!
கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு, த.வெ.க., கட்சியை சேர்ந்த சிலர் கோபமா பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன பிரச்னைனு கேட்டேன். அதற்கு அவர், பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்குற கட்டடத்துல த.வெ.க. கட்சி போஸ்டர் ஒட்டியிருந்தோம். அந்த போஸ்டரை யாரோ கிழிச்சிட்டாங்க.
இந்த இடத்துல மத்த கட்சிக்காரங்க போஸ்டர் ஒட்டியிருக்காங்க. அந்த போஸ்டரை யாரும் கிழிக்கல. அவங்கெல்லாம், வருஷக்கணக்கா இங்க போஸ்டர் ஒட்டிட்டு இருக்காங்க. ஆனா புதுசா த.வெ.க., போஸ்டர் ஒட்டினா மட்டும் உடனே கிழிக்கிறாங்க.
எங்க கட்சிய பார்த்தா மத்த கட்சிகளுக்கு பயம். அதனால தான் போஸ்டரை கிழிச்சு, எங்கள வெறுப்பேத்தறாங்க. இதுக்கெல்லாம் நாங்க பயந்துக்க மாட்டோம்.
யாரை வீழத்தணும், யாரை வீட்டுக்கு அனுப்பணும்னு, எங்க தலைவர் விஜய் சொல்லிட்டாரு. தேர்தல் வரட்டும்னு காத்திருக்கோம். தேர்தல் முடிவு வரும்போது எங்க 'பவர்' என்னனு, மத்த கட்சிக்காரங்களுக்கு தெரியும்.
ஆனாலும், இப்ப போஸ்டரை கிழிச்சது குறித்து, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்து இருக்கிறோம். இந்த வேலைய செஞ்சது யாருனு கண்டுபிடிச்சிடுவோம்னு, சொன்னாங்க.
திருட்டு கும்பல் கைவரிசை அதிகரிப்பு; போலீஸ் கண்காணிப்பு தீவிரமில்லை
உடுமலை டி.எஸ்.பி., அலுவலகம் அருகே நண்பரை சந்தித்த போது, 'திருட்டு கும்பல் கைவரிசை அதிகரிச்சுட்டு இருக்கு, போலீசார் கண்டுக்க மாட்டீங்கறாங்கனு' பேச ஆரம்பித்தார்.
உடுமலையில, தாராபுரம் ரோடு, மின் நகர், அய்யலுமீனாட்சி நகர், இந்திரா நகர், வாஞ்சிநாதன் நகர், நேரு நகர் உள்ளிட்ட பகுதியில, 20க்கும் மேற்பட்ட வீடுகள்ல திருட்டு கும்பல் கைவரிசை காட்டியிருக்கு.
பகல் மற்றும் இரவு நேரத்துல, ஆட்கள் இல்லாத வீடுகள கண்காணிச்சு, வீட்டுக்கதவை உடைச்சு உள்ளே புகுந்து, பணம், நகையை திருடியிருக்காங்க. முதியவர்கள் இருந்த வீடுகள்ல அவங்கள மிரட்டி, பணத்த பறிச்சுட்டு போயிருக்காங்க. இதுனால, குடியிருப்பு பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்திருக்காங்க.
தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்தும், வழக்கு பதிவு செய்யாம, குற்றவாளிகளையும் கண்டுபிடிக்காம, போலீசார் இழுத்தடிக்கறாங்க. 25 பவுன் நகை திருடப்பட்டால், ஐ.ஜி., விசாரணை நடத்த வேண்டும், என்ற விதிமுறை இருக்கறதால, புகார் கொடுப்பவர்களிடம், குறைந்தளவு நகை மட்டுமே திருடப்பட்டதாக, புகார் எழுதி வாங்கறாங்க. திருடர்களை கண்டு பிடித்தாலும், குறைந்தளவு நகை மட்டுமே திரும்ப கிடைக்கும் போலிருக்கு.
குடியிருப்பு பகுதிகளுக்கு போலீசார் ரவுண்ட்ஸ் போய் கண்காணிக்கறாங்களோ இல்லையோ, திருட்டு கும்பல் நல்லா கண்காணிக்கறாங்க. இனியாவது, போலீசார் கவனம் செலுத்தினா திருட்டு நடக்கறது குறையும்னு ஆதங்கப்பட்டார்.
கவுன்சிலர்களையே கலங்கடிச்சுட்டாங்க; பொதுமக்கள் போயிருந்தா அவ்ளோதான்!
பொள்ளாச்சி நகராட்சி சாதாரண கவுன்சில் கூட்டம் சமீபத்துல நடந்துச்சு. இந்த கூட்டத்துல, தீர்மானம் நிறைவேறிய பின், கவுன்சிலர்கள் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தனர்.
ஆபீஸ்ல இருக்குற பைலையே தொலைக்கிற நிலைமையில அதிகாரிங்க இருக்காங்கனு குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இனி, இது போல நடக்காம இருக்க, ஏதாவது நடவடிக்கை எடுக்கவும், காரசாரமாக பேசினாங்க.
அதுல, எதிர்கட்சி கவுன்சிலர் ஒருத்தரு, 'உயர்கோபுர மின்விளக்கு அமைப்பது எப்போது என கேட்டதற்கு,' ஒரு அதிகாரி, 'அடுத்த கூட்டத்துக்குள்ள வேலைய முடிச்சுடலாம்,' என, பதில் சொன்னாரு. இதை கேட்டு ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், 'அப்போ, அடுத்த கூட்டம் வரும் வரை என்ன செய்ய போறீங்க.தேர்தல் நெருங்குது, சீக்கிரம் வேலையை முடிச்சாத்தான், மக்கள சந்தித்து ஓட்டு கேட்க முடியும்னு,' என கடிந்து பேசினாங்க.
ஒரு சில கவுன்சிலர்கள் கூட்டம் முடிந்தும், பொறியாளர் அறைக்கே சென்று, தொலைஞ்சு போச்சுன்னு சொன்ன பைலை கண்டுபிடிக்கிற வரை போக மாட்டோம்னு, நாற்காலியில உட்கார்ந்துட்டாங்க. ஒரு வழியா பைலை கண்டுபிடிச்ச பிறகு அங்கிருந்து கலைந்து போனாங்க.
நகராட்சியில கவுன்சிலர்கள் கேட்டே பைலை கண்டுபிடிக்க முடியல, சாதாரண மக்கள் ஏதாவது வேலையா போனா அவ்ளோதான். அலைக்கழிச்சு... திக்குமுக்காட விடுவாங்கனு புரிந்தது.