ADDED : செப் 28, 2025 11:51 PM

ஒதுக்கற நிதி எங்க போகுதுனு தெரியல; என்.எஸ்.எஸ்., முகாம் எப்படி நடத்தறது
பொள்ளாச்சியில் டி.இ.ஓ., ஆபீஸில் இருந்து வந்த உடற்கல்வி ஆசிரியரை சந்தித்தேன். என்.எஸ்.எஸ்., சார்புல விழிப்புணர்வு முகாம் எப்படி நடத்தறதுனு தெரியல என, பேச ஆரம்பித்தார்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துல, 36 அரசு மேல்நிலைப்பள்ளிகள் இருக்கு. ஆனாலும், ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான பள்ளிகளில் தான், என்.எஸ்.எஸ்., அமைப்பு ஏற்படுத்தியிருக்காங்க. சில பள்ளிகள்ல செயல்பாடு பெயரளவில் மட்டுமே இருக்கு.
இந்த அமைப்பை செயல்படுத்த வேண்டும்னா, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் திட்ட அலுவலரா இருக்கணும். வருஷத்துக்கு, ஏழு நாட்கள் நடத்தப்படும் முகாமுக்கு, 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே அரசாங்கத்துல இருந்து பணம் கொடுக்கறாங்க.
அதிலும், வேடிக்கை என்னென்னா, மாதந்தோறும் ஏதேனும் 3 முதல் 4 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த மூவாயிரம்ரூபாய் நிதி ஒதுக்கணும். இந்த தொகை பலவருஷமா விடுவிக்கப்படவே இல்ல.
தமிழக அளவில், 1,800க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகள்ல, என்.எஸ்.எஸ்., அமைப்பு உள்ள நிலையில,அந்த தொகையை கணக்கிட்டால், மாசத்துக்கு தோராயமா, 54 லட்சம் வரை விடுவிக்கப்படாமல் இருக்கு. இந்த தொகை எங்கே போகுதுனு தெரியலனு ஆதங்கப்பட்டாரு.
தலைவர் - கவுன்சிலர்கள் மோதல; ரகசியமா பேசி தீர்த்து வைத்த எம்.பி.,
வால்பாறை நகராட்சியில், எம்.பி., தலையிட்டதால் தலைவர் - கவுன்சிலர்களுக்கு இடையேயான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்குனு, பஸ் ஸ்டாண்டில் இரு இளைஞர்கள் பேசிக்கொண்டனர்.
வால்பாறை நகராட்சியில, மொத்தம் உள்ள 21 வார்டுகள்ல, 19 வார்டு தி.மு.க.,வசம் இருக்கு. அ.தி.மு.க., வி.சி.,வசம் தலா ஒரு வார்டு இருக்கு. நகராட்சி தலைவர் - கவுன்சிலர்களிடையே எழுந்துள்ள உச்சகட்ட மோதலால், கடந்த ஆறு மாதங்களா மன்றக்கூட்டம் நடக்கல.
வார்டுகளில் எந்த வளர்ச்சிப்பணிகளும் நடக்கல. வார்டுல ஏகப்பட்ட பிரச்னை இருக்குது. இதனால, சட்டசபை தேர்தலில் கவுன்சிலருக வார்டு பக்கமே ஓட்டு கேட்க போக முடியாத நிலை ஏற்பட்டிருக்கு. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி ரகசிய கூட்டம் நடத்தினாரு.
வளர்ச்சிப்பணிக்கு கவுன்சிலருக யாரும் தடையாக இருக்கக்கூடாது. கட்சிக்கு எதிராக செயல்படும் கவுன்சிலருக மேல கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க தயங்காது. மக்களின் நலனில் அக்கறை கொண்டு, வரும் மன்றக்கூட்டத்துல கவுன்சிலருக முழு ஒத்துழைப்பு கொடுக்கணும். தலைவர் மீதான குற்றசாட்டு விசாரிக்கப்படும்னு சொல்லியிருக்காரு.
இந்நிலையில, வரும், 30ம் தேதி மன்றக்கூட்டம் நடக்கப்போகுது. தலைவர், கவுன்சிலர்களிடையே இருந்த மோதல எம்.பி., தீர்த்து வச்சிருக்காருனு பேசிக்கிட்டாங்க.
டெண்டர் விட்டு ரெண்டு மாசமாச்சு; மக்கள் கஷ்டப்படுறத கவனியுங்க!
கிணத்துக்கடவு, சொக்கனூருக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். புலம்பிக்கொண்டே இருந்த நண்பரிடம் என்னனு விசாரிச்சேன்.
முத்துக்கவுண்டனூர் செல்லும் ரோட்டை பாத்தீங்களா, அதுலயாருமே போக முடியாத படி 'டேமேஜ்' ஆயிருக்கு. இதனால, கோவிலுக்கு போறவங்க, ஸ்கூல் பசங்கன்னு எல்லாரும் பாதிக்கப்படுறாங்க.
கிணத்துக்கடவு ஒன்றியத்துல இருக்குற, பல கிராமப்புற ரோடு சரி செய்ய அரசு தரப்பில் டெண்டர் விட்டாங்க. இத கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்துல டெண்டர் எடுத்தாங்க. இதுல நம்ம ஊரு முத்துக்கவுண்டனூர் ரோடும் இருந்துச்சு. ஆனா, இப்ப வரைக்கும் ரோடு பணி துவங்கவே இல்ல.
கடைசியில பாத்தா பொள்ளாச்சி எம்.பி., வந்து பூமி பூஜை போட்டதுக்கு அப்புறம் தான், ரோடு பணிய துவங்குவாங்கனு தெரிஞ்சுது. கடைசியில ஒரு வழியா, நேற்று பூமி பூஜை போட்டுட்டாங்க.
எம்.பி.,க்காக முக்கிய ரோடு பணி துவங்காம ரெண்டு மாசமா கிடப்புல போட்டிருந்தாங்க. மக்கள் பிரச்னைய தீர்க்கணும்னு நினைச்சு பணிய துவங்கியிருந்தா ரெண்டு மாசத்துல ரோடு வேலைய முடிச்சு திறப்பு விழாவுக்கு எம்.பி.,யை கூப்பிட்டிருக்கலாம். இங்க மட்டும் இப்படியா, இல்ல எல்லா ஊர்லயும் இப்படித்தானா என தெரியலனு விஷயத்த சொன்னார்.
ஒப்பந்தம் போடவும், ரத்து செய்யவும்; சப்-ரிஜிஸ்டர் ஆபீஸ்ல 'கப்பம்' அவசியம்
பொள்ளாச்சி - உடுமலை ரோடு கோமங்கலம்புதுாரில், நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன். பணம் பறிக்கிற இடம் போல மாறியிருக்குனு, வேதனையோடு பேசத்துவங்கினார். என்னவென விசாரித்த போது, நண்பர் சொன்னதில் இருந்து...
வங்கியில் லோன் வாங்கி வீடு கட்டலாம்னு ஆசையாக பலரும் டாக்குமென்ட் எல்லாம் கொடுக்கறாங்க. வீடு கட்ட லோன் அப்ரூவலுக்காக காத்திருக்கறாங்க. ஒரு வழியாக லோன் அப்ரூவல் ஆனதும், வங்கியும், கடன் பெறுவோரும் ஒப்பந்தம் போடணும். மூலஆவணங்கள ஒப்படைச்சதும், ஒப்பந்தம் (எம்.ஓ.டி) போட்டத கோமங்கலம் சப் -ரிஜிஸ்டர் ஆபீஸ்ல பதிவு செய்ய, 0.5 சதவீதம் ஸ்டாம்ப் கட்டணம் செலுத்தணும்.
இப்ப, பொறுப்புல இருக்கற பெண் அதிகாரி ஒருத்தருக்கு, அஞ்சாயிரம் ரூபா தனியாக கவனிக்க வேண்டுமாம். பணத்த கொடுத்தா தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பாங்களாம்.
இத விட, கடன் கட்டி முடிச்சதும், எம்.ஓ.டி.,யை ரத்து செய்ய சப் -ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு போகும் போதும், அஞ்சாயிரம் ரூபா கப்பம் கேட்கறாங்க.
வங்கியில கடன் வாங்கி வீடு கட்டினாலும், ஒப்பந்தத்த பதிவு செய்யவும், ரத்து செய்யவும் தனித்தனியா கப்பம் வசூலிச்சு மனச நோகடிக்கறாங்கனு, சொன்னார்.
பதவிக்காலம் முடிஞ்சும் 'பவர்' குறையல; ஊராட்சியில ஆளும்கட்சியினர் ஆதிக்கம்
உடுமலை ஒன்றிய அலுவலகத்துல, சில அதிகாரிகள சந்திச்சேன். அப்ப, நம்ம மக்கள் பிரதிநிதிகளுக்கு பதவிக்காலம் முடிஞ்சும், 'பவர்' குறையலைனு பேச ஆரம்பிச்சாங்க. அதிலிருந்து...
ஒன்றியத்துல ஊராட்சி தலைவர், வார்டு கவுன்சிலர், யு.சி., டி.சி., பதவிக்காலம், கடந்த ஜன.,5ம் தேதியோடு முடிந்தது. இப்ப, சிறப்பு அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர்கள் நிர்வாகம் நடக்குது.
ஆனால, உடுமலை ஒன்றியத்துல இருக்கற பெரும்பாலான ஊராட்சிகள்ல, இன்றும் பழைய தலைவர்களே ஆதிக்கம் செலுத்திட்டு இருக்காங்க. வளர்ச்சி பணி, துாய்மை பணி, குடிநீர், கட்டட அனுமதி என அனைத்து பணிகளிலும், தலையிட்டு 'பவர்' காட்டுறாங்க.
ஒன்றியம் மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள்ல ஆளும்கட்சியினர் சொல்படியே நிர்வாகம் நடக்குது. இதில் ஒரு சாம்பிளாக, ராவணாபுரம் ஊராட்சியில, நடப்பு நிதி ஆண்டுக்கான ஏ.ஜி.ஏ.எம்.டி - 2 திட்டத்துல, விவசாய விளை பொருட்கள் இருப்பு வைக்கும் குடோன் கட்டியிருக்காங்க. அதுல, பழைய தலைவர் பெயரையே எழுதி, அறிவிப்பு பலகையும் வச்சிருக்காங்க. பதவிக்காலம் முடிஞ்சாலும் ஆளும்கட்சிக்காரங்க ஆட்டம் போடுறாங்கனு. அவங்க சொல்லறத கேட்கற அதிகாரிகளா நியமிக்கறாங்கனு, அதிருப்திய வெளிப்படுத்தினாங்க.