ADDED : அக் 12, 2025 10:45 PM
மீண்டும் பினாமி பேருல பட்டாசு கடை ஆட்டத்த ஆரம்பிச்சுட்டாரு அதிகாரி பொள்ளாச்சி சப்-கலெக்டர் ஆபீஸ்ல நண்பரை சந்தித்தேன். அவர், கிணத்துக்கடவுல அரசு அதிகாரி ஒருத்தரு, பட்டாசு கடை வைக்க போறாராம், விஷயம் தெரியுமானு கேட்டு, விபரத்த சொல்ல ஆரம்பிச்சாரு.
போன வருஷம் தீபாவளிக்கு கிணத்துக்கடவு பகுதியில் வி.ஏ.ஓ. ஒருவரு பினாமி பேருல பட்டாசு கடை போட்டு நல்ல லாபம் பார்த்தாரு. இது குறித்து சப்-கலெக்டர் வரைக்கும் புகார் தெரிவிச்சும், எந்த நடவடிக்கையும் எடுக்கல.
அவரு, கிணத்துக்கடவு தாலுகாவுல வி.ஏ.ஓ.வா இருந்தா தான் பிரச்னை வருதுன்னு, இப்போ ஆனைமலை தாலுகாவுக்கு மாறுதல் வாங்கிட்டு போயிட்டாரு.
இந்த வருஷமும், கிணத்துக்கடவுல பினாமி பேருல பட்டாசு கடை போட வேலைய ஆரம்பிச்சுட்டாரு. இதுக்கு லைசன்ஸ் எடுக்க இவரே எல்லா பக்கமும் நேர்ல போய் வேலைய முடிச்சுட்டாராம்.
அவரோடு குடும்பத்துக்கு சிவகாசியில பட்டாசு பிசினஸ் இருக்காம். அதனால, பல்க்கா வாங்கிட்டு வந்து இங்க கடை போடுறாரு. இவரு பட்டாசு கடை போடுற விஷயம் மத்த கடைக்காரங்களுக்கு எல்லாம் தெரிஞ்சு, முன்கூட்டியே, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பிட்டாங்க.
ரெண்டு வருஷமா நம்ம தொழில கெடுக்கறதே இவருக்கு வேலையா போச்சு. அரசு அதிகாரியா இருந்துட்டு இப்படி பினாமி பேருல பட்டாசு கடை போடுறதுக்கு அரசு ஊழியர் பணிவரன்முறையில இடமிருக்கானு புலம்புறாங்கனு, சொன்னாரு.
புதர் சூழ்ந்த பூங்காவ பராமரிக்கறதா நகராட்சி நிதியை 'சுரண்டு'றாங்க வால்பாறையில, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பூங்காவுக்கு நகராட்சி அதிகாரிகள் கோடிக்கணக்கில் செலவு பண்றாங்கனு, இளைஞர்கள் பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன விஷயம்னு கவனித்தேன்.
வால்பாறை நகரில் சுற்றுலா பயணியரை மகிழ்விக்க பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4.15 ஏக்கருல, கடந்த 2019ல் பூங்கா அமைக்க கலெக்டர் உத்தரவிட்டாரு. அதுக்கப்புறம், 6 கோடி ரூபாய்ல, நகராட்சி சார்பில் தாவரவியல் பூங்கா அமைச்சாங்க.
சரிவான இடத்துல பூங்கா இருக்கறதால, கனமழை பெய்யறப்ப, பூங்காவுல பாதிப்பு ஏற்படும், அந்த இடம் தகுதியில்லைனு ஆரம்பத்திலேயே பொதுப்பணித்துறை அதிகாரிக சொல்லியிருக்காங்க.
ஆனாலும், அ.தி.மு.க., ஆட்சியில, அவசரக்கோலத்துல பூங்காவை அமைச்சாங்க. தி.மு.க., ஆட்சியில பூங்காவில் பராமரிப்பு பணி கூட முறையா இல்லாததால, பூங்கா புதர் சூழ்ந்து அலங்கோலமா இருக்கு. ஆனா பராமரிப்புங்கற பேருல, இடையிடையே பில் போட்டு நகராட்சி நிதியை சுரண்டுறாங்க.
இடம் என்னவோ பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. ஆனா, பூங்கா மட்டும் நகராட்சிக்கு சொந்தம்னு சொல்லி, மக்கள் வரிப்பணத்தை சுரண்டுறது இப்ப வெளிச்சத்துக்கு வந்திருக்குனு பேசிக்கிட்டாங்க.
முதல்வர் கோப்பை போட்டிக்கு பதிவு அதிகம்; பங்கேற்பு குறைவு பொள்ளாச்சி கல்வி அலுவலக ரோட்டில், உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர் ஆதங்கத்தோடு பேசிக்கிட்டு இருந்தாங்க. என்னனு விசாரிச்சேன்.
தமிழகத்துல, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்த, 37 கோடி ரூபா நிதி ஒதுக்கியிருக்காங்க. அந்த நிதியில, சமீபத்தில் மாவட்ட அளவிலான போட்டி நடத்தினாங்க.
இப்போட்டிக்கு, பதிவு எண்ணிக்கைய அதிகரித்து காட்டுவதற்காக, மாவட்டத்துல இருக்கற அனைத்து பள்ளி, கல்லுாரிகள சேர்ந்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் என எல்லாருக்கும் அழைப்பு கொடுத்தாங்க.
மாவட்ட அளவிலான போட்டி, கோவையில நடந்துச்சு. ஆனா, போட்டியில பங்கேற்க, தொலைதுார ஊர்கள்ல இருந்து, வீரர், வீராங்கனையர் பங்கேற்க போனப்ப, அவர்களுக்கு தினப்படி மற்றும் பயணப்படி வழங்கல. இந்த விஷயத்த அறிந்த, மாணவ, மாணவியர் பலர், விளையாட்டுல ஆர்வம் கொண்டு பதிவு செய்தும், போட்டியில் பங்கேற்கல. போட்டி நடத்த அரசாங்கம் நிதி ஒதுக்கியிருக்கு. ஆனா, பங்கேற்க போறவங்களுக்கு வழங்க வேண்டிய தினப்படி, பயணப்படி கொடுக்காததால, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு பதிவு அதிகமிருந்தாலும், பங்கேற்பு குறைஞ்சிருக்குனு, விபரத்தை சொன்னாங்க.
சி.எம். சார் கொடுத்தாரு பட்டா அளந்து கொடுக்க அலைக்கழிப்பு பெதப்பம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் மரத்தடியில், பெண்கள் கும்பலாக நின்று புலம்பி கொண்டிருந்தனர். அவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து...
ரொம்ப வருஷமா வீடு கட்ட இடமில்லாததால எல்லா முகாமிலும் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்தோம். ஒரு வழியாக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு இந்த மனுவெல்லாம் கிடைச்சு, பயனாளிகள் பட்டியல தயாரிச்சாங்க. பெதப்பம்பட்டி பக்கத்துல இடம் தேர்வு செஞ்சாங்க.
ரெண்டு மாசத்துக்கு முன் உடுமலைக்கு வந்த சி.எம்., கையால இலவச வீட்டு மனை பட்டாவும் கொடுத்தாங்க. பல வருஷ போராட்டத்துக்கு விடிவு கிடைச்சிருக்குனு சந்தோஷப்பட்டோம்.
ஆனா, அந்த சந்தோஷம் நிலைக்காது போல. பட்டா கிடைச்சும், இடத்தை அளந்து கொடுக்க இழுத்தடிக்கிறாங்க. ரெண்டு மாசமாக அளவீடு செஞ்சு தர சொல்லி, ஒவ்வொரு ஆபீசா அலையறோம்.
அளந்து கல் நட்டி கொடுத்தாத்தான் குடிசையாவது போட முடியும். அப்புறம்தான் வீடு கட்டும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும். சி.எம்., கையால கொடுத்த பட்டாவுக்கே இந்த நிலைமைனா, பிற அரசு விழாவுல கொடுத்த பட்டா நிலைமை எல்லாம் என்னன்னு தெரியல.
சம்பந்தப்பட்ட அதிகாரிங்க இப்படியே இழுத்தடிச்சா, பட்டா நகலை சி.எம்.,க்கு மறுபடியும் அனுப்பி வைக்கிறத தவிர வேற வழியில்லைனு, பேசிக்கிட்டாங்க.
வடமாநிலத்தவரை இலக்கு வச்சு புகையிலை பொருள் விற்கறாங்க பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுல நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன். தடை செய்வதே அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கத்தான் போலிருக்குனு, பேச ஆரம்பித்தார்.என்னனு விசாரிச்சேன்.
தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மறைமுகமாக ஜரூரா நடக்குது. கோட்டூர் ரோட்டுல இருக்கற, டாஸ்மாக் பார்ல, விற்பனை செய்ய பதுக்கிய புகையிலை பொருட்களை போலீஸ் பிடிச்சாங்க.
இதுபோல, நெகமம், கப்பளாங்கரை, கோப்பனுார் புதுார், சேரிபாளையம் பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தாராளமாக நடக்குது. இங்கு, சிலர் வாடகைக்கு குடோன் பிடித்து, புகையிலை பொருட்களை ஸ்டாக் வச்சு விற்குறாங்க.
அவங்களுக்கு, வடமாநில தொழிலாளர்கள் தான் இலக்கு. அவற்றை அதிக விலைக்கு விற்று, கல்லா கட்டுறாங்க. இத யாரும் கண்டுக்காததால கஞ்சாவும் விற்க ஆரம்பிச்சுட்டாங்க. போலீசுக்கும் மாசமாசம் 'கப்பம்' கட்டுறதால, எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்காங்க. ஒரு சிலர் லாபம் பாக்கவும், போலீஸ் மாமூலுக்காகவும், இளம் தலைமுறையே பாதிக்குதுனு, ஆதங்கப்பட்டார்.