ADDED : அக் 26, 2025 08:43 PM
போனஸ்ல நன்கொடைக்கு பிடித்தம் ஆளுங்கட்சி சங்கம் 'அட்ராசிட்டி' பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்து கழக ஊழியர்களான நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன்.நண்பர், 'தொ.மு.ச.வுல உறுப்பினரா இருக்கற போக்குவரத்து தொழிலாளர்கள் எல்லாரும், சங்க நிர்வாகிகள் மீது ஆதங்கத்துல இருக்காங்க' எனக்கூறினார். அவங்களுக்கு தான் 'போனஸ்' கொடுத்தாங்களே, அப்புறம் என்ன பிரச்னைனு, கேட்டேன்.
அதற்கு, அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸா, 16,800 ரூபாய் கொடுத்தாங்க. அட்வான்ஸாக, 20 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொள்ளவும் அறிவிச்சதால எல்லாரும் மகிழ்ச்சியில இருந்தாங்க.
ஆளுங்கட்சி சங்கமான தொ.மு.ச. சார்பில், அவங்க சங்கத்துல இருக்கற தொழிலாளர்களோட போனஸில் இருந்து, 800 ரூபா தனிச்சையாக பிடித்தம் செய்துட்டாங்க. முன்கூட்டியே தகவல் தெரியாததால் தொழிலாளர்கள், வங்கி கணக்கில், 16 ஆயிரம் ரூபாய் தான் வந்திருக்கு, மீதி பணத்தை எப்ப கொடுப்பீங்கனு அதிகாரிக கிட்ட கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.
தொ.மு.ச. நிர்வாகிகள் குழுவில், 800 ரூபாய் நன்கொடைக்காக பிடித்தம் செய்திருப்பதாக தெரிவித்து இருக்காங்க. கோவை மண்டலத்துல மொத்தமுள்ள, 3,853 தொ.மு.ச. உறுப்பினர்களிடம் இருந்து, தலா, 800 ரூபா பிடிச்சு இருக்காங்க.
இதுநாள் வரைக்கும் நன்கொடையா, 400 ரூபா தான் பிடிச்சாங்க. இப்ப, இரு மடங்கு ரூபா பிடிச்சிருக்காங்க. இதுக்கெல்லாம் யார் கிட்ட ஒப்புதல் வாங்கி, பணத்தை பிடிச்சாங்கனு 'வாட்ஸ் ஆப்' குழுவுல பகிரங்கமா ஆதங்கத்தை வெளிப்படுத்தினாங்க. ஆனாலும் எந்த பலனும் இல்லைனு, நண்பர் சொன்னார்.
அகற்றினாலும் தொடரும் ஆக்கிரமிப்பு களமிறங்குமா நெடுஞ்சாலைத்துறை கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். நண்பரோ, வடசித்தூர் ரோடு ஆக்கிரமிப்பு பற்றி தெரியுமானு கேட்டு, பேச ஆரம்பித்தார்.
வடசித்துார் ரோட்டோரத்துல கடை வச்சிருக்கிறவங்க, கொஞ்சம் கொஞ்சமா நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு பண்ணி, பல வருஷமா வருமானம் பாத்துட்டு இருந்தாங்க.
ஆனா, சில மாதங்களுக்கு முன்னாடி, நெடுஞ்சாலைத் துறையில் அதிகாரிகள் எல்லாம் மாறிட்டாங்க. இந்த ரோடு பற்றி அதிகாரிகள் காதுக்கு தகவல் போயிருக்கு. அதிகாரிக உடனடியா களத்துல இறங்கி ஆக்கிரமிப்பு செய்த இடத்தை காலி பண்ணினாங்க.
இப்போ, கடை வைத்திருக்கிறவர்கள் நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க, நாங்க மீண்டும் கடைய விரிவுபடுத்துறோம்னு சொல்லிட்டு, பழையபடி ரோட்டோரம் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.
இதனால, இந்த ரோட்டுல வண்டி நிறுத்த இடமில்ல. அடிக்கடி டிராபிக் ஜாம் ஆகுது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதை கவனிச்சு, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, ரோட்டை விரிவுபடுத்தணும். இதுக்கு, அதிகாரிகள் சாட்டையை சுழற்றணும். அப்ப தான், தீர்வு கிடைக்கும்னு சொன்னார்.
அனுமதியில்லாத தங்கும் விடுதிகள் தாறுமாறா கட்டணம் வசூலிக்கறாங்க வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வர்றதாலே தங்கறதுக்கு வீடு கூட கிடைக்கறதில்லனு பஸ் ஸ்டாண்டில் இரு இளைஞர்கள் பேசிக்கொண்டனர். அவர்கள் பேசியதில் இருந்து...
வால்பாறையோட இயற்கை அழகை பார்க்கவும், பக்கத்து மாநிலத்துல இருக்கற அதிரப்பள்ளி அருவிக்கு போகறதுக்கு அதிகப்படியான டூரிஸ்ட் வர்றாங்க. அவங்க தங்கறதுக்காக, தங்கும் விடுதி, ரிசார்ட்கள் அதிகளவில் கட்டியிருக்காங்க.
வால்பாறையில உள்ள வீடுகள கூட காட்டேஜ்களா மாற்றிட்டாங்க. இதனால, வெளியூரிலிருந்து வால்பாறைக்கு வர்ற அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்க வாடகைக்கு வீடு கிடைக்காம அலைமோதுறாங்க.
இங்கிருக்கற சிலர், வீட்டு உரிமையாளர்க கிட்ட வலுக்கட்டாயமாக வீடுகள வாங்கி காட்டேஜ்களா மாத்தி பணம் சம்பாதிக்கறாங்க. யானைகளோட வழித்தடத்துல 'ரிசார்ட்' கட்டியிருக்காங்க.
தமிழ்நாடு சுற்றுலாத்துறையில விரல்விட்டு எண்ணுற அளவில் தான் தங்கும் விடுதிக்கு லைசென்ஸ் வாங்கியிருக்காங்க. இங்க இருக்கற 80 சதவீத காட்டேஜ்க்கு அனுமதியில்ல. ஆனா, சுற்றுலா பயணிக கிட்ட தாறுமாறா கட்டணம் வசூலிக்கறாங்க.
தங்கும் விடுதிகள முறைப்படுத்தவும், கட்டணம் நிர்ணயம் செய்யவும் அரசு துறை அதிகாரிக நடவடிக்கை எடுக்கணும்னு, பேசிக்கிட்டாங்க.
விளையாட்டு திறன்கள ஊக்குவிக்க பள்ளி மைதானத்த விட்டு வையுங்க பொள்ளாச்சி கல்வித்துறை அலுவலகத்துல இருந்து வந்த, உடற்கல்வி ஆசிரியரான நண்பர் ஒருவர், 'பள்ளியில விளையாட்டு மைதானங்களே இருக்காது போலிருக்குனு' பேச ஆரம்பித்தார். என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துல இருக்கற அரசு பள்ளிகள்ல, உடற்கல்வி ஆசிரியர்கள் வாயிலாக, தினமும் ஒரு மணி நேரம் உடற்கல்வி வகுப்பு நடக்குது. தடகளம், கைப்பந்து, கால்பந்து விளையாட்டு போட்டிகளும், ஒழுக்க நன்னெறியும் கற்பிக்கறாங்க.
ஆனா, பெரும்பாலான பள்ளிகள்ல விளையாட்டு மைதானங்கள் பயன்படுத்தற நிலையில இல்ல. மைதானம் முழுக்க செடி, கொடிகள் படர்ந்தும், முட்செடிகள் வளர்ந்தும் இருக்கு. விளையாட்டு மைதானங்கள புனரமைக்க வேண்டிய பள்ளிக் கல்வித்துறை, அதற்கு மாறாக கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கே முனைப்பு காட்டுகிறது.
கட்டுமான நிதியில குறிப்பிட்ட தொகை 'கமிஷன்' கிடைக்கறதால, கட்டடம் கட்டறதுக்கு பள்ளி கல்வித்துறை அதிகாரிக முனைப்பு அதீத அக்கறை செலுத்துறாங்க. இதனால, பல பள்ளிகள்ல விளையாட்டு மைதான பரப்பு சுருங்கிட்டு இருக்கு. விளையாட்டு மைதானங்கள விட்டு விட்டு, மாணவர்களோட விளையாட்டு ஆர்வத்த ஊக்குவிக்கணும்னு சொன்னாங்க.
குறை கேட்டாரு எம்.எல்.ஏ., ஆனா தீர்வு தான் கிடைக்கல சிக்கனுாத்து பிரிவுல இருக்கற தொட்டியில தண்ணீர் பிடித்து கொண்டிருந்த கிராம மக்கள் காரசாரமா பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க பேச்சை கவனிச்சேன்.
சிக்கனுாத்து, மூங்கில்தொழுவு சுற்று வட்டாரத்துல இருக்குற கிராமங்களுக்கு, எப்பதான் குடிநீர் பிரச்னை தீருமோ தெரியல. எப்ப பார்த்தாலும், பைக்கில குடத்தையும், கேனையும் வைச்சுட்டு, எங்க தண்ணீர் கிடைக்குமோனு அலைமோத வேண்டியிருக்கு.
திருமூர்த்தி டேம்ல போதுங்கற அளவுக்கு தண்ணீ இருக்குது. அப்புறம் ஏன் நம்ம பகுதிக்கு மட்டும் பற்றாக்குறையாகவே இருக்குதுனு தெரியல. யூனியன் ஆபீசுல சொல்லியாச்சு. எம்.எல்.ஏ., கிட்டயும் புகார் பண்ணியாச்சுனு ஒருத்தரு சொன்னார்.
அதுக்கு இன்னொருத்தரு, 'எம்.எல்.ஏ., ஆபீசுக்கு போய் குடிநீர் பிரச்னைக்கு பெட்டிஷன் கொடுத்தீங்களானு,' கேட்டாரு. ஆபீசுக்கு எல்லாம் போகலீங்க, தேர்தல் நெருக்கிட்டு இருக்கறதால நம்ம உடுமலை எம்.எல்.ஏ., கிராமத்து பக்கமெல்லாம் வர்றாரு.
அவரு வரும் போது மக்களையெல்லாம் சந்திச்சு குறை கேட்கறாரு. அப்படி இந்த பக்கம் வந்தவர் கிட்ட எங்க குறைய சொன்னோம். அவரும் யார் யாருக்கோ போன் பண்ணி பேசுனாரு.
ஆனா, இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. எம்.எல்.ஏ.,வும் தேர்தல் பிரசாரத்துக்கு வந்து குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்திடும்னு சொல்லுவாரு. நாமும் தலையாட்டிட்டு நிற்போம்னு, சொல்லி முடித்தார்.

