தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரிப்போர்ட்டர் லீக்ஸ்

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்


ADDED : டிச 01, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆயில் டின் அப்புறப்படுத்தல போலீஸ் தலையிட்டா நல்லது நெகமம் பஸ் ஸ்டாண்டுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். ஆண்டிபாளையத்துல இருக்கற விளைநிலத்தில் பழைய ஆயில் நிரம்பிய டின் வெச்சிருந்தது பத்தி நண்பர் பேச ஆரம்பித்தார். அவர் கூறியதில் இருந்து...

பழைய இன்ஜின் ஆயில் பேரல் பேரலா பல மாதங்களாக அடுக்கி வைத்திருந்திருக்காங்க. இதைப் பார்த்த பக்கத்தில் இருந்த மக்கள், அந்த ஆயில் டின்கள எடுக்கச் சொன்னாங்க. அதுக்கப்புறம் போலீசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் போச்சு அவங்களும் நேர்ல வந்து பார்த்து டின்கள எடுக்கச் சொன்னாங்க.

ஆயில் டின்னை எடுக்கறதுக்கு நிலத்தோட உரிமையாளர் லாரி, ஜே.சி.பி.,னு வரச் சொல்லி இருந்தார். வந்த லாரிய பொதுமக்கள் சிலர் போட்டோ, வீடியோ எடுத்தாங்க. இத பார்த்த லாரி டிரைவரோ, நம்மள ஏதாவது பிரச்னையில சிக்க வச்சிருவாங்களோ நினைச்சுட்டு, ஆயில் டின்ன எடுக்காம, லாரிய திருப்பிட்டு போயிட்டாரு.

அங்க இருக்கிற மக்கள்தான் டின்கள சீக்கிரமா எடுக்கணும்னு சொன்னாங்க. ஆனா, அதே மக்கள் தான் வீடியோ எடுத்து லாரிய திருப்பி விட்டுட்டாங்க. இந்த விஷயத்தை போலீசார் கையில் எடுத்தால் தான் சரியா வரும்னு சொல்லிட்டு நண்பர் கிளம்பிட்டார்.

எல்லாம் கண்துடைப்புதாங்க... மாற்றுத்திறனாளிகள் வேதனை உடுமலை நகராட்சி அலுவலகம் முன், மரத்தடியில் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சாரல் மழைக்கு ஒதுங்கியபடி, அவர்கள் பேச்சை கேட்டேன்.

தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏகப்பட்ட திட்டங்களை செயல்படுத்தியிருக்குனு பெருமையாக பேசிக்கிறாங்க. எல்லாம் கண்துடைப்புக்குதான். நேரடியா பார்த்தா நாம படற கஷ்டம் தெரியும்.

உடுமலை பழைய பஸ் ஸ்டாண்டுல, நமக்குன்னு ஒரு கழிப்பிடம் கூட இல்லை. புது பஸ் ஸ்டாண்டுல, தனியாக கழிப்பிடம் கட்டி பூட்டியே வைச்சு இருக்காங்க. இதை பத்தி நகராட்சி நிர்வாகத்துல புகார் தெரிவிச்சும் நடவடிக்கை எடுக்கல.

சரி நம்ம பிரச்னைகளை பேசறதுக்கு தான், நகராட்சி, பேரூராட்சியில, மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினரா நியமிச்சு இருக்காங்களேனு பார்த்தா, அந்த நோக்கமும் நிறைவேறுமான்னு தெரியல.

நியமன உறுப்பினருக்கு, மன்ற கூட்டத்துல தனியாக இருக்கை கூட போடறது இல்லையாம். ஏதாவது கவுன்சிலர் அப்சென்ட் ஆனா, அந்த இருக்கையில நியமன உறுப்பினர் உட்கார வேண்டியிருக்கு.

இப்படி அரசாங்கம் ஒரு மாதிரி அறிவிப்பையும், அதை செயல்படுத்தறவங்க வேற மாதிரியும் நடந்துட்டா, அப்புறம் எப்படி நம்ம கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும்னு பேசிக்கிட்டாங்க.

நகராட்சியும்... ஆறு கவுன்சிலர்களும்! வளர்ச்சி பணி முடங்கியதால் சறுக்கல் வால்பாறை நகராட்சியில தி.மு.க., கவுன்சிலர்களே, மன்றக்கூட்டத்தை புறக்கணித்து போராடுறாங்க, இந்த பிரச்னை ஓயாது போலிருக்குனு, பஸ் ஸ்டாண்டில் இருவர் பேசிக்கொண்டனர். அவர்கள் உரையாடலை கவனித்தேன்.

வால்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள, 21 வார்டுல, 19 வார்டு தி.மு.க., வசமிருக்கு. ஆனாலும், ஒவ்வொரு முறை மன்றக்கூட்டம் நடக்கும் போதும், அ.தி.மு.க., வி.சி., கவுன்சிலர்களுடன் தி.மு.க.,வை சேர்ந்த நான்கு கவுன்சிலருக இணைந்து, கூட்டத்த நடத்தவிடாம வாக்குவாதம் பண்ணுறாங்க. கூட்டத்த புறக்கணிக்கறது அவங்களோட வாடிக்கையாயிருச்சு.

அ.தி.மு.க.,வுக்கு ஒரே ஒரு கவுன்சிலரு இருந்தாலும், அவரோட தலைமையில தான் தி.மு.க., கவுன்சிலருக செயல்படுறாங்க. இதனால கடந்த ஓராண்டா நகராட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கல. இதனால, தி.மு.க., கவுன்சிலர்களே வார்டுகளுக்குள்ள போய், மக்களுக்கு பதில் சொல்ல முடியாம தவிக்கறாங்க.

சட்டசபை தேர்தல் நெருங்குது. இந்த நேரத்துல, ஆறு கவுன்சிலர்களால பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கு. இதை சாதகமாக பயன்படுத்தி அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணில தீவிரமா களமிறங்கி இருக்காங்க.

அரசு பஸ்சுல 'பவர்' காட்டும் அதிகாரி 40 நிமிஷம் காத்திருந்த பயணியர் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் நண்பரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அவர், ஒரு அதிகாரிக்காக, 40 நிமிஷம் தாமதமாக பஸ் இயக்கியிருக்காங்கனு சொன்னார். எந்த அதிகாரினு விசாரிச்சேன்.

பொள்ளாச்சியில இருந்து ராவணாபுரத்துக்கு தினமும் ராத்திரி, 10:10 மணிக்கு அரசு பஸ் கிளம்புது. இந்த பஸ் கடந்த ஒரு வாரத்துக்கு முன், கிளம்பும் நேரமாகியும் கிளம்பல. பஸ்சுல இருந்த கர்ப்பிணி ஒருவர், ஒரே இடத்தில் அமரவும் முடியாமல் எழுந்து நிற்கவும் முடியாம சிரமப்பட்டாங்க.

இதை பார்த்த பயணியர், 'யாருக்காக பஸ்ச நிறுத்தியிருக்கீங்க. எவ்வளவு நேரம் காத்திருக்கணும். மாசமா இருக்கற பொண்ணு கஷ்டப்படுறாங்கனு,' சப்தம் போட்டாங்க. அரை மணி நேரம் கழிச்சு, போக்குவரத்து கழக பெண் அதிகாரி ஒருத்தர் வந்ததும் பஸ் கிளம்புச்சு. கஞ்சம்பட்டி அருகே அந்த அதிகாரிய இறக்கி விடாங்க. கோவையில இருந்து வரும் அவருக்காக அரசு பஸ் பயணியரோடு காத்திருந்தது. இதனால, பயணியர் எல்லாரும் டென்ஷன் ஆயிட்டாங்க.

ஒரு அதிகாரிக்காக இனி மேல் பஸ்சை நிறுத்தி வச்சாங்கனா, பஸ்சுக்கு முன்னாடி உட்கார்ந்துருவோம்னு, வழித்தட கிராமத்து பயணிக எல்லாரும் எச்சரிச்சிருக்காங்களாம். இது பஸ் போக்குவரத்து கழகத்துல பேசு பொருளா மாறியிருக்கு.

போக்குவரத்து கழக அதிகாரி 'பவர்' காட்டுறத, போலீஸ் உளவு பிரிவு அரசுக்கு தெரிவிச்சா இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்னு, விஷயத்த சொன்னாரு.

ஆசிரியர் தேர்வுக்கு கோல்மால் குறுக்குவழிய கையாண்டதால் அதிருப்தி பொள்ளாச்சியில ஓய்வு பெற்ற ஆசிரியர் நண்பரை சந்தித்தேன். தேர்வு எழுதறதுக்கே கோல்மால் பண்ணுறாங்கனு பேச ஆரம்பித்தார். அவர் சொன்னதில் இருந்து...

சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்து முடிஞ்சிருக்கு. இந்த தேர்வை ஆசிரியர் கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவியர் பலர் எழுதியிருக்காங்க. இந்த தேர்வு எழுதுவதற்கு முன்னாடி, அரசு பள்ளிகள்ல, 80 நாட்கள் பாடம் நடத்தியதற்கான பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்கணும்.

கல்லுாரியில படிக்கற பலரும் அரசு பள்ளிக்கு தினமும் சென்று பயிற்சியில ஈடுபட்டாலும், சிலர் குறுக்கு வழிய பயன்படுத்தி பயிற்சி சான்றிதழ் வாங்கியிருக்காங்க.

'கவனிப்பு'க்கு ஆசைப்படும் சில பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்டறிந்து, பயிற்சிக்கு செல்லாமலேயே சான்றிதழ் வாங்கியிருக்காங்க. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துல இது போன்று சான்றிதழ் பெற்றவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியிருக்காங்க. இதெல்லாம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியும். ஆனா, எதுவும் தெரியாத மாதிரியே இருக்காங்க.

இந்த விஷயத்துல, உயர் அதிகாரிக தலையிட்டு சான்றிதழ்களை ஆய்வுக்கு உட்படுத்தி பள்ளிகள்ல விசாரிக்கணும், பயிற்சிக்கு போகாமலேயே, பயிற்சி சான்றிதழ் வாங்கியிருக்கறவங்க தேர்வுல இருந்து நீக்கணும்னு, நேர்மையா தேர்வு எழுதினவங்க கோரிக்கை வச்சிருக்காங்க. இது சாத்தியமானு பொருத்திருந்திருந்து பார்ப்போம்னு சொன்னாங்க.

துாய்மை பணியாளர்களுக்கு உணவு கொடுக்கறதுல தில்லாலங்கடி

உடுமலை பஸ் ஸ்டாண்டுல, சமூக சேவையில ஈடுபடுற நண்பரை சந்தித்தேன். துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விஷயத்துல அதிகாரிக விளையாடுறாங்கனு பேச ஆரம்பித்தார். என்ன நடந்ததுனு விசாரிச்சேன். உடுமலை நகராட்சியில, 241 துாய்மை பணியாளர்கள் பணியில இருக்காங்க. அவங்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்த அரசு அறிவிச்சிருக்கு. அதன்படி, அவங்களுக்கு உணவு வழங்க, நகராட்சி பொது நிதியிலிருந்து, 1.46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கறாங்க. உணவு வழங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டதுல, நாலு நிறுவனங்கள் பங்கேற்றன. அதுல, மூனு நிறுவனங்கள் தொழில்நுட்ப தகுதி பெறவில்லைனு நீக்கப்பட்டது. இதில், மதிப்பீட்டை விட, 6.13 சதவீதம் அதிகம் விலை நிர்ணயித்த, கோவையை சேர்ந்த நிறுவனத்திடம், விலை குறைக்க அறிவுறுத்தி, மதிப்பீட்டு தொகையை விட, 1.11 சதவீதம் குறைத்து, ஒப்பந்தம் வழங்கியிருக்காங்க. இது குறித்த தீர்மானம் வந்த போது, கவுன்சிலர்கள் தரப்பில், உள்ளூரில் நிறுவனங்கள் இருக்கும் நிலையில், கோவை நிறுவனத்த தேர்வு செய்திருக்கீங்க. தினமும் கோவையில் உணவு சமைத்து, உடுமலைக்கு கொண்டு வருகிறார்களா. ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தொகை நிர்ணயித்திருக்கீங்க. நிறுவனத்தின் கட்டமைப்பை எந்த அதிகாரி ஆய்வு செய்தீங்கனு, பல கேள்விகள் எழுப்பியும் மழுப்பலான பதிலையே அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. இதனால, துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துல ஏ தோ தில்லாலங்கடி இருக்குதுன்னு தெரியுது. உணவு தரமாகவும், சுவையாவும், உடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் கொடுக்கணும்னு, கவுன்சிலருக சொல்லியிருக்காங்க. திட்டம் எப்படி செயல்படும்னு போகப்போகத்தான் தெரியும்னு, சொன்னாங்க.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us