ADDED : டிச 08, 2025 05:38 AM
ஆபீஸ்ல அரட்டை அடிக்கறாங்கவழித்தடத்துல பஸ் ஓட்ட ஆளில்ல பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுல, ஆளும்கட்சி தவிர பிற கட்சியை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்கள், ஆளும்கட்சி தொழிற்சங்கத்துக்காரங்கள பத்தி அதிருப்தியா பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன விஷயம்னு விசாரிச்சேன்.
பொள்ளாச்சியில இருக்கற அரசு போக்குவரத்துக்கழக மூன்று பணிமனைகளிலும், போக்குவரத்து கட்டுப்பாட்டாளர், வசூல், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பிரிவுல, அலுவலர் பணியிடங்கள் காலியாகவே இருக்கு.
அதனால, ஆளும்கட்சியைச் சேர்ந்த கண்டக்டர்கள், டிரைவர்கள் இதற்கான பணியில ஈடுபட்டிருக்காங்க. அவங்க அலுவலகத்திலேயே இருந்துட்டு, அந்த பணிய மேற்கொள்ள ஆர்வம் காட்டுறாங்க.
பஸ் ஓட்டாம, ஆபீஸ்லேயே ஜாலியா உட்கார்ந்துட்டு அரட்டை அடிக்கறாங்க. இதனால, பஸ் இயக்க டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை ஏற்படுது.
ஆளும்கட்சி தொழிற்சங்கத்தினர் இயக்க வேண்டிய பஸ்கள, உரிய வழித்தடங்களில் இயக்க முடியாத நிலையும் ஏற்படுது. காலியா இருக்கற பணியிடங்கள நிரப்பினா தான், பஸ்களை முறையாக இயக்க முடியும்னு சொன்னாங்க.
கூட்டம் நடக்கறதுக்கு முன்னாடியேகவுன்சிலர்கள வசப்படுத்திய கமிஷனர் வால்பாறை நகராட்சியில் இந்த முறை நடந்த மன்றக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் அமைதியாகிட்டாங்களாமே... என டீக்கடையில் இரண்டு இளைஞர்கள் பேசிக்கொண்டனர். அவங்க உரையாடலில் இருந்து...
வால்பாறை நகராட்சியில கடந்த சில மாசங்களாவே தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மோதலால் மன்றக்கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றல. கூட்டம் துவங்கியதுமே தலைவருக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக கவுன்சிலருக குரல் எழுப்புவதோடு, கூட்டத்தை நடத்த விடாமல் வாக்குவாதம் செய்வதிலேயே குறியாக இருந்தாங்க.
இப்ப, கமிஷனர் முன்னிலையில நடந்த கூட்டத்துல, கவுன்சிலர்கள் அமைதியா இருந்தாங்க. கூட்டம் நடக்கறதுக்கு முன்னாடியே, கவுன்சிலர்கள அழைத்து கமிஷனர் பேசியிருக்காரு. 'உங்களோட கோரிக்கை என்னன்னு சொல்லுங்க. ஒவ்வொரு பிரச்னையா சரி பண்ணலாம். கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றினா தான் வளர்ச்சி பணிகள் நடக்கும்னு' வகுப்பு நடத்தியிருக்காரு.
இதனால, இந்த முறை மன்றக்கூட்டம் அமைதியா நடந்திருக்கு. கவுன்சிலர்களின் கேள்விகளுக்கும் கமிஷனர் பதில் கூறி, அனைத்து தீர்மானங்களும் பாஸ் பண்ணிட்டாரு. பேச்சு திறமையால கவுன்சிலர்கள கமிஷனர் வசப்படுத்திட்டாருனு, பேசிக்கிட்டாங்க.
விவசாயிக பேசினா ரெஸ்பான்ஸ் இல்லபி.ஏ.பி., அதிகாரிக பண்ணுறது சரியில்ல பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், பி.ஏ.பி., பாசன விவசாயி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.
பி.ஏ.பி. திட்டத்துல அதிகாரிங்க எதுக்கு இருக்காங்கன்னு தெரியலிங்க. எப்ப தண்ணீர் விடுவாங்கனு கேட்க போன் பண்ணாலும், பொறுப்புல இருக்குற இரண்டு அதிகாரிகளும் போன் எடுக்கறதே இல்லீங்க. எப்ப பார்த்தாலும், பிசியா இருக்குற மாதிரியே காட்டிக்கறாங்க.
அப்புறம், பொள்ளாச்சியில இருக்கற அந்த அதிகாரிய சந்தித்து மனு கொடுத்தாலும், உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கறோம்னு, ரெடிமேடா ஒரு பதில் வச்சிருக்காருங்க. அவர் முடிவு எடுக்க கூடிய விஷயத்துக்கு கூட அதே பதில சொல்லி நழுவுறாருங்க.
சரி, தலைமை பொறியாளருகிட்ட பேசலாம்னு போன் பண்ணினா, அவரும் போன எடுத்து பேசறதே இல்லீங்க. தப்பித்தவறி போன் எடுத்து பேசினாலும், கீழ்நிலையில இருக்கற அதிகாரிக கிட்ட பேசுங்கனு சொல்லிட்டு, 'கட்' பண்ணுறாரு.
இப்படியே போனா, விவசாயிக நிலைமை என்னாகும்னு தெரியலீங்க. ஏற்கனவே, துறையில என்ன நடக்குனு விவசாயிகளுக்கு தெரியப்படுத்தறதில்ல. உயர் அதிகாரிங்க இப்படி இருந்தா என்ன செய்யறதுனு தெரியலைங்க.
முதல்வர கூட சந்தித்து பேசிடலாம் போலிக்கு. இங்க இருக்கற பி.ஏ.பி., அதிகாரிக கிட்ட பேச முடியலங்கறது தான் கஷ்டமா இருக்குங்க. எப்படி இருந்த துறை, இப்படி ஆயிருச்சுனு, ஆதங்கப்பட்டாரு.
புது ரேஷன் கார்டுக்கு ரெண்டாயிரம்...இ-சேவை மையத்துல கேட்குறாங்க! நெகமம் பஸ் ஸ்டாண்டுல நண்பர சந்திச்சேன். அப்ப, பணம் கொடுத்தா தான் புது ரேஷன் கார்டு வாங்க முடியும் போலிருக்குனு, பேச்சை துவங்கினார்.
பொள்ளாச்சியில இருக்கிற தனியார் இ-சேவை மையத்துல, புது ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணினேன். ஆனா, ரெண்டு தடவை ரிஜெக்ட் ஆயிடுச்சு. மறுபடியும் அப்ளை பண்ணினேன்.
அப்போ, இ - சேவை மையத்துல இருக்கிற நபர், 'இப்ப எல்லாம் நிறைய பேருக்கு இப்படித்தான் ரிஜெக்ட் ஆகுது. ரேஷன் கார்டு வாங்கறது சிரமமா இருக்கு. நீங்க, ரெண்டாயிரம் ரூபா கொடுங்க. ஆபீஸ்க்கு உள்ள இருக்கற அதிகாரிங்க கிட்ட கொடுத்து வேலைய சீக்கிரம் முடிச்சு கொடுக்கறோம்னு சொல்லி, பணம் கேட்டாங்க. வேறு வழி இல்லாம அவங்க கேட்ட பணத்த கொடுத்துட்டு வந்திருக்கேன்.
அந்த பணத்த, உண்மையிலேயே அதிகாரிங்க கிட்ட கொடுக்க தான் வாங்கினாங்களா, இல்ல அதிகாரிங்க பேர் சொல்லி இ-சேவை மையத்தில் இருக்கிறவங்களே வாங்குறாங்களானு தெரியல. எப்படியோ, ஒரு வழியா ரேஷன் கார்டு வந்தா போதும்னு, பணத்த கொடுத்திருக்கேனு சொன்னாரு.
இதை கேட்டுட்டு இருந்த மற்றொரு நண்பர், எல்லாமே ஆன்லைன்னு சொல்லுறாங்க. அதெல்லாம் சும்மாவா. இதையெல்லாம் மாவட்ட கலெக்டர் கண்காணிச்சு சரிபண்ணணும்னு சொன்னாரு.
செக்போஸ்ட்டுக்கு பூட்டு போட்டாச்சுபோலீசாருக்கு யாரு பூட்டு போட்டாங்க தேவனுார்புதுாருல இருக்கற நண்பரை சந்திக்க போயிருந்தேன். 'இனிமேல் நாங்களும் செக்போஸ்ட் டூட்டிக்கு போக போறோம்னு,' கோபமா பேச ஆரம்பித்தார்.
உடுமலை- - ஆனைமலை ரோட்டுல தேவனூர்புதூர் முக்கிய பகுதியா இருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்துல இருக்கற இந்த பகுதியில இருந்து, கனிம வளத்த எக்கச்சக்கமா கேரளாவுக்கு கடத்துறாங்க.
இதைத்தடுக்க சில ஆண்டுகளுக்கு முன், அந்தப்பகுதியில போலீஸ் செக்போஸ்ட் அமைச்சாங்க. செக்போஸ்டுக்கு தற்காலிக பந்தலில் இருந்து, நிரந்தர கட்டடமும் கட்டினாங்க. தளி போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டாங்க.
ஆனா, கடந்த ஓராண்டாக செக்போஸ்ட் செயல்பாட்டுல இல்ல. பல முறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்ல. இதனால, ராத்திரி நேரத்துல, இந்த வழியாக கனிம வளத்த அளவுக்கு அதிகமா கடத்துறாங்க.
அதே மாதிரி, ரேஷன் அரிசியும் லோடு லோடா கடத்துறாங்க. செக்போஸ்ட் இல்லாததால நிறைய குற்ற சம்பவங்களும் நடக்குது. இந்த செக்போஸ்ட் திறக்காம இருக்கறதுக்கு பின்னணியில யார் இருக்காங்கனு கேள்விக்குறியாக இருக்கு.
ரெண்டு மாவட்ட எல்லையில இருக்கற செக்போஸ்ட்ட போலீசார் திறக்காவிட்டால், ராத்திரி நேரத்துல தன்னார்வலர்களே கண்காணிப்புல ஈடுபட முடிவு பண்ணியிருக்காங்கனு, சொன்னார்.

