ADDED : ஜன 12, 2026 06:44 AM
ரூ.20 கோடிக்கு நடக்குது வளர்ச்சி பணி அதிகாரிகள், கவுன்சிலருக்கு 'வளர்ச்சி' வால்பாறை நகராட்சியில் எலக்சனுக்கு முன்னாடியே ஆளும்கட்சிக்காரங்க, கலெக்சனை துவங்கிட்டாங்கனு, டீ கடையில் இளைஞர்கள் பேசிக்கொண்டனர். அவங்க உரையாடலை கவனித்தேன்.
வால்பாறை நகராட்சியில நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் இடையே நடக்கற பனிப்போரால வளர்ச்சிப்பணிகள கிடப்புல் போட்டியிருக்காங்க. புதுசா வந்த கமிஷனர் , கவுன்சிலர்கள 'சரிகட்டி' மன்றக்கூட்டத்தை அமைதியா நடத்திட்டாரு.
இந்நிலையில, கிடப்புல போடப்பட்டிருந்த அனைத்து வளர்ச்சி பணிகளையும் எலக்சனுக்கு முன்னாடியே முடிக்க வேண்டும் என மேலிடம் உத்தரவு போட்டிருக்கு. இதை சாதமாக்கி கொண்ட நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்களுக்கு கொடுக்க வேண்டியதை 'கொடுத்து', கட்சி மேலிடத்துக்கும் தேர்தலுக்கு தனியாக 'கவனிக்க' முடிவு பண்ணிட்டாங்க.
இதுக்காக, மேலிடம் வரைக்கும் எல்லாரையும் சரிகட்டிட்டாங்க. இப்போதைக்கு, 20 கோடி ரூபாய்க்கான வளர்ச்சி பணிகள் நடக்குது. இதுல, சில பணிகள் டெண்டர் விடாமலேயே நடக்குது. தேர்தல் தேதி அறிவிக்கறதுக்குள்ள வளர்ச்சி பணிகள்ல 'வளர்ச்சி' பார்க்கணும்னு திட்டமிட்டு வேலை செய்யறாங்க. எது எப்படியோ எலக்சனுக்கு முன்னாடி அதிகாரிகள் கலெக்சன் பண்ணுறாங்க. கவுன்சிலர்கள் பாக்கெட்டும் நிரம்புதுனு பேசிக்கிட்டாங்க.
கூட்டத்துக்கு ஆள் சேர்க்கும் ஆளும்கட்சி செலவு கணக்கு எழுத முடியாம திணறல் உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து, மிகவும் குழப்பத்துடன் ஊராட்சி செயலர்கள் வெளியேறினர். என்ன பிரச்னைனு விசாரித்தேன்.
உடுமலை ஒன்றிய பகுதியில, ஆளும்கட்சியினர் தினமும் ஓட்டுச்சாவடி வாரியாக, தெருமுனை பிரசார கூட்டம் நடத்தறாங்க. அந்த கூட்டத்துக்கு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள அனுப்பி வைக்கணும்னு, ஊராட்சி செயலர்களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருக்காங்க. அதுக்கு, போக்குவரத்து, டீ, டிபன் செலவுகள் ஊராட்சி செயலர்கள் தலையில் விழுகிறது.
அதே போல், இரு வாரத்துக்கு முன், மத்திய அரசின் சட்ட திருத்தத்திற்கு எதிரா, ஒன்றிய அலுவலகம் முன், தி.மு.க.,சார்பில் போராட்டம் நடந்தது. இதற்கும், நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள, ஊராட்சி வாரியாக போராட்டம் நடக்கும் இடங்களுக்கு அனுப்பினோம். போக்குவரத்து வாகன வாடகை, சாப்பாடு செலவுகள ஊராட்சி செயலர்களே செலுத்தினோம்.
ஏற்கனவே, நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் இருக்க வைக்க முடியாத நிலையில், ஆளும்கட்சியால் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருக்கு.
அரசுக்கு நிதி வீணாவதோடு, ஊராட்சி செயலர்களும் கணக்கு எழுத முடியாம தடுமாறுறோம். ஒன்றிய அதிகாரிகள் எதற்கெடுத்தாலும் தலையாட்டுவதே இதுக்கெல்லாம் காரணம் என, நொந்து கொண்டனர்.
எஸ்.ஐ.ஆர்., முகாமுக்கு கூப்பிட்டோம் அவங்க திடீர் போராட்டம் நடத்திட்டாங்க பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, நண்பர், 'அவங்கள ஏன்டா கூப்பிட்டோம்னு ஆயிருச்சுனு' புலம்ப ஆரம்பித்தார். என்னாச்சுனு விசாரிச்சேன்.
பொள்ளாச்சியில, வாக்காளர் பட்டியல் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணியில, விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணிகள் நடக்குது. இதில், திருநங்கைகளுக்கு தனியாக முகாம் நடத்தி விண்ணப்பங்கள சரிபார்க்க, பொள்ளாச்சி சப்-கலெக்டர் ஆபீஸ்க்கு அவங்கள வர சொல்லி இருந்தோம்.
முகாமுக்கு வந்த திருநங்கைகள், அவங்களோட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி திடீர்னு ஆபீஸ் வளாகத்துல, தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்துல ஈடுபட்டாங்க. இதை யாருமே எதிர்பார்க்கல. அவர்களிடம் என்ன பேசியும் பலன் கிடைக்கவில்லை. சப் - கலெக்டர் வந்து பேச்சு நடத்திய பின்னரே அவங்க கலைந்து போனாங்க.
சப்-கலெக்டர் ஆபீஸ்க்கு அவங்கள கூப்பிட்டது எஸ்.ஐ.ஆர்., முகாமுக்கு. ஆனா அவங்க வந்து போராட்டம் பண்ணிட்டு போயிட்டாங்க. அவங்கள கூப்பிட்டது தலைவலியாகும் என நினைக்கலைனு, புலம்பினார்.
பொங்கல் ரொக்கப்பரிசு வழங்க வீட்டுக்கு வரவழைச்சு கோல்மால் கிணத்துக்கடவு அருகே வடசித்தூரில் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். எங்க ஊருல வீட்டுக்கு வந்து பொங்கல் பரிசு பணம் கொடுத்துட்டு போறாங்கனு, ஆதங்கத்தோட பேச ஆரம்பித்தார். என்னனு விசாரிச்சேன்.
வடசித்தூருல இருக்குற மக்களுக்கு பொங்கல் பரிசோட, மூவாயிரம் ரூபா பணமும் கொடுத்தாங்க. இந்த ஊருல இருக்குற வசதியானவங்க சிலர் பொங்கல் பரிசு பணத்த வாங்க ஆர்வம் காட்டுல. இத கவனிச்ச ஊர் முக்கிய பிரமுகர் ஒருவர், உறவினர் உதவியோட வசதியானவங்கள தன்னோட வீட்டுக்கு வர வச்சாரு.
ரேஷன் கடை ஊழியர்களையும், புளூ டூத் டிவைஸ்சை எடுத்து வரச்சொல்லி, வசதியானவங்க கைரேகைய பதிவு செய்ய சொல்லியிருக்காரு. அவங்களுக்கு கொடுக்கும் மூவாயிரம் ரூபா பணத்தை அவர் வாங்கிட்டாரு. இது மாதிரி எத்தனை பேர் பணத்த வாங்கினாருனு தெரியல.
அந்த பணத்த அவரே வச்சுக்கிட்டாரா, இல்ல எல்லாரும் பங்கு போட்டுட்டாங்களானு தெரியல. ரேஷன் கடை ஊழியருக்கும் இதுல பங்கு இருக்கானு தெரியல.
ஆக, மொத்தம் ரேஷன் கடையில் இருக்கிற புளூ டூத் டிவைஸ்ச அனுமதி இல்லாம வெளிய எடுத்துட்டு போயி தனியார் வீட்டுல வச்சு கைரேகை பதிவு பண்ணிணது தப்பு தான். இதையெல்லாம் மாவட்ட நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்குமுனு, சொன்னார்.

