ADDED : ஜன 26, 2026 05:06 AM
இ-பாஸ் நடைமுறை காத்துல பறக்குது கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிக! வால்பாறையில் கோர்ட் உத்தரவை கூட அதிகாரிகள் முறையாக அமல்படுத்துவதில்லை, என, பேக்கரியில் இருவர் பேசிக்கொண்டனர். எந்த விஷயம் என விசாரிச்சேன்.
தமிழகத்துல, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடுக்கு அடுத்தபடியா வால்பாறைக்கு தான் எல்லோரும் 'டூர்' வர்றாங்க. இப்ப, வால்பாறையில இருக்கற வனவிலங்குகள பாதுகாக்கவும், சுற்றுச்சுழலை பாதுகாக்கவும், 'டூர்' வருவோரை கட்டுப்படுத்த, சென்னை உயர்நீதி மன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது.
கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில, அதிகாரிகள் ஒரு மாதம் வரை சுற்றுலா வருவோரிடம் இ-பாஸ் முறையை கண்காணிச்சாங்க.
ஆரம்பத்துல, சுற்றுலா பயணியர் கிட்ட அதிகாரிகள் காட்டிய கெடுபிடி, கடந்த ஒரு மாசமா குறைஞ்சு போச்சு. வால்பாறைக்கு வர்றவங்க கிட்ட வனத்துறை செக்போஸ்ட்ல எதுவும் கேட்காம, நுழைவு கட்டணம் மட்டும் வசூலிச்சுட்டு அனுப்புறாங்க.
கோர்ட் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, அரசுத்துறை அதிகாரிகள் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு, சுற்றுலா வர்றவங்கள அனுமதிக்கறாங்க.
கோர்ட் உத்தரவ அமல்படுத்தாம, வனத்துறை அதிகாரிக இப்படி காற்றில் பறக்கவிட்டுட்டாங்கனு, ஆதங்கப்பட்டாங்க.
குடிநீர் இணைப்புக்கு வசூல் வேட்டைநொந்து நுாடுல்ஸாகும் கிராம மக்கள் உடுமலை, பள்ளபாளையம் நால்ரோடு பஸ் ஸ்டாப்பில் கிராம மக்கள் கூட்டமாக பேசிக்கொண்டிருந்தனர். அவங்க பேசியதில் இருந்து...
வீட்டுக்கு, குடிநீர் கனெக் ஷன் வாங்க என்னென்ன ரூல்ஸ் இருக்குதுன்னே தெரியல. போன வருஷம் மத்திய அரசு திட்டத்துல, கனெக் ஷன் கொடுக்கறதா சொன்னாங்க. அதுக்கும் தனியா காசு வசூலிச்சாங்க.
இப்ப மெயின் லைன் பதிக்க, நாலஞ்சு வீட்டுக்காரங்க சேர்ந்து, செலவை ேஷர் பண்ண சொல்றாங்க. அது போக, ஒவ்வொரு வீட்டுக்கும் தனியா ஒரு தொகைய ஊராட்சிக்கு கட்டணுமாம்.
இப்படியே எத்தனை காசுதான் கட்டறதுன்னு தெரியல. நொந்து போன நம்மூரை சேர்ந்த ஒருத்தரு யூனியன் ஆபிசுக்கு போய், மெயின் லைன் பதிக்கறதுக்கு எல்லாம் எங்க கிட்ட காசு கேட்டா நாங்க என்ன பண்ண முடியும்.
ஏற்கனவே, வீதியில இருந்து குறிப்பிட்ட துாரத்துக்கு பைப் பதிக்க நாங்கதான் செலவு பண்றோம். குடிநீர் வினியோகத்துக்கு அரசு நிதி ஒதுக்குதா இல்லையானு கேட்டிருக்காரு. அதுக்கு ஆபிசருங்க, உங்க ஊருக்கு, குடிநீர் பைப் பதிக்க சமீபத்திலதான் நிதி ஒதுக்கியிருக்கிறோம்.
அப்புறம் எதுக்கு ஊராட்சிகாரங்க உங்க கிட்ட எக்ஸ்ட்ரா பணம் கேட்கறாங்கனு புகார் தெரிவிச்சவரை திருப்பி கேட்டிருக்காங்க. குழம்பி போய் அவர் திரும்ப வந்துட்டாரு.
எப்படியோ குடிநீர் இணைப்பு வழங்கறதுல நம்ம ஒன்றியத்துல பல இடத்துல இப்பிரச்னை இருக்குது. இணைப்பு கொடுக்கறதுக்குள்ள ஒரு சுருட்டு சுருட்ட போறாங்கனு பேசிக்கிட்டாங்க.
கணக்கு காட்ட காட்டு பன்றிய சுட்டாங்கதேர்தல் நேரத்துல புருடா விடப்போறாங்க கோதவாடி கிராமத்திற்கு நண்பரை சந்திக்கச்சென்றிருந்தேன். காட்டு பன்றிக பெருகிட்டதால விவசாயமே பண்ண முடியலனு, புலம்பினார். அவர் கூறியதில் இருந்து...
கோதவாடி ஏரியாவுல காட்டுப்பன்றி தொல்லை அதிகமாயிருச்சு. பல தடவை மனு கொடுத்தோம். ஒரு வழியா காட்டுப் பன்றிய சுட்டு பிடிக்க உத்தரவு போட்டாங்க. அதுக்கப்புறம் வனத்துறையினரும் வந்தாங்க. பேருக்கு, நாலு பன்றியை சுட்டுட்டு போனாங்க.
அதுலயும், 4 பன்றியில, ஒன்னு பெண் பன்றி. அதைக்கூட முறையா கவனிக்காம, சுட்டது நாலும் ஆண் பன்றினு ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. அதுக்கப்புறம் பாரஸ்ட்காரங்களையே காணோம். இப்போ பழையபடி காட்டுப்பன்றிக, பயிர்கள சேதப்படுத்திட்டு இருக்கு.
கடமைக்காக வந்து பேருக்கு நாலு காட்டுப்பன்றிக சுட்டுட்டாங்க. ஆனா இந்த ஏரியாவுல இன்னும், 40க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிக சுத்திக்கிட்டு இருக்கு. இதையெல்லாம் எப்ப சுட்டு பிடிக்க போறாங்கனு தெரியல.
விவசாயிகளோட வாயை அடைக்க காட்டுப்பன்றிகள சுட்டுக்கொள்ள உத்தரவு போட்டாங்க. பாரஸ்ட்காரங்களும் சுட்டதா கணக்கு காட்டிட்டாங்க. ஆனா, மொதல்ல இருந்த விட காட்டுப்பன்றி பிரச்னை இப்ப அதிகமாயிச்சு. தேர்தல் நேரத்துல விவசாயிக கிட்ட பிரச்னைய சமாளிக்க என்ன புருடா விடப்போறாங்கனு தெரியலைனு சொன்னார்.
சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க...மக்கள குளிர்விக்க போட்டி போடுறாங்க பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன். தேர்தல் நெருங்க, நெருங்க மக்கள் காட்டுல பரிசு மழை கொட்டுதுனு தகவலோட பேச ஆரம்பித்தார்.
நம்ம ஊருல, தேர்தல் வந்துட்டா, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளுக்கு மக்கள் மீது அக்கறை வந்துரும். என்ன செய்யுறோம்னு தெரியாம, மக்களுக்கு ஆளாளுக்கு பரிசுகள அள்ளி கொடுத்து, மக்கள் மனசை குளிர்விக்கறாங்க.
தி.மு.க.,காரங்க, திராவிட பொங்கல் விழா நடத்துனாங்க. அதில், பல்வேறு போட்டிகள் நடத்தி மக்களுக்கு கைநிறைய பரிசு பொருட்கள் வழங்கினாங்க. மேலும், பொங்கல் பானை, பொங்கல் சீர் கொடுத்து அசத்தினாங்க.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தி.மு.க., வினர் திராவிட பொங்கல் விழா நடத்தி மக்களோடு ஐக்கியமாகற மாதிரி நடந்துக்கிட்டாங்க.
அ.தி.மு.க.,காரங்களும், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவில், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வாரி வழங்கியிருக்காங்க. எப்பவும் போல இல்லாமல், நகரம், கிராமங்களில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடி, வேட்டி, சேலை, சில்வர் பாத்திரங்கள் கொடுத்து அசத்திட்டாங்க. தேர்தல் நெருங்க, நெருங்க மக்களுக்கு ஜாக்பாட் அடிக்க போகுதுனு, சொன்னார்.

