/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தபால் ஓட்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்
/
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தபால் ஓட்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தபால் ஓட்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தபால் ஓட்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்
ADDED : மார் 21, 2026 06:54 AM

கோவை: 'மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் தபால் ஓட்டு அளிப்பதற்கான வசதி ஏற்படுத்த வேண்டும்' என, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. 2 தொகுதிக்கு ஒருவர் வீதம் 5 பொது பார்வையாளர்கள், 7 செலவின பார்வையாளர்கள், 1 போலீஸ் பார்வையாளர் பங்கேற்றனர்.
அரசியல் கட்சி பிரதிநிதிகள் கருத்து:
பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் அரசு: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விலை பட்டியல் அதிகமாக இருக்கிறது. 40 லட்சம் வரையே செலவிட வேண்டுமென கூறப்படுகிறது.
நிர்ணயித்துள்ள தொகையை கணக்கிட்டால், 20 கோடி ரூபாய் வரை தேவைப்படும். 1.5 கி.மீ., துாரத்துக்குள் ஒரே வாகனத்தை மூன்று முறை சோதனை செய்வதால், மக்கள் பாதிக்கின்றனர். ஓரிடத்தில் சோதனை செய்தால், அதற்கு சான்று தர வேண்டும். அதை காண்பித்தால், அதே வழித்தடத்தில் மீண்டும் சோதனை செய்வதை தவிர்க்க வேண்டும்.
அ.தி.மு.க., வக்கீல் அணி மாநில இணை செயலாளர் சோமசுந்தரம்: 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியல் தர வேண்டும். மருத்துவ செலவுக்கு எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக் கூடாது.
மருத்துவமனையில் உள்நோயாளியாக ஏராளமானோர் சிகிச்சை பெறுகின்றனர். அவர்கள் தபால் ஓட்டு போட வாய்ப்பு அளிக்க வேண்டும்.
தி.மு.க., ஐ.டி., விங் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார்: ஓட்டுச்சாவடி அருகே வாக்காளர்களுக்காக உதவி மையம் அமைக்கப்படும். அது, வேட்பாளரின் தேர்தல் செலவில் வருமென கூறியுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் டேபிள், சேர், பந்தல் போட்டு கட்சியினர் அமர்வர். டீ, சாப்பாடு செலவு செய்வர். இதற்கு பெருந்தொகை செலவாகும்.
மா.கம்யூ., கவுன்சில் குழு தலைவர் ராமமூர்த்தி: அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்று ஓட்டு சேகரிக்க அனுமதிப்பதில்லை என்பது ஜனநாயக கடமையை மறுப்பதற்கு சமம். தடுக்கக் கூடாதென அறிவுறுத்த வேண்டும்.
காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் கார்த்தி: மருத்துவ செலவு, திருமண விழாக்களுகக்கு பயன்படுத்த எடுத்துச் செல்லும் தொகையை பறிமுதல் செய்கின்றனர்.
பெட்ரோல் பங்க், வணிகர்கள் வியாபாரம் முடித்து செல்லும்போது கைப்பற்றுகின்றனர். உடனுக்குடன் பரிசீலித்து விரைந்து விடுவிக்க வேண்டும்.
தே.மு.தி.க., மாநகர் மாவட்ட செயலாளர் சந்துரு: அடுக்குமாடி குடியிருப்புக்குள் குறிப்பிட்ட நாள், நேரம் செல்வதற்கு அனைத்து கட்சிக்கும் நேரம் ஒதுக்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கட்சியினர் கூறினர்.

