ADDED : ஜன 27, 2025 12:48 AM

கோவை; கோவை, வேளாண் பல்கலையில், 76வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. துணைவேந்தர், கவுரவ கர்னல் கீதாலட்சுமி தேசியக்கொடியேற்றி பேசுகையில், பொற்கால இந்தியா: பாரம்பரியமும் முன்னேற்றமும் என்ற குடியரசு தின கருப்பொருள் குறித்து விளக்கினார். மேலும், அவற்றில், 17 நிலையான வளர்ச்சியின் இலக்குகளை அடைவதை வேளாண் பல்கலையின் பங்களிப்பை விவரித்தார்.
பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன், டீன்கள், இயக்குநர்கள், பேராசிரியர்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்ட அலுவலகத்தில், 76வது, குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட காங்., தலைவர் வக்கீல் கருப்புசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
கட்சி அலுவலகத்தில் இருந்து தொண்டர்கள் அரசு கலைக் கல்லுாரி ரோடு வழியாக குடியரசு தின பாதயாத்திரை சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவகுமார், கவுன்சிலர் சரளவசந்த் போஸ், தமிழ்ச்செல்வன், குறிச்சி வசந்த், காந்த் குமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு, உணவு, ஆடைகள் வழங்கப்பட்டன.
கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்கம், சென்ட்ரல் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கம் சார்பில், காந்திமாநகரில் உள்ள, சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில், குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
சென்ட்ரல் வங்கியின் மண்டல மேலாளர் ஜோதி பிரகாசம் தலைமை வகித்தார். வங்கியின் முதன்மை மேலாளர் பொன்ராஜ், தேசியக்கொடியேற்றி, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பேசினார்.
குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காலை உணவு மற்றும் மதியம் அசைவ உணவு, ஆடைகள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. சென்ட்ரல் வங்கியின் அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் நித்யா, கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் சையது இப்ராஹிம் உட்பட, 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோவை, போத்தனுார், நஞ்சுண்டாபுரம் சாலையிலுள்ள அம்மன் நகரில், குடியிருப்போர்நல சங்கம் சார்பில் நடந்த குடியரசு தின விழாவில், சங்க நிர்வாக செயலாளர் நடராஜ் தேசிய கொடியேற்றினார். தலைவர் மணிலால்காந்தி மற்றும் குடியிருப்போர் பங்கேற்றனர்.
எஸ் அண்ட் டி ரயில்வே தொழிற்சாலையில் நடந்த விழாவில் பணிமனை முதன்மை மேலாளர் பாபு தேசிய கொடியேற்றினார். தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத்தில் நடந்த விழாவில் செயலாளர் ஜெபசிங் பிரசாத் கொடியேற்றினார். உதவி பொது செயலாளர் (சென்னை) மணிலால் காந்தி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளர் சங்கம், கடை வீதி வியாபாரிகள் நல சங்கம் ஆகியவற்றின் சார்பிலும் தேசிய கொடியேற்றப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது.
கோவை, சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்று, தேசியக் கொடியேற்றினார். பள்ளி தலைமையாசிரியர் (பொ) சாந்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றார்.
கோவை கவுலிபிரவுன் ரோட்டில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில் கோவை மாவட்ட நுாலக அலுவலர் ராஜேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மூன்றாம் நிலை நுாலகர் பாக்யலட்சுமி மாவட்ட நுாலகப் பணியாளர்கள் மற்றும் வாசகர்கள் பங்கேற்றனர்.

