/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரிகளில் குடியரசு தினவிழா
/
கல்லுாரிகளில் குடியரசு தினவிழா
ADDED : ஜன 27, 2025 12:47 AM

கோவை; குடியரசு தினம் பல்வேறு கல்லுாரிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கோவை பாரதியார் பல்கலையில் நடந்த குடியரசு தினவிழாவில் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் லவ்லீனா லிட்டில் பிளவர் பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
* கோவை அவினாசிலிங்கம் பல்கலையில், நடந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா பேசுகையில்,''2021 ல் பெண் கல்வியில், நாடு, 91.95 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு. எதிர்காலத்தை கட்டமைக்கும் பொறுப்பு இன்றைய மாணவியருக்கு உள்ளது,'' என்றார்.
மாணவியரின் அணிவகுப்பு மரியாதை, உடற்பயிற்சி உள்ளிட்டவை நடந்தன. பல்கலை வேந்தர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்த குடியரசு தினவிழாவில், கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார்.2 தமிழ்நாடு விமானப்படை தேசிய மாணவர் படை கமாண்டிங் அலுவலர் பர்குணன் பேசுகையில்,''இன்றைய இளைஞர்களிடம் உடற்தகுதி மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதற்கு மொபைல்போன் பயன்பாடு முக்கியக் காரணம். தினமும் நேரம் ஒதுக்கி நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி செய்ய வேண்டும். மாணவர்கள் தொடர் கற்றல் மட்டுமல்லாது, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும்,'' என்றார்.
டில்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேசிய மாணவர் படை அலுவலர் விவேக், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* பீளமேடு சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி, மேலாண்மை கல்லுாரியில் நடந்த குடியரசு தினவிழாவில், கல்லுாரி இயக்குனர் அல்லிராணி தலைமை வகித்து பேசுகையில்,''உலகின் மிக நீண்ட காலமாக உள்ள ஜனநாயக நாடாக இருப்பது நம் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விசயம். ஒவ்வொரு குடிமகனும் அரசியலமைப்பை நன்கு அறிந்திருக்க வேண்டும்,'' என்றார்.விழாவில், மாணவர் உரை, தடகளப் போட்டிகள், வினாடி-வினா, கட்டுரை எழுதுதல், பேச்சுப்போட்டி, பேனர் தயாரிப்பு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

