/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ ஆரோக்கிய மையத்துக்கு கூடுதல் டாக்டர் கேட்டு கோரிக்கை
/
மருத்துவ ஆரோக்கிய மையத்துக்கு கூடுதல் டாக்டர் கேட்டு கோரிக்கை
மருத்துவ ஆரோக்கிய மையத்துக்கு கூடுதல் டாக்டர் கேட்டு கோரிக்கை
மருத்துவ ஆரோக்கிய மையத்துக்கு கூடுதல் டாக்டர் கேட்டு கோரிக்கை
ADDED : ஜூலை 06, 2025 11:49 PM
கோவை; கோவை ஸ்டேட் பாங்க் ரோட்டில், பி.எஸ்.என்.எல்., அலுவலக வளாகத்தில் மருத்துவ ஆரோக்கிய மையம் உள்ளது.
இங்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் பெற, கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களும், பாலக்காட்டில் இருந்தும் பயனாளிகள் வருகின்றனர்.
இம்மாவட்டங்களை சேர்ந்த, 8,000த்துக்கு மேற்பட்டோர் பயனாளிகளாக உள்ளனர். இதற்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
மையத்தில், இரண்டு டாக்டர்கள், ஒரு மருந்தாளுனர் ஆகியோர் உள்ளனர். காலை 7:30 முதல் 2:00 மணி வரை மட்டுமே நடத்தப்படும் இம்மையத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நுாற்றுக்கணக்கானோருக்கு, மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
கோவையில், இரு பொது மருத்துவமனைகள் மற்றும் ஒரு கண் மருத்துவமனை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
மையத்தில் உள்ள மருத்துவர்களின் ஆலோசனைப்படி, திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில், பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவோர், மீண்டும் ஆலோசனை பெற, ஆரோக்கிய மையத்துக்கு வர வேண்டியுள்ளது.
மதியம் 2:00 மணிக்கு பின் வருவோர், மருத்துவர்களை சந்திக்க முடியாமல், மற்றொரு நாள் வர வேண்டியுள்ளது.
சில மருந்து, மாத்திரைகள் கிடைக்காத சூழலில், இங்கிருக்கும், அகில இந்திய பி.எஸ்.என்.எல்., பென்ஷன் நலச்சங்கத்தினர் வாங்கி, பயனாளிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
இது குறித்து, கோவை மண்டலத்தை சேர்ந்த உள்ளூர் ஆலோசனை குழு உறுப்பினர் ஆறுசாமி, திட்டத்தின் உதவி இயக்குனர் கோகிலாவுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், பல்வேறு இடங்களில் இருந்து வருவோருக்கு வசதியாக, கூடுதல் மருத்துவர், மருந்தாளுனர்கள் இருவர், பன்முகப் பணியாளர்கள் இருவர் என நியமிக்க வேண்டும்.
ரத்த அழுத்தம்மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனைக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்' என கேட்டுள்ளார்.
இதுகுறித்து, துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உதவி இயக்குனர் கோகிலா உறுதியளித்துள்ளார்.