/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுக்குழிக்கு கம்பிவேலி அமைக்க வேண்டுகோள்
/
கல்லுக்குழிக்கு கம்பிவேலி அமைக்க வேண்டுகோள்
ADDED : ஆக 10, 2025 10:55 PM
கோவை, ;பயன்பாடின்றி பாதியில் விடப்பட்ட குவாரிகள் பல, கல்லுக்குழிகளாக மாறிவிட்டன. அவற்றில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இவற்றில் கால்நடைகள் தவறி விழாமல் தடுக்க, கம்பி வேலி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி, மதுக்கரை தாலுகாக்களில் 40க்கும் மேற்பட்ட குவாரிகள் உள்ளன. அனுமதியின்றி செயல்படும் குவாரிகளை வருவாய் மற்றும் கனிமவளத்துறையினர் ஆய்வு செய்து சீலிட்டு பயன் படுத்த தடை விதித்தனர்.
சிலர் கோர்ட்டிற்கும், பசுமை தீர்ப்பாயத்துக்கும் சென்று தீர்ப்பை பெற்று செயல்படுத்த துவக்கினர். ஆனால் இன்னும் பல குவாரிகள் செயல்படாத நிலையிலேயே உள்ளது.
இந்த குவாரிகளில், கனமழையின் போது மழைநீர் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. கழிவுகளும் சேகரமாகிறது. இது போன்ற குவாரிகளை கணக்கெடுத்து அவற்றை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்; தவறும் பட்சத்தில் அதில் கால்நடைகள் விழுந்து இறக்க நேரிடும் என்கிறார், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி.
அவர் கூறியதாவது:
கிணத்துக்கடவு, பொள்ளாச்சி தாலுகாக்களில் பல கல் குவாரிகள் குடியிருப்புகளுக்கு அருகேயே அமைந்துள்ளது. கற்கள் வெடித்து குடியிருப்புகளுக்குள் விழுகிறது.
இது குறித்து தொடர்ந்து புகார் தெரிவித்ததால், அது போன்ற குவாரிகளை பூட்டி சீல் வைத்தனர். அக்குவாரிகளை சுற்றி கம்பிவேலி அமைக்கப்படவில்லை. கம்பிவேலி இல்லாததால், மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகளில் பல, தவறி குவாரிகளுக்குள் விழுந்து விட்டன. அதனால், சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

