/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் நிலைகளில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை
/
நீர் நிலைகளில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை
ADDED : ஏப் 23, 2025 11:03 PM

சூலுார்,; கோடை விடுமுறை காலத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க, நீர் நிலைகளில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுத்தேர்வுகள் முடிந்து, பள்ளிகளில் மற்ற வகுப்புகளுக்கு, இறுதி தேர்வுகள் நடந்து வருகின்றன. தேர்வுகள் முடிந்தவுடன் கோடை கால விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சி பகுதிகளில் உள்ள குளங்கள், குட்டைகள், பாறைக்குழிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தேர்வுகள் முடிந்து ஒரு சில நாட்களில் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. விடுமுறை விட்ட உற்சாகத்தில், சிறுவர், சிறுமியர் பொழுது போக்க, நீர் நிலைகளை தேடி செல்வர். சூலுார் வட்டாரத்தில், கண்ணம்பாளையம், பள்ளபாளையம், சூலுார், நீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குளங்கள் உள்ளன. அவற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். மேலும், பாப்பம்பட்டி சுற்றுவட்டாரத்தில் பாறைக் குழிகள் உள்ளன. அவற்றில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இவற்றை தேடி, குளிக்கவும், நீச்சல் பழகவும் சிறுவர்கள் வந்து, விபத்தில் சிக்குவது அடிக்கடி நடக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், ஆறு பேர் நீர்நிலைகளில் மூழ்கி இறந்துள்ளனர். தற்போது, எந்த நீர்நிலைகளிலும் எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை.
அதனால், பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் தங்கள் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மற்றும் பாறை குழிகள் அருகில், உடனடியாக எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும். தடுப்புகள் அமைத்து கண்காணிக்க வேண்டும். அப்போதுதான், அசம்பாவித சம்பவங்களை தடுக்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

