/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெத்திக் குட்டைக்கு தண்ணீர் பம்பிங் செய்ய கோரிக்கை
/
பெத்திக் குட்டைக்கு தண்ணீர் பம்பிங் செய்ய கோரிக்கை
பெத்திக் குட்டைக்கு தண்ணீர் பம்பிங் செய்ய கோரிக்கை
பெத்திக் குட்டைக்கு தண்ணீர் பம்பிங் செய்ய கோரிக்கை
ADDED : ஜூன் 12, 2025 10:13 PM

மேட்டுப்பாளையம்; பெத்திக்குட்டை குட்டைக்கு, பவானி ஆற்று தண்ணீரை கொண்டு வர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டையில் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில், குட்டை உள்ளது. இந்த குட்டையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும். அப்போது சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு நீரூற்று கிடைக்கும். மழைக்காலத்தில் மட்டுமே இப்பகுதி விவசாயிகள், விவசாயம் செய்து வருகின்றனர். மற்ற நேரங்களில் தண்ணீர் வசதி இல்லாததால், தரிசு நிலமாக போட்டு வருகின்றனர். கிணறுகளில் தண்ணீர் இருந்தால் தொடர்ச்சியாக விவசாயம் செய்ய முடியும்.
இது குறித்து பா.ஜ., பவானி நதிநீர் பாதுகாப்பு குழுத் தலைவர் சக்திவேல் கூறியதாவது: இரும்பறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வாய்க்கால் பாசனம் இல்லை. அதனால் கிணற்றுத் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி, விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பெத்திக்குட்டையில் ஆண்டுக்கு எட்டு மாதங்களுக்கு மேல் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படும். இந்த குட்டை நிரம்பி வழிந்தால், வெளியேறும் தண்ணீர் சம்பரவள்ளி, அம்மன்புதூர், அன்னதாசம்பாளையம் வழியாக பவானி ஆற்றுக்கு செல்லும்.
அப்போது சம்பரவள்ளி, அம்மன்புதூரில் உள்ள தடுப்பணைகளும் நிரம்பும். கிணறுகளுக்கு நீரூற்றும் கிடைக்கும். தற்போது இக்குட்டையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.
பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்து, இக்குட்டையில் நிரப்பினால், சுற்றுப்பகுதியில் உள்ள, ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். எனவே தமிழக அரசு, இக்குட்டைக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.