ADDED : ஜூலை 02, 2026 04:31 AM
வால்பாறை: வால்பாறையில், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும், என, முன்னாள் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ., ஸ்ரீதரன், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறையில், அரசு புறம்போக்கு நிலங்களை சிலர் ஆக்கிரமித்து சட்ட விரோதமாக தங்கும் விடுதிகள் கட்டியுள்ளனர். தனியார் எஸ்டேட்களில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து, சுற்றுலா பயணியருக்கான தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு சொந்தமான இடத்தை, சிலர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளனர். அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கும் வகையில், அரசு புறம்போக்கு நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து, அரசு நிலங்களை மீட்க வேண்டும்.
தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை சுற்றியுள்ள இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை, மீண்டும் அளவீடு செய்து மீட்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
