ADDED : ஏப் 17, 2026 08:24 PM
வால்பாறை: நெடுஞ்சாலைத்துறை ரோடு அருகே அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை தாலுகாவில், வால்பாறை நகரில் இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளும், ரொட்டிக்கடை, சோலையாறுடேம், முடீஸ் ஆகிய இடங்களில், தலா ஒரு டாஸ்மாக் மதுக்கடையும் செயல்படுகிறது.
இந்நிலையில், ரொட்டிக்கடை பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடை நெடுஞ்சாலைத்துறை ரோடு அருகே அமைந்துள்ளதால், இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
ரொட்டிக்கடை பகுதி மக்கள் கூறுகையில், 'வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை ரோடு அருகே மதுக்கடை அமைந்துள்ளதால், மதுபாட்டில்களை வாங்கி ரோட்டோரத்திலேயே குடித்துவிட்டு வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
மேலும், மதுக்கடைக்கு மிக அருகில் கோவிலும், அரசு பள்ளியும் அமைந்துள்ளது. எனவே மதுக்கடையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
