குவிந்து கிடக்கும் கற்கள் :அப்புறப்படுத்த கோரிக்கை
குவிந்து கிடக்கும் கற்கள் :அப்புறப்படுத்த கோரிக்கை
ADDED : ஏப் 21, 2026 05:27 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் இருக்கும் கற்களை அகற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றன.
கிணத்துக்கடவு பள்ளிவாசல் வீதியில் உள்ள குடியிருப்பு பகுதி ரோடு கடந்த, 50 ஆண்டுகளாக சேதம் அடைந்துள்ளது. இதனால் இப்பகுதிக்கு செல்லும் மக்கள் அனைவரும் போலீஸ் ஸ்டேஷன் ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில், குற்ற சம்பவத்துக்கு பயன்படுத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இந்த ரோட்டோரம் நிறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகள் மீறி டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லும் கனிமவள கற்கள் இந்த ரோட்டோரம் கொட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள இடத்தில், செடிகள் முளைத்துள்ளன.
மேலும், இந்த கற்களின் இடுக்குகளில் பாம்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் இரவு நேரத்தில், இந்த வழியாக செல்லும் மக்கள் பலர் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் போலீஸ் குவாட்டர்ஸ் பகுதிகளுக்குள் அவ்வப்போது பாம்புகள் ஊர்ந்து செல்கின்றன.
ஏற்கனவே, பல முறை தீயணைப்புத் துறையினர் இப்பகுதியில் பாம்புகளை பிடித்து சென்றுள்ளனர். அதானால், இங்கு குவிக்கப்பட்டுள்ள கற்களை அகற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
