UPDATED : மே 21, 2026 07:26 PM
ADDED : மே 21, 2026 07:23 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில், ராஜபுரம் மொக்கை வழியாக, தாலுகா அலுவலகத்திற்கு செல்லும் வழியில், சாலையில் பாதி அளவுக்கு கொக்கி முள் செடிகள் வளர்ந்துள்ளன. இந்த முள் செடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தாலுக்கா அலுவலகத்திற்கும், சிறுமுகை செல்பவர்கள் பங்களா மேடு, ராஜபுரம் மொக்கை சாலை வழியாக, பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த சாலை வழியாக கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. சாலையின் தெற்கு பக்கம் கொக்கி முள் செடிகள் அதிகளவில் வளர்ந்து, பாதி அளவுக்கு மேல் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. வடக்கு பக்கம் ஆமணக்குச் செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் இரண்டு வாகனங்கள் செல்லும் சாலையில், தற்போது ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவில் உள்ளது. சாலையில் ஆட்டோ மற்றும் கார்கள் வந்தால், எதிரே வரும் வாகன ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லாத நிலை உள்ளது.
எனவே இந்த சாலையின் ஓரத்தில் வளர்ந்துள்ள கொக்கி முள் செடிகளை, நகராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
