UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:07 PM

கிணத்துக்கடவு: ஆண்டிபாளையத்தில் உள்ள சமுதாயக்கூடத்தை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கிணத்துக்கடவு, ஆண்டிபாளையம் ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஏழை எளிய மக்கள் வசதிக்காக, 15 ஆண்டுகளுக்கு முன் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. கடந்த, 2014 – 15ம் ஆண்டு, 3.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது.
அதன் பின், முறையான பராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கே மேற்கூரை சேதமடைந்தும், கட்டடத்தை சுற்றி செடி, கொடிகள் முளைத்தும் காட்சியளிக்கிறது. இதனால், மக்கள் வீட்டு விசேஷங்களை நடத்த சிரமப்படுகின்றனர். எனவே, சமுதாயக்கூடத்தை மீண்டும் சீரமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘சமுதாயக்கூடத்தை சீரமைக்க கருத்துரு தயார் செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும்,’ என்றனர்.
