/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழுதடைந்த எரிவாயு தகனக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை
/
பழுதடைந்த எரிவாயு தகனக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 30, 2025 08:44 PM

மேட்டுப்பாளையம்; பழுது அடைந்து செயல்படாமல் உள்ள, காரமடை நகராட்சி எரிவாயு தகனக்கூடத்தை, விரைவில் சீரமைத்து திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரமடை, மேட்டுப்பாளையம் ஆகிய நகராட்சிகளில் தலா ஒன்றும், சிறுமுகை பேரூராட்சியில் ஒன்றும் என, மொத்தம் மூன்று எரிவாயு தகனக்கூடங்கள் உள்ளன. இதில் காரமடை எரிவாயு தகனக்கூடத்தின் புகை போக்கியில் பல இடங்களில் ஓட்டைகள் விழுந்ததால், புகை பக்கவாட்டில் வெளியே வந்தது. மயானத்தைச் சுற்றி உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், புகை போக்கியை மாற்றும்படி கோரிக்கை விடுத்தனர்.
காரமடை நகராட்சியின் சார்பில், 25 லட்சம் ரூபாய் செலவில், சீரமைக்கும் பணிகள் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு துவங்கின.
ஆனால் சீரமைக்கும் பணிகள் செய்ய, கட்டுமான பணியாளர்கள் முன் வராததால், பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் காரமடை மற்றும் சுற்றுப்பகுதியில், இறந்தவர்களை மேட்டுப்பாளையம் நகராட்சி எரிவாயு தகனக்கூடத்தில் எரித்து வந்தனர். தற்போது மேட்டுப்பாளையம் தகன கூடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து, 20ம் தேதி முடிய மூடப்பட்டுள்ளது என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில் காரமடை, மேட்டுப்பாளையம் ஆகிய இரண்டு தகன கூடங்களும் செயல்படாமல் இருந்தால், இறந்தவர்களின் உடல்களை எரிக்க, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும்.
எனவே காரமடை நகராட்சியில் பழுதடைந்துள்ள எரிவாயு தகனக்கூடத்தை உடனடியாக சீரமைத்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து காரமடை நகராட்சி பொறியாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், காரமடையில், 100 அடி உயரத்திற்கு புதிதாக புகைப் போக்கி அமைக்கப்பட்டுள்ளது. உடல்களை எரிக்கும் இடத்தில் செங்கல் கட்டடம் கட்ட வேண்டும்.
இப்பணிகளை செய்ய ஆட்கள் முன் வராத நிலையில் உள்ளனர். விரைவில் ஆட்களை அமர்த்தி பணிகளை முடித்து எரிவாயு தகனக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.