கோவை - துாத்துக்குடி ரயிலை மீண்டும் இயக்க வேண்டுகோள்
கோவை - துாத்துக்குடி ரயிலை மீண்டும் இயக்க வேண்டுகோள்
ADDED : ஏப் 26, 2026 03:33 PM
கோவை: கோவை - துாத்துக்குடி பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்கம் சார்பில், சேலம் ரயில்வே கோட்டம் மேலாளருக்கு அனுப்பி உள்ள மனு:
கோவை துாத்துக்குடி இடையே, 149 -150 எண் கொண்ட பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணிகள் ரயில், 1928 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரயில் பாதை மீட்டர் கேஜில் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில், இந்த ரயில் சேவை பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. மீட்டர் கேஜிலிருந்து பிராட் கேஜாக மாற்றும் பணிகளுக்காக இந்தச் சேவை நிறுத்தப்பட்டது.
இப்போது இந்த ரயில் பாதை அகலப்படுத்தும் பணி நிறைவடைந்த பிறகும், இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை.
கோவை, தென் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கும் பல ஆயிரம் மாணவர்கள், வர்த்தகர்கள், புனித யாத்திரை பக்தர்கள் மற்றும் பிற பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதனால் கோவை மற்றும் தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனளித்த இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
