/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீரபாண்டியில் பாசஞ்சர் ரயில் நிறுத்தி செல்ல கோரிக்கை
/
வீரபாண்டியில் பாசஞ்சர் ரயில் நிறுத்தி செல்ல கோரிக்கை
வீரபாண்டியில் பாசஞ்சர் ரயில் நிறுத்தி செல்ல கோரிக்கை
வீரபாண்டியில் பாசஞ்சர் ரயில் நிறுத்தி செல்ல கோரிக்கை
ADDED : ஜன 29, 2024 11:04 PM

பெ.நா.பாளையம்:வீரபாண்டியில் பாசஞ்சர் ரயிலை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என, பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் உள்ள சக்தி நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, தங்கதுரை தலைமை வகித்தார். குருகுலம் இன்டர்நேஷனல் பள்ளி சேர்மன் விஜயகுமார், கூட்டுறவு துணை பதிவாளர் கணபதி சுப்பிரமணியம், மூத்த உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மற்றும் பொருளாளர் அறிக்கைகளை, நிர்வாகிகள் சிங்காரவேல், அந்தோணிசாமி ஆகியோர் சமர்ப்பித்தனர்.
நான்கு சாலைகள் சந்திக்கும் வீரபாண்டி பிரிவு சாலையில் சிக்னல் விளக்குகளை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும். ரோட்டின் இருபுறமும் பயணிகளின் வசதிக்காக, நிழல் குடை அமைக்கவும், மேட்டுப்பாளையம் - கோவை இடையிலான பாசஞ்சர் ரயிலை வீரபாண்டியில் நிறுத்த வேண்டும்.
சக்தி நகரில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம் வணிக நோக்கத்துடன் பயன்படுத்துவதை தவிர்த்து, பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் நலனுக்கான கல்வி மற்றும் யோகா பயிற்சிகள் பெற சங்க நிர்வாகத்தின் கண்காணிப்பில் அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் செந்தில் மற்றும் ராமமூர்த்தி, கோசலை, ராஜலட்சுமி, கெவின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க, மக்காத குப்பைகளை தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க சங்கத்தின் சார்பில் மக்கும், மக்காத கூடைகள் வழங்கப்பட்டன. ஜெய்சங்கர் நன்றி கூறினார்.